

மழையை ரசிக்காதவர்கள் மிகவும் குறைவு. மழைக்காலத்தை மனதார வரவேற்றாலும், முதியவர்களுக்கு மழைக்காலம் சற்று உடல்நலப் பிரச்னையை ஏற்படுத்தும் சிக்கலான காலம்தான். அந்த வகையில், மழைக்காலங்களில் முதியோர்களை பராமரிக்கும் வழிமுறைகள் குறித்து இப்பதிவில் காண்போம்.
1. வெதுவெதுப்பான நீர்: மழைக்காலங்களில் எளிதில் மாசு படக்கூடிய விஷயங்களில் ஒன்றாக தண்ணீர் இருக்கிறது. காலரா, டைபாய்டு போன்றவை நீரால் ஏற்படும் நோய்களாக இருக்கின்றன. ஆகவே, மழைக்காலங்களில் குளிப்பதற்கும், குடிப்பதற்கும் முதியவர்கள் கண்டிப்பாக வெதுவெதுப்பான நீரைப் பயன்படுத்த வேண்டும். இது முதியவர்களை பாதுகாப்பாக வைத்திருக்க உதவும்.
2. தெரு உணவுக்கு நோ சொல்லுங்கள்: மழைக்காலங்களில் சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்படும் தெருவோர உணவுகளை முதியவர்களுக்குக் கொடுக்கக் கூடாது. தெருவிலுள்ள தூசு, மாசு மற்றும் கொசு, ஈக்கள் மூலமாக உணவுகளை சாப்பிடும் முதியவர்களுக்கு வயிற்றுப்போக்கு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதால் மழைக்காலங்களில் தெருவோர உணவுகளுக்கு 'நோ' சொல்வதே சிறந்தது.
3. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள்: மழைக்காலங்களில் இருமல், சளி ஆகியவை முதியவர்களை எளிதில் பாதிக்கும். ஆகவே, மழைக்காலம் வருவதற்கு முன்பாகவே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளான கொட்டைகள், பாதாம், சோளம் மற்றும் தானியங்களை சாப்பிட வேண்டும்.
4. சுத்தம், சுகாதாரம்: மழைக்காலத்தில் சுத்தமும், சுகாதாரமும் வாழ்க்கையின் மிகவும் முக்கியமான அங்கமாக இருக்கின்றன. ஈரமான பகுதிகளில் பெருகும் கொசுக்களால் டெங்கு போன்ற நோய்கள் ஏற்படும் என்பதால் சுற்றுப்புறத்தில் நீர் தேங்காதபடி பார்த்துக்கொள்வதோடு வறண்டதாகவும், சுத்தமாகவும் பராமரிக்க வேண்டும்.
5. ஊட்டச்சத்து உணவு: வயதானவர்களின் செரிமானத் திறன் மழைக்காலங்களில் குறைவாக இருக்கும். அதனால் பழங்கள், காய்கறிகள், பச்சை இலை காய்கறிகள் மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்தது. மேலும், செரிமானத்தை மேம்படுத்தும் வாழைப்பழம், பேரிக்காய், ஆப்பிள் போன்ற பழங்களை தவறாமல் மழைக்காலங்களில் சாப்பிடுவது சிறந்தது.
6. பூச்சி விரட்டிகள்: பருவமழைக் காலங்களில் பூச்சிகள், ஈக்கள், கொசுக்கள் அதிகமாகத் தோன்றும் என்பதால் ஜன்னல்கள் மற்றும் கதவுகளில் கொசு வலைகள் மற்றும் கொசு விரட்டிகளைப் பயன்படுத்துவதோடு, உடலை முழுவதுமாக மூடும் வகையிலான ஆடைகளை அணிய வேண்டும்.
7. வெளியில் செல்லும்போது: மழைக்காலங்களில் முதியவர்கள் வெளியே செல்லும்போது குடை, ரெயின் கோட்டுடன் செல்ல வேண்டும். தெருவில் உள்ள தேங்கிய நீர் வண்டி செல்லும்போது நம் மீது தெரித்து பட்டால் கண்டிப்பாக குளிக்க வேண்டும்.
மேற்கூறியவற்றை கடைபிடிக்கும்போது முதியவர்கள் சற்று சுகமாக உணர்ந்து ஆரோக்கியமாக இருப்பார்கள் என்பதில் சற்றும் ஐயமில்லை.