வேட்டையாடு விளையாடு திரைப்படத்தில் நடித்து பிரபலமான துணை நடிகர் டேனியல் பாலாஜி இன்று அதிகாலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். மாரடைப்பு என்பது ரத்த உறைவு காரணமாக இதய தசைக்கு ரத்த ஓட்டம் தடைப்படும்போது ஏற்படும் உயிருக்கு ஆபத்தான நிகழ்வாகும். ஒருவருக்கு மாரடைப்பு எந்த நேரத்திலும் ஏற்படலாம் என்றாலும், அதிகப்படியான மாரடைப்புகள் அதிகாலையில் ஏற்படுவது பரவலாக கவனிக்கப்படுகிறது. இதற்குக் காரணம் என்ன என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
The Circadian Rhythm
மனித உடல் சர்க்காடியன் ரிதம் எனப்படும் இயற்கையான 24 மணிநேர உள் கடிகாரத்தில் இயங்குகிறது. இந்த ரிதம் ரத்த அழுத்தம், இதயத்துடிப்பு மற்றும் ஹார்மோன் அளவுகள் உள்பட பல்வேறு உடலியல் செயல்முறைகளை பாதிக்கிறது. இதன் அடிப்படையிலேயே அதிகாலையில் மாரடைப்பு ஏற்படுவதாக சொல்லப்படுகிறது.
அதிகாலையில் மாரடைப்பு ஏற்படுவதற்கான காரணங்கள்:
ரத்த அழுத்தம்: ரத்த அழுத்தம் அதிகாலை 3:00 மணி முதல் காலை 10:00 மணி வரை உயரும் என சொல்லப்படுகிறது. இதை மார்னிங் சர்ஜ் என அழைக்கிறார்கள். இது இதயத்தில் அழுத்தத்தை அதிகரித்து மாரடைப்பைத் தூண்டலாம்.
ஹார்மோன் மாற்றங்கள்: கார்ட்டிசோல் மற்றும் அட்ரினலின் போன்ற ஹார்மோன்கள் வெளியேறும் செயல்பாடு, சர்க்கார்டியன் முறையைப் பின்பற்றியே நடக்கிறது. இந்த ஹார்மோன்கள் ரத்த உறைவு அதிகரிப்பதற்கும், ரத்த நாளங்கள் சுருங்குவதற்கும், இதயத் துடிப்பு அதிகரிக்கவும் பங்களிக்கின்றன. இதன் காரணமாகவும் அதிகாலை வேளையில் மாரடைப்பு ஏற்படலாம்.
தூக்க சுழற்சி: தூக்கத்திலிருந்து விழிப்பு நிலைக்கு மாறும்போது ரத்த ஓட்டம், இதயத் துடிப்பு மற்றும் ரத்த அழுத்தம் ஆகியவற்றில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. அதிகாலையில் தூக்கத்திலிருந்து திடீரென விழிப்பது போன்றவற்றால், இதயத்திற்கு அழுத்தம் ஏற்பட்டு மாரடைப்புக்கு வழி வகுக்கலாம்.
மன அழுத்தம்: அதிகாலை நேரங்கள் என்பது மன அழுத்தத்துடன் தொடர்புடையதாகும். ஏனெனில் வாழ்க்கை பற்றிய சிந்தனைகள் சிலருக்கு அதிகாலை வேலையில் அழுத்தத்தைக் கொடுப்பதாக சொல்லப்படுகிறது. மன அழுத்தம் சில ஹார்மோன்களின் வெளியீட்டைத் தூண்டி ரத்த நாளங்களை பாதிக்கச் செய்கிறது. இதனால் ரத்த அழுத்தம் அதிகரித்து மாரடைப்பு அபாயம் அதிகரிக்கலாம்.
உடல் செயல்பாடு: எழுந்தவுடன் உடற்பயிற்சி செய்வது அல்லது அதிக எடை தூக்குவது போன்ற கடுமையான உடல் செயல்பாடுகளில் ஈடுபடுவதால் இதயத்திற்கு குறிப்பிடத்தக்க அழுத்தம் ஏற்படுகிறது. எனவே காலை வேளையில் உடற்பயிற்சியின்போது ரத்த அழுத்தம் மற்றும் அதிக இதயத்துடிப்பு ஆகியவற்றால், மாரடைப்பு ஏற்படலாம்.
இப்படி, அதிகாலை வேலையில் மாரடைப்பு ஏற்படுவதற்கான பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், எந்த ஒரு குறிப்பிட்ட காரணத்தையும் உறுதியாக நாம் சொல்ல முடியாது. ஆனால் மேலே குறிப்பிட்டுள்ள ஏதோ ஒன்றன் காரணமாகவே அதிகாலை வேளையில் மாரடைப்பு ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. எனவே உங்கள் வாழ்க்கை முறையை ஆரோக்கியமாக வைத்திருப்பதன் மூலம், மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகளை நீங்கள் குறைக்க முடியும்.