சிலர் தூங்கும்போது, தங்களை அறியாமல் வாயை திறந்தபடி தூங்குவார்கள். வாயைத் திறந்தபடி தூங்குவதால் உயிருக்கு ஆபத்து ஏதுமில்லை என்றாலும், சரியாகத் தூங்க முடியாமல் எந்நேரமும் சோர்வாக இருப்பார்கள். வாயைத் திறந்து கொண்டு தூங்குவதால் ஏற்படும் பிரச்னைகள் அதிகம்.
பொதுவாகவே, சிலர் உறங்கும்போது குறட்டை விடுவதும், வாயைத் திறந்தபடி தூங்குவதுமாக இருப்பார்கள். இதற்குக் களைப்பு, உடல் நலக்கோளாறு, சுவாசப் பிரச்னை, கன்னம் மற்றும் தாடை அமைப்பில் பிரச்னை என பலவிதமான காரணங்கள் இருக்கலாம்.
குழந்தைகளுக்கு மூக்கின் பின்புறம் மற்றும் தொண்டைப் பகுதியில் Adenoids என்ற சதைப் பகுதி காணப்படும். இவை தொடர்ந்து ஐஸ்க்ரீம், சாக்லேட் சாப்பிடுவதால் இந்த சதைப் பகுதி வளர்ந்து பெரிதாகும். அந்த சமயத்தில் குழந்தைகள் வாயைத் திறந்து வைத்தவாறு தூங்குவார்கள். இதனால் மூக்கடைப்பு பிரச்னை ஏற்படும்.
குழந்தைகள் தூங்கும்போது மூக்கு வழியாக சுவாசிக்காமல் வாய் வழியாக சுவாசிக்கிறார்களா என்பதை கவனிக்க வேண்டும். அவர்கள் வாய் வழியாக சுவாசிக்கக் காரணம் சுவாசப் பாதையில் அடைப்பு இருப்பதே காரணமாகும். இது சில ஒவ்வாமை தொற்றால் ஏற்படலாம். வாய் வழியாக சுவாசிக்கும்போது நம் உடலுக்கு குறைந்த அளவு ஆக்ஸிஜன் மட்டுமே கிடைக்கும். இதனால் காலப்போக்கில் இதய பிரச்னைகள் வர வாய்ப்பு உண்டாகும். அத்துடன் மூக்கு வழியாக சுவாசிக்கும்போது பாக்டீரியா மற்றும் காற்றில் இருக்கும் தூசிகளை வடிகட்டி அனுப்புவதால் நிம்மதியான உறக்கம் கிடைக்கும். அதேபோல் சளி, தும்மல், நீர்க்கட்டி பிரச்னை உள்ளவர்களும் வாயை திறந்த நிலையில் தூங்குவார்கள். இதனால் குறட்டை ஏற்படும். கீழ்த்தாடை வளர்ச்சியும் குறைவாக இருக்கும். இரவு முழுவதும் வாயைத் திறந்தபடி உறங்குவதால் வாய் துர்நாற்றம் ஏற்படும் நிலை ஏற்படுகிறது. வாயில் பாக்டீரியாவின் தாக்கமும் அதிகரிக்கும்.
நமது வாயை பாதுகாக்கும் சுரப்பி உமிழ்நீராகும். ஒருவர் வாயைத் திறந்தபடி தூங்குவதால் அந்த எச்சில் வறட்சி அடைந்து பற்களின் ஆரோக்கியமும் பாதிக்கப்படும். வாயைத் திறந்து தூங்கும்போது வாயில் அமிலத்தன்மை அதிகரித்து பல் அரிப்பு, சொத்தை போன்ற பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். பாக்டீரியாக்களால் உருவாகும் அமிலம்தான் பற்களை தாக்கி பல பிரச்னைகளை உண்டுபண்ணும். ஆஸ்துமா, தூக்கமின்மை பிரச்னை இருப்பவர்களுக்கு இதன் காரணமாக வாயில் சொத்தைப் பற்கள் உண்டாவதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு.
இதற்கான தீர்வுகள்:
வாயைத் திறந்து தூங்கும் பழக்கத்தைக் குறைக்க, நேராக நிமிர்ந்து படுத்து உறங்குவதைத் தவிர்த்து இடதுபுறமாக படுத்து தூங்குவது நல்லது. எதனால் இவ்வாறு வாயால் சுவாசிக்கிறோம் என்பதைப் பொறுத்து இதன் சிகிச்சை மாறுபடும். சளி மற்றும் அலர்ஜி பிரச்னை காரணமாக வரக்கூடிய மூக்கடைப்பை குணப்படுத்த மருந்துகள் தரப்படும். உறங்கும் சமயம் பிளாஸ்திரி போன்ற எதையாவது வைத்து உதடுகளை இறுக்கமாக மூடிக்கொள்ள வேண்டும். இதன் மூலம் வாயால் சுவாசிப்பது தடுக்கப்படும்.
பற்களை சீரமைப்பதன் மூலம், அதாவது க்ளிப்புகள் மற்றும் கம்பிகள் பயன்படுத்தி தாடை மற்றும் பல் வரிசையை சரிப்படுத்துவதன் மூலம் காற்றோட்டத்தை அதிகப்படுத்த முடியும். தொண்டை தசைகளுக்கு சிகிச்சை கொடுப்பதன் மூலமும் இப்பிரச்னையை சரி செய்ய முடியும்.
வாயால் சுவாசிப்பது நம் உடல் நலத்தை மட்டுமின்றி, வாய் சுகாதாரத்தையும் பாதிக்கும். எனவே, இதற்கான காரணத்தைக் கண்டறிந்து தகுந்த மருத்துவரிடம் சிகிச்சை எடுத்துக்கொள்வது நல்லது.