திருமணம்: ஆயிரம் காலத்துப் பயிரா? அல்லது காலாவதியான ஃபேஷனா?

future-of-weddings
future-of-weddings
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

ல்யாணம் என்பது தனிப்பட்ட நபர்களின் பார்வை மற்றும் சமூக மாற்றங்களைப் பொறுத்து மாறுபட்டாலும், வளரும் தொழில்நுட்பம் மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் திருமண பந்தத்தின் மீதான நம்பிக்கையில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளன என்பதுதான் உண்மை.

பல இளைஞர்கள் திருமணத்தை மிகவும் பழமைவாதமான அல்லது ஆபத்தான ஒன்றாகக் கருதி, அதிலிருந்து விலகி இருக்க விரும்புகிறார்கள். திருமணத்தில் ஏமாற்றப்பட்டு விடுவோமோ என்ற பயமும் இன்றைய இளைஞர்கள் மத்தியில் நிலவுவதால் திருமணம் செய்து கொள்ள தயங்குவதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாக இருந்து வருகிறது.

இன்னும் சிலரோ திருமணத்திற்கு பதிலாக லிவ்-இன் (live-in) உறவுகள் மற்றும் தனிப்பட்ட சுதந்திரத்திற்கு முக்கியம் கொடுப்பது அதிகரித்து வருகிறது. இப்போதெல்லாம் பெரும்பாலான திருமணங்கள் பெற்றோரின் வற்புறுத்தலினாலோ அல்லது சமூகத்தின் நலனுக்காகவோ தான் செய்யப்படுகின்றன.

பல உயர் வருமான நாடுகளில் திருமண விகிதங்கள் குறைந்து வருகின்றன. திருமணத்தின் சராசரி வயதும் அதிகரித்து வருகிறது. திருமணம் செய்துகொள்ளாமல் சேர்ந்து வாழ்வது, தாமதமாக திருமணம் செய்து கொள்வது மற்றும் தனித்து வாழ்வது ஆகியவை தற்போது மிகவும் பொதுவானவையாக உள்ளன. இது திருமண உறவில்லாத குடும்பங்களுக்கான சமூக அங்கீகாரமும் சட்டப் பாதுகாப்புகளும் விரிவடைந்துள்ளதால், குடும்பப் பாதுகாப்பிற்கான திருமணத்தின் அவசியம் குறைந்து வருகிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது.

முன்னுரிமைகள் மாறி உள்ளன. இன்று பலரும் தங்கள் கல்வி, வேலை மற்றும் கனவுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். திருமண பந்தம் இந்த சுதந்திரத்தை குறைக்கும் என்ற பயம் இன்றைய இளைய தலைமுறையினரிடம் அதிகம் காணப்படுகிறது. குடும்பம், உறவுகள், குழந்தைகள் எனப் பெரிய பொறுப்புகளை சுமக்க இன்றைய தலைமுறையினர் சிறிது தயக்கம் காட்டுகின்றனர்.

பெண்கள் கல்வி மற்றும் பொருளாதார சுதந்திரம் பெற்றிருப்பதால், திருமணம் என்பது கட்டாயமான ஒன்றாக இன்றைய காலகட்டத்தில் பார்க்கப் படுவதில்லை. இன்னும் சிலரோ அதைத் தங்கள் வளர்ச்சிக்கு ஒரு தடையாக இருப்பதுபோல் உணர்கிறார்கள். தேவையற்ற சுமைபோல் உணர்வதால் அந்த திருமண பந்தத்திற்குள் நுழைய பயப்படுகிறார்கள். ஆதிகாலத்தில் இருந்தே மனித சமூகத்தில் திருமணம் என்பது ஒரு ஒப்பந்தமாக இருந்து வருகிறது. ஆனால் இன்றைய காலகட்டத்தில் அதன் வடிவம் மற்றும் முக்கியத்துவம் வெகுவாக மாறி வருகிறது.

இதையும் படியுங்கள்:
அமெரிக்க திருமணம் Vs இந்திய திருமணம்: சில வேறுபாடுகளில், புரிதலும் விட்டுக் கொடுத்தலும்!
future-of-weddings

திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர் என்றும், அது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்றும் நம்புகிறவர்களும் உண்டு. திருமண பந்தம் என்பது உணர்வுபூர்வமான, சட்டபூர்வமான மற்றும் நிதி ரீதியான நன்மைகளைத் தருவதாக எண்ணுகிறார்கள். அது ஒரு பாதுகாப்பான உறவாக இன்றும் பலரால் விரும்பப் படுகிறது. திருமணம் என்பது ஒரு வாழ்நாள் அர்ப்பணிப்பாகும். அந்த உறவை மகிழ்ச்சியுடன் வளர்க்க ஒவ்வொரு நாளும் துணையுடன் தொடர்ந்து அன்பு செலுத்தி அந்த புனிதமான உறவை தக்கவைத்துக் கொள்ளவேண்டும்.

சுருக்கமாகச் சொன்னால் திருமண முறை என்பது காலாவதியான ஃபேஷன் என்பதை விட காலத்திற்கு ஏற்ப மாறிவரும் ஒரு சமூக அமைப்பு என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும். திருமணம் என்ற வடிவம் மறைந்துவிடவில்லை. மாறாக பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளது. முன்பை விட குறைவான விதிமுறைகளைக் கொண்டிருந்தாலும் சட்ட மற்றும் சமூகத்தின் பார்வையில் இன்றும் சக்தி வாய்ந்ததாகவே உள்ளது.

logo
Kalki Online
kalkionline.com