இந்த ஒரு விஷயம் தெரிஞ்சா, பயம் உங்ககிட்ட ‘லீவ்' சொல்லிட்டு போயிடும்!

Fear
Fear
Published on

மனிதர்களாகிய நாம் பரிணாம வளர்ச்சி அடைந்து, இன்று இந்த நிலையில் இருப்பதற்கு மிக முக்கியக் காரணங்களில் ஒன்று பயம். பயம் என்பது மனிதர்களுக்கு மட்டுமல்ல, உலகில் உள்ள எல்லா உயிரினங்களுக்கும் பொதுவான ஒரு உணர்வு. சிலருக்குப் பேயைப் பார்த்தால் பயம், சிலருக்கு உயரத்தைப் பார்த்தால் பயம், சிலருக்குப் பறந்தால் பயம், நடந்தால் பயம் எனப் பயத்திற்குப் பல உருவங்கள் இருந்தாலும், இந்த எல்லா பயத்திற்கும் அடிப்படை ஒன்றே ஒன்றுதான். அதுதான் "இனம் புரியா பயம்" (The Fear of the Unknown). இந்த ஒரு பயம் எப்படி மற்ற எல்லா பயங்களுக்கும் காரணமாக இருக்கிறது என்று பார்ப்போம்.

பயம் ஏன் உருவாகிறது?

பயம் என்பது நமது மூளையில் உள்ள 'அமிக்டலா' (Amygdala) என்ற பாதாம் பருப்பு அளவிலான ஒரு சிறிய பகுதியில் உருவாகிறது. இந்த அமிக்டலாதான் நமது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துகிறது. ஆதிகால மனிதர்களுக்கு, உயிர் வாழ்வதற்கான ஒரு கருவியாகவே இந்த பயம் இருந்தது. ஒரு புலி துரத்தும்போது, "சண்டை போடு" அல்லது "ஓடிவிடு" என்ற முடிவை உடனடியாக எடுக்க இந்த பயம்தான் உதவியது. பயம் ஏற்படும்போது, இதயம் வேகமாகத் துடிப்பது, உடல் நடுங்குவது போன்றவையெல்லாம், ஆபத்திலிருந்து தப்பிப்பதற்காக நம் உடலைத் தயார் செய்யும் செயல்கள்தான்.

தெரியாத விஷயங்களே பயத்தின் ஆணிவேர்!

 ஆதிகால மனிதனுக்கு எது ஆபத்து, எது ஆபத்து இல்லை என்று முதலில் தெரிந்திருக்கவில்லை. அவனுக்குச் சிங்கம், புலி, மாடு, ஆடு என எல்லாமே பயம் தரக்கூடிய, தெரியாத விஷயங்களாகத்தான் இருந்தன. ஆனால், நாளடைவில், "ஆடு நம்மை ஒன்றும் செய்யாது, ஆனால் புலி நம்மைக் கொன்றுவிடும்" என்பதை அவன் கற்றுக்கொண்டான். அப்போது, புலி மீதான பயம் அதிகரித்தது, ஆடு மீதான பயம் குறைந்தது.

இதிலிருந்து தெரிவது என்னவென்றால், ஒரு விஷயத்தைப் பற்றி நமக்குத் தெரியாத வரைதான், அது நமக்கு பயத்தைக் கொடுக்கிறது. உதாரணமாக, நீங்கள் தினமும் பயன்படுத்தும் ஒரு லைட் சுவிட்ச், ஒருநாள் திடீரென உங்கள் மீது ஷாக் அடித்தால், அடுத்த முறை அதைத் தொடும்போது உங்களுக்குப் பயம் வரும். 

ஆனால், அதே சுவிட்சை மாற்றிவிட்டு, வேறு ஒரு புதிய டிசைனில் சுவிட்ச் வைத்தால், அதைத் தொட உங்களுக்குப் பயம் வராது. ஏனென்றால், பழைய சுவிட்ச் ஷாக் அடிக்கும் என்பது உங்களுக்குத் தெரிந்த ஒன்று, புதிய சுவிட்ச் பற்றி உங்களுக்கு எதுவும் தெரியாது.

இதையும் படியுங்கள்:
நமது இயற்கை சூழலின் மறைமுகக் காவலர்கள்: வௌவால்களின் முக்கியத்துவம்!
Fear

பேய்ப் பயமும் இனம் புரியா பயமும்!

பேய்ப் பயம் உருவாகக் காரணமும் இதுதான். இரவில் நமக்குச் சரியாகக் கண்கள் தெரியாது. இருட்டில் கேட்கும் சிறிய சத்தம் அல்லது அசையும் நிழல், அது என்னவென்று நமக்குத் தெளிவாகத் தெரியாது. இந்த 'தெரியாத' விஷயத்தை, நமது மூளை, நாம் ஏற்கெனவே கேள்விப்பட்ட பேய்க் கதைகளுடன் ஒப்பிட்டு, ஒரு பய உணர்வை உருவாக்குகிறது. இதற்கு 'பேரடோலியா' (Pareidolia) என்றும் பெயர். அதாவது, தொடர்பில்லாத வடிவங்களை நமக்குத் தெரிந்த முகங்களைப் போலப் பார்ப்பது.

இதையும் படியுங்கள்:
நம் நிம்மதி நம்மிடமே: மகிழ்ச்சிக்கான வழி நமது கையில்தான்!
Fear

நமது சூழலும், நாம் வளரும் விதமும்தான் நமது பயங்களைத் தீர்மானிக்கின்றனவே தவிர, பயம் என்பது மரபணு வழியாக வருவதில்லை. ஒரு விஷயத்தைப் பற்றி நமக்குத் தெரியாத வரைதான் அது பயமாக இருக்கிறது. அது என்னவென்று நாம் ஆராய்ந்து தெரிந்துகொண்டால், அந்த பயம் தானாகவே விலகிவிடும். 

புல் தடுக்கி விழுந்து இறந்த ஒருவனை 'பேய்' அடித்துவிட்டது என்று சொல்வதை விட்டுவிட்டு, அதற்கான உண்மையான காரணத்தை ஆராய்ந்து தெரிந்துகொண்டால், அந்த 'தெரியாத' விஷயம் 'தெரிந்த' விஷயமாக மாறிவிடும்; பயமும் மறைந்துவிடும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com