
வீடு என்பது ஒவ்வொருவருக்கும் தேவையான ஒரு முக்கியமான சொத்து. முன்பு பூர்வீகத்தில் அனைவருக்கும் சொந்த வீடு என்று ஒன்று கட்டாயம் இருக்கும். அதனால், அந்த காலத்தில் வீட்டுக்காக யாரும் கடன் வாங்குவது இல்லை. தேசம் நகரமயமான பிறகு கிராமங்களில் இருந்து நகரங்களுக்கு செல்லும் மக்களின் தொகை , ஒவ்வொரு ஆண்டும் தொடர்ச்சியாக அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் நகர்ப்புறங்களில் வாழும் மக்களுக்கு வீடு அத்தியாவசிய தேவையானது.
ஆரம்ப காலத்தில் வாடகை வீட்டில் குடியேறிய மக்கள், பின்னர் வாடகை மாதா மாதம் கட்டுவதை விட சொந்தமாக வீடு வாங்குவது சிறப்பானது என்று கடன் வாங்கியாவது (Home loan) சொந்த வீடு வாங்கி விடுவார்கள். கடன் வாங்கி சொந்த வீடு வாங்கும்போது தான், அதில் உள்ள பிரச்சினைகள் எல்லாம் தெரிய வரும். பொதுவாக நகர்ப்புறங்களில் ஒரு சொந்த வீடு வாங்க வேண்டும் என்றால் குறைந்தபட்சம் 30 லட்சத்திலிருந்து வீடு கிடைக்கிறது அல்லது காலி மனை வாங்கி வீட்டை கட்டிக் கொள்ள வேண்டும்.
இப்போதெல்லாம் காலி மனை வாங்கி வீட்டை கட்டுவதை விட கட்டிய வீட்டை வாங்குவதற்கு தான் பெரும்பாலான மக்கள் போட்டி போடுகின்றனர். வாடகை வீட்டுக்கு மாதம் ₹15,000 - ₹20,000 கொடுப்பதற்கு பதில், சொந்த வீடு வாங்கி அதற்கு மாதத் தவணை கட்டிக் கொள்ளலாம் என்று நினைக்கின்றனர்.
வங்கிக் கடன்:
ஒரு வீடு குறைந்த பட்சம் ₹30 லட்ச ரூபாய் என்றால், அதை வாங்க முண்பணமாக 20% பணத்தினை விற்பவரிடம் கொடுத்து ஒப்பந்தம் போட்ட பின்னர் தான் வங்கிக் கடனுக்கு விண்ணப்பிக்க முடியும். 6 லட்ச ரூபாயை வீடு வாங்கும் நபர், முன்பணமாக கொடுக்க வேண்டும். மீதமுள்ள ₹24 லட்சத்திற்கு தான் வங்கிக் கடன் கிடைக்கும். அதற்கு 10% வருட வட்டியை கணக்கிட்டால் மாதத் தவணை ₹23,161 வரும். மொத்தம் 20 வருடங்கள் இதற்கான வட்டியை கூட்டினால் ₹55,58,525 வரும்.
வெறும் ₹24 லட்ச ரூபாய் கடனுக்கு ₹55 லட்சத்தை தாண்டி நாம் பணம் கட்ட வேண்டும் என்று நினைத்தால் தலையே சுற்றலாம். ஆனால், 30 லட்ச ரூபாய் வீட்டின் மதிப்பு 20 வருடங்கள் கழித்து 80 லட்சம் வரை உயர்ந்து இருக்கும். அதே நேரத்தில் வீட்டின் கட்டுமானத்தின் தரமும் குறைந்து போய் இருக்கும். வீட்டை மீண்டும் புதுப்பிக்க ஒரு 10 லட்ச ரூபாய் செலவும் ஆகும். வீட்டைக் கடன் வாங்கி வாங்கினாலும் அது ஒரு முழுமையான தேவையான சொத்தாக இருக்கும். ஆனால், இதில் வட்டி என்பது அசல் தொகைக்கு மேலே செல்வதைக் கண்டால் பலருக்கும் ஜீரணிக்க கடினமாக தான் இருக்கும்.
இதற்கு மாற்றாக நாம் வலைத் தளங்களில் பார்க்கலாம். 20 வருடங்கள் தொடர்ச்சியாக நாம் மியுட்சுவல் பண்ட், SIP போன்றவற்றில் EMI செலுத்தும் பணத்தின் மதிப்பில் முதலீடு செய்தால் 20 வருடங்கள் கழித்து ₹1.25 கோடியை தாண்டி வருவாய் கிடைக்கும் என்று, அந்த வருவாயில் 80 லட்ச ரூபாய்க்கு ஒரு வீட்டைக் வாங்கிக் கொள்ளலாம் என்று.
இந்த இடம் தான் திரில்லிங்கான இடம். 20 வருடம் கழித்து உங்கள் கையில் முதலீடு செய்த பணம் இருக்கலாம், ஆனால் இப்போது உங்களிடம் உள்ள பணத்திற்கு ஊருக்கு வெளியில் தான் வாங்க வேண்டும். 20 வருடங்களுக்கு முன் நீங்கள் வீடு வாங்கி இருந்தால், இத்தனை வருடத்தில் அந்த இடத்தை சுற்றி பல குடியிருப்புகள் , தெருக்கள் உருவாகி ஊரின் முக்கிய இடமாக இருந்திருக்கும். இனி நீங்கள் வாங்கும் இடம் சுற்றிலும் முன்னேற சில வருடங்கள் ஆகும்.
அது போல நாட்டின் பொருளாதார நிலையை வைத்து தான் SIP, மியூச்சுவல் பண்ட் வருமானம் இருக்கும். ஒருவேளை பொருளாதாரம் சரிந்தால் மொத்தமும் போய் விடும். அதற்கு தான் தைரியமாக முதலில் வீட்டை வாங்குங்கள். அதன் EMI உங்கள் வருமானத்தில் 60% தாண்டாமல் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.
விரைவில் கடனை அடைக்கும் வழி:
வீட்டுக் கடன்களை பொறுத்த வரையில் முன்பணம் கட்டும் விதிகள் உள்ளன. இதன்படி ஒரு வருடம் தவணையை கட்டி விட்டால், உங்களால் முடிந்த அளவு பெரிய தொகையை 6 மாதம் அல்லது வருடத்திற்கு ஒரு முறைக் கட்டுங்கள். அப்படி கட்டினால் அந்த தொகை அசலில் கழிக்கப்படும், வட்டியும் அதில் குறையும்.
உதாரணமாக வீட்டுக் கடன் அசலும் வட்டியும் சேர்ந்து ₹55,58,525 இருக்கும். ஒரு வருட தவனைத் தொகை கழிந்தால் மீதம் ₹52,80,593 இருக்கும். இப்போது நீங்கள் அசல் தொகையில் 2 லட்ச ரூபாய் கட்டினால் அதற்குரிய அந்த தொகை அசலில் சேர்ந்து விடும், இப்போது அதற்கான 19 வருட வட்டி குறைந்து ₹46,98,268 மட்டும் நீங்கள் கட்ட வேண்டி இருக்கும். இப்படியே வருடத்திற்கு 1-2 லட்சம் கட்டினால் 10 வருடத்திற்குள் வீட்டுக் கடனை முடித்தால், உங்களின் வட்டி பெருமளவில் குறைந்து இருக்கும்.
₹24 லட்சக் கடனுக்கு அதிக பட்சம் ₹10-15 லட்சம் வரை தான் நீங்கள் வட்டி கட்டி இருப்பீர்கள். பத்து வருடங்கள் பணவீக்கத்தை கணக்கீடு செய்தால் உங்களுக்கு இழக்க எதுவும் இருக்காது. அதனால் வீட்டுக் கடன் எப்போதும் வாங்கினாலும் அதன் ஆயுள் காலம் வரை தவணை கட்டாமல் , முன் கூட்டி பணம் கட்டி தப்பித்துக் கொள்ளுங்கள்.