
இன்றைய இளைய தலைமுறையினர், குறிப்பாக டீன்ஏஜ் பருவத்தினர், மின்னணு சாதனங்களுடன் பின்னிப் பிணைந்துள்ளனர். பொழுதுபோக்கு முதல் கல்வி வரை எல்லாவற்றுக்கும் திரையே கதி என்றாகிவிட்டது. ஆனால், இந்த அதிகப்படியான திரை நேரம் அவர்களின் மன ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடும் என்று சமீபத்திய ஆய்வுகள் எச்சரிக்கின்றன. குறிப்பாக, இளம் பெண்களுக்கு இது ஒரு கவலை அளிக்கும் விஷயமாக உருவெடுத்துள்ளது.
புதிய ஆய்வு ஒன்றின் முடிவுகள் அதிர்ச்சியளிக்கின்றன. அதிக நேரம் மின்னணு திரைகளில் செலவிடுவதால், இளம் பெண்களின் தூக்கப் பழக்கம் மோசமடைகிறது. இது அவர்களின் மனச்சோர்வு அபாயத்தை அதிகரிக்கிறது என்று அந்த ஆய்வு கூறுகிறது.
ஸ்வீடன் நாட்டில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், குறிப்பிட்ட வயதுடைய மாணவ மாணவிகளின் திரை நேர பயன்பாடு, தூக்கத்தின் தரம் மற்றும் மனநிலை ஆகியவை ஒரு வருட காலத்திற்கு கண்காணிக்கப்பட்டன. இதன் முடிவில், அதிக திரை நேரம் தூக்கமின்மைக்கு வழிவகுக்கிறது என்றும், இது இளம் பெண்களிடையே மனச்சோர்வு ஏற்படுவதற்கான முக்கிய காரணமாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
சிறுவர்களைப் பொறுத்தவரை, அதிக திரை நேரம் நேரடியாக மனச்சோர்வை உண்டாக்குகிறது. ஆனால், சிறுமிகளுக்கு தூக்கமின்மையே மனச்சோர்வுக்கு முக்கிய காரணமாக அமைகிறது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். திரை நேரம் தூக்க நேரத்தை தள்ளிப் போடுவதால், உடலின் இயற்கையான உயிரியல் கடிகாரம் சீர்குலைகிறது. இது தூக்கத்தின் அளவு மற்றும் தரத்தை பாதிக்கிறது. பெண்களில், திரை நேரம் மற்றும் மனச்சோர்வுக்கு இடையேயான தொடர்பில் தூக்கமின்மை ஒரு முக்கிய காரணியாக விளங்குகிறது.
இந்த ஆய்வின் முடிவுகள், டீன்ஏஜ் பருவத்தினர் ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று மணி நேரத்திற்கு மேல் பொழுதுபோக்குக்காக திரை நேரம் செலவிடக் கூடாது என்ற சுகாதார நிறுவனத்தின் பரிந்துரையை வலுப்படுத்துகிறது. நல்ல தூக்கம் மன ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியம்.
எனவே, இளம் வயதினர் மின்னணு சாதனங்களின் பயன்பாட்டை குறைத்து, போதுமான தூக்கத்தை உறுதி செய்வது மனச்சோர்வு போன்ற பிரச்சினைகளில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள உதவும். பெற்றோர்களும் இது குறித்து விழிப்புடன் இருப்பது அவசியம்.