
மனிதர்களுக்கு உடல் வலிமை, மனவலிமை எத்தனை முக்கியமோ அதேபோல உணர்ச்சி ரீதியாக (எமோஷனலி ஸ்ட்ராங்) வலிமையாக இருப்பதும் மிகவும் முக்கியம். உணர்ச்சி ரீதியாக வலிமையாக இருக்கும் ஒரு மனிதர் எப்பேர்ப்பட்ட சூழ்நிலைகளையும் எதிர்கொண்டு சவால்களையும் சமாளித்து விடுவார்.
அவர் வாழ்வில் மிக விரைவில் உயர்ந்து விடுவார். ஒருவர் உணர்ச்சி ரீதியாக வலிமையானவரா? இல்லையா என்பதை அவருடைய நடவடிக்கைகள் மற்றும் உடல் மொழி போன்றவை எடுத்துக்காட்டும். உணர்ச்சி வலிமையைக் வெளிப்படுத்தும் ஆறு விதமான அறிகுறிகள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
உணர்ச்சிகளை ஆரோக்கியமான முறையில் வெளிப்படுத்துதல்;
எமோஷனலி ஸ்ட்ராங் என்று சொல்லப்படும் ஒரு மனிதர் தனது உணர்ச்சிகளை அடக்கி வைப்பதில்லை. அதே சமயத்தில் மனதில் தோன்றும் அத்தனை உணர்ச்சிகளையும் அப்படியே வெளியில் கொட்டுவதுமில்லை. அவற்றை மிக ஆரோக்கியமான முறையில் வெளிப்படுத்துவார்.
தன் மனதில் ஓடும் உணர்ச்சிகளை அடையாளம் கண்டு தான் எப்படி உணர்கிறோம் என்பதையும் புரிந்துகொண்டு அவற்றை மிக மிக ஆரோக்கியமான முறையில் வெளிப்படுத்தும்போது அவர் தனது உணர்ச்சிகளை அடக்கி ஆண்டு வெற்றி கொள்கிறார் என்பது என்று அர்த்தம்.
மாற்றத்தை ஏற்றுக் கொள்ளுதல்;
உணர்ச்சி ரீதியாக வலிமையான மனிதர்கள் மாற்றத்தை ஏற்றுக் கொள்வார்கள். அவை கடினமாக இருந்தாலும் கூட கடந்த காலத்தை எண்ணிப் பார்த்து புலம்பாமல், வருந்தாமல், நிகழ்கால மாற்றத்தை ஏற்றுக்கொண்டு அதை எதிர்கொள்வார்கள். அதனால் அவர்கள் வாழ்க்கையில் முன்னேறுவார்கள். அவர்கள் மாற்றத்தை வளர்ச்சி பெறுவதற்கான ஒரு வாய்ப்பாக பார்க்கிறார்கள்.
தங்கள் செயல்களுக்கு பொறுப்பேற்றல்;
உணர்ச்சிகரமாக வலிமையாக இருக்கும் மனிதர்கள் தங்கள் நடவடிக்கைகள் மற்றும் செயல்களுக்கு தாங்களே பொறுப்பேற்றுக் கொள்கிறார்கள். பிறரை அதற்காக அவர்கள் குற்றம் சாட்டுவதோ அல்லது காரணம் சொல்வதோ இல்லை. விளைவுகள் நேர்மறையாக இருந்தாலும் எதிர்மறையாக இருந்தாலும் அவை எல்லாவற்றுக்கும் தாங்கள்தான் பொறுப்பு என்கிற உணர்வு அவர்களுக்கு இருக்கும். அதை வெளிப்படையாக ஒத்துக்கொள்ளவும் செய்வார்கள்.
நெருக்கடியின்போது அமைதி காத்தல்;
பதட்டப்படும் மனிதர்கள் சாதாரண விஷயத்திற்குக் கூட அதிகமாக ஓவர் ரியாக்ட் செய்து தன்னையும் சூழ்நிலையையும் இன்னும் அதிக பதட்டத்திற்கு உள்ளாக்குவார்கள். ஆனால் உணர்ச்சிகளை வலிமையாகக் கையாளத் தெரிந்த மனிதர்கள் எந்த ஒரு சூழ்நிலையின் போதும் மிகவும் அமைதியாக இருக்கிறார்கள். நெருக்கடியின்போது கூட பதட்டப்படாமல் உணர்ச்சிவசப்படாமல் இருக்கிறார்கள். தெளிவாக சிந்தித்து சரியான நடவடிக்கைகளை எடுத்து பிரச்னைகளை தீர்க்கிறார்கள்.
இல்லை என்று சொல்லுதல்;
இவர்கள் தங்களுக்கான எல்லைகளை நிர்ணயித்துக் கொள்கிறார்கள். வரம்புகளை அறிந்து கொள்கிறார்கள். இது உணர்ச்சி வலிமையின் ஒரு மிக முக்கியமான அடையாளமாகும். இவர்களால் குற்ற உணர்ச்சி இன்றி இல்லை என்று சொல்ல முடியும். ஒருவர் தன்னிடம் உதவி கேட்டால் முடியும் என்றால் ஒத்துக்கொள்வார்கள். தன்னால் செய்ய முடியாது என்றால் தயங்காமல் 'நோ' சொல்வார்கள். இது சுயவிழிப்புணர்வு மற்றும் உணர்ச்சி நல்வாழ்வின் முன்னுரிமையை நிரூபிக்கிறது.
மாற்ற முடியாததை ஏற்றுக்கொள்ளுதல்;
வாழ்க்கையில் எல்லா விஷயங்களையும் மாற்ற முடியாது என்பதை உணர்ச்சி ரீதியாக வலிமையான மனிதர்கள் புரிந்து கொள்கிறார்கள். தங்களால் கட்டுப்படுத்த முடியாத விஷயத்தை நன்கு புரிந்துகொண்டு அதை மாற்ற முயற்சி செய்வதில்லை.
தங்கள் சக்தியை அதற்காக செலவழிப்பதில்லை. அப்படியே அவற்றை ஏற்றுக்கொள்கிறார்கள். அதனால் மன அழுத்தம் குறைந்து மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். இந்த ஆறு அறிகுறிகளும் இருந்தால் நீங்களும் உணர்ச்சி ரீதியாக வலிமையான மனிதர்தான்.