எண்ணங்கள் மிகவும் சக்தி வாய்ந்தவை. ஒவ்வொருவரும் தான் வாழும் வாழ்க்கைக்கு அவரின் எண்ணங்களே காரணமாகும். தான் புத்திசாலி. பலசாலி. பணக்காரன் என்று தன்னை ஒருவர் எண்ணிக் கொண்டால் அதுபோலவே அவர் ஆகிறார். அதேபோல தான் ஒரு மக்கு, ஏழை என்று எதிர்மறையாக எண்ணும்போது அவர் அப்படியே வாழ்கிறார். எண்ணங்கள் நம் வாழ்க்கையை எப்படி மாற்றுகின்றன என்பது பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.
நாம் நமது எண்ணங்களில் மிகவும் கவனம் வைக்க வேண்டும். ஆங்கில நாடகாசிரியர் ஷேக்ஸ்பியர் கூறியது போல எண்ணங்கள்தான் வார்த்தைகளாக வருகின்றன. அவை செயல்களாக மாறுகின்றன. அதுவே ஒரு மனிதனின் வாழ்க்கையை தீர்மானிக்கின்றன என்பது எவ்வளவு உண்மையான கூற்று.
எல்லாவற்றிற்கும் அடிப்படை எண்ணங்கள்தானே? எனவே, எண்ணங்களை புத்திசாலித்தனமாக தேர்ந்தெடுக்க வேண்டும். அவை நேர்மறையாகவும் ஆக்கபூர்வமாகவும் இருக்க வேண்டும். நேர்மறையான சிந்தனை மகிழ்ச்சியான மற்றும் நிறைவான வாழ்க்கைக்கு வித்திடும்.
ஒருவர் எண்ணும் எண்ணங்களுக்கு அவரே பொறுப்பு. எண்ணங்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதை உணர வேண்டும். அதற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும். 'நான் இந்த மாதிரி நினைப்பதற்கு நான் பொறுப்பல்ல' என்று யாருமே தட்டிக்கழிக்க முடியாது.
ஒருவர் பிறப்பால் ஏழையாக இருந்தாலும், தான் ஒரு பணக்காரராக வேண்டுமென்று விரும்பினால் அவர் முதலில் மாற்றிக்கொள்ள வேண்டியது தனது எண்ணங்களைத்தான். 'என்னாலும் ஒரு செல்வந்தன் ஆக முடியும்' என்று தீவிரமாக அவர் நம்பினால் அவருடைய செயல்பாடுகள் மாறும். வாழ்வில் ஒரு இலக்கை அமைத்துக் கொண்டு அதை நோக்கி அவர் செல்வார். முடிவில் அவர் எண்ணியபடியே செல்வந்தன் ஆவார். எண்ணங்கள் அவரை அந்த அளவு உயரத்தில் கொண்டு போய் வைக்கும்.
ஒருவர் விமர்சனத்தை விலக்காமல், அது தனது வளர்ச்சிக்கான வாய்ப்பாக எடுத்துக்கொள்ள வேண்டும். நேர்மறையான அல்லது எதிர்மறையான பின்னூட்டங்களிலிருந்து கற்றுக் கொண்டு தன்னை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.
எப்போதும் திறந்த மனதுடன் இருந்தால்தான் புதிய கருத்துக்களை ஒருவரால் ஏற்றுக்கொள்ள முடியும். அவை அவருடைய சிந்தனையை கூர்மையாக்கும். செழுமைப்படுத்தும். புதிய சிக்கலான சூழ்நிலைகளிலும் கூட சமாளிக்க உதவும்.
உணர்ச்சிபூர்வமான எண்ணங்களிலிருந்து விடுபட்டு அறிவுப்பூர்வமான எண்ணங்களை ஒருவர் வரவேற்க வேண்டும். வெறும் உணர்ச்சி மட்டுமே எதையும் சாதிக்க உதவாது அறிவோடு கூடிய உணர்ச்சிகள் பகுத்தறிவுக்கு வித்திடும். சரியான முடிவுகளை எடுக்க உதவும்.
ஒருவர் எடுத்த எடுப்பில் தனது வாழ்க்கையை மாற்றிக்கொள்ள முடியாது. அதற்கு தகுந்த காலமும் நேரமும் பிடிக்கும். பொறுமையாக தன்னுடைய எண்ணங்களை மாற்றுவதில் கவனம் வைத்து முயற்சி செய்தால் ஒருவரால் புத்திசாலியாக, சீமானாக, வெற்றியாளராக இந்த உலகில் வலம் வர முடியும்.