
வடகிழக்கு பருவ மழை இன்னும் சில நாட்களில் துவங்க உள்ளது. இக்காலகட்டங்களில் அடிக்கடி மின் விபத்துக்கள் நிகழ்வது வழக்கம். அந்த வகையில் பொதுமக்களும் விவசாயிகளும் மின் விபத்திலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான சில வழிமுறைகள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
* வீடுகளில் ஏற்படும் மின் கசிவு விபத்தை தவிர்க்க ஆர்.சி.டி பொருத்த வேண்டும்.
* கட்டடத்திற்கு அருகே உள்ள மின் பாதைக்கும் கட்டடத்திற்கும் 6 அடி இடைவெளியும் தாழ்வழுத்த மின்பாதைக்கும் கட்டடத்திற்கும் 4 அடி இடைவெளியும் கட்டாயம் இருக்க வேண்டும்.
* மின் கம்பங்கள் மற்றும் ஸ்டே கம்பிகளில் கயிறு கட்டி துணி காய வைப்பது, கால்நடைகளைக் கட்டுவது போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.
* மின் பாதைகளுக்குக் கீழேயும் அருகிலும் நீளமான உலோகக் கம்பிகள் மற்றும் பொருட்களைக் கொண்டு செல்லக் கூடாது.
* மின் கம்பிகள் அறுந்து தரையில் விழுந்தால் அதன் அருகில் செல்லவோ அதைத் தொட முயற்சிக்கவோ கூடாது. உடனே அருகே உள்ள மின்வாரிய அலுவலகத்திற்குத் தகவல் தெரிவிக்க வேண்டும்.
* மின்வாரிய அலுவலர்கள் அங்கு வரும் வரை வேறு யாரையும் அந்த மின்கம்பிகளைத் தொடாமல் பார்த்துக் கொள்ளவும் வேண்டும்.
* மின்சாரம் சார்ந்த பொருட்களில் தன்னிச்சையாக செயல்படாமல் சம்பந்தப்பட்ட மின்வாரிய பிரிவு அலுவலருக்குத் தெரியப்படுத்த வேண்டும்.
* மேல்நிலை மின் கம்பிகளுக்கு அருகே உள்ள மரக்கிளைகளை தன்னிச்சையாக வெட்டாமல் மின்வாரிய அலுவலர்களை அணுகி உதவி கோர வேண்டும்.
* ஈரக் கைகளோடு சுவிட்சுகள், ப்ளக்குகள் இயக்குவதை பெரும்பாலும் தவிர்த்திட வேண்டும்.
* பொதுமக்கள் தங்கள் வீடு மற்றும் கடைகளில் ஒயரிங் செய்யும்போது தரமான முத்திரையிட்ட மின் உபகரணங்களை பொருத்துவதோடு பழுதான உபகரணங்களை உடனே மாற்றிட வேண்டும்.
* பச்சை மரங்களிலும், இரும்பு கிரில்களிலும் அலங்கார சீரியல் விளக்குகள் கட்டுவதைத் தவிர்க்க வேண்டும்.
* மின்வேலி அமைப்பது கிரிமினல் குற்றம் என்பதால் அதனை தவிர்த்திட வேண்டும்.
* விவசாயிகள் பம்பு செட்டில் ஒயரிங் பாதுகாப்பாக உள்ளதா என அங்கீகரிக்கப்பட்ட ஒப்பந்ததாரர்களின் மூலம் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
* கனரக வாகனங்களை மின் கம்பிகளுக்கு அடியில் நிறுத்தி பொருட்களை ஏற்றவோ அல்லது இறக்கவோ கூடாது.
மேற்கூறிய வழிமுறைகளை முறையாகப் பின்பற்றுவதன் மூலம் பெருமளவு மின்கசிவு விபத்து அபாயத்தைத் தவிர்க்க முடியும்.