

பணிச்சூழலியல் (Ergonomics) என்பது பணியிடங்கள், கருவிகள் மற்றும் அமைப்புகளை பயன்படுத்தும் நபர்களுக்கு ஏற்றவாறு வடிவமைப்பதாகும். இது பணியாளர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக, வேலை செய்யும் சூழலை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. நீண்ட நேரம் கணினியில் வேலை செய்வது போன்ற உடல் நலதிற்கு தீங்கு விளைவிக்கும் செயல்பாடுகளைக் குறைக்கும் வகையில் இதை வடிவமைக்கலாம். கிரேக்க மொழியில் 'எர்கான்' (வேலை) மற்றும் 'நோமோஸ்' (சட்டங்கள்) என்பதிலிருந்து இந்த வார்த்தை உருவானது.
பணிச்சூழலியலின் முக்கிய நோக்கம்: பணியிடத்தில் அசௌகரியத்தை தணிக்கவும், மனித நல்வாழ்வு மற்றும் உற்பத்தித் திறனை மேம்படுத்தவும் பணியிடங்களை வடிவமைப்பதாகும். வேலை செய்வதற்கான இடங்கள் ஊழியர்களுக்கு வசதியாகவும், பாதுகாப்பாகவும் இருப்பதை உறுதி செய்வதற்காக வடிவமைப்பதாகும்.
சிறந்த தோரணையைப் பெற: இது மனித உடலின் வடிவத்துடன் வசதியாக சீரமைக்க வடிவமைப்பாளர்கள் உபகரணங்களை உருவாக்கும் விதத்தை குறிக்கிறது. உயிரி தொழில்நுட்பம் மற்றும் வடிவமைப்பு பொறியியலைப் பயன்படுத்தி அலுவலக தளபாட உற்பத்தியாளர்கள் நாம் பணிபுரியும்போது சிறந்த தோரணையைப் பெற உதவும் வகையில் சில தனித்துவமான தீர்வுகளைக் கொண்டுள்ளனர். எர்கோனாமிக் மேசைகள், நாற்காலிகள், மவுஸ் மற்றும் கீபோர்டு போன்ற பொருட்கள் எர்கோனாமிக்ஸ் கொள்கைகளின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
சரியான இருக்கை அமைப்பு: நாற்காலியின் உயரத்தை சரி செய்து, முழங்கைகள் 90 டிகிரி கோணத்தில் இருக்கவும், கால்கள் தரையைத் தொடவில்லை என்றால், கால் வைக்க உதவும் ஒரு பொருளை பயன்படுத்தவும் என வேலைக்கு ஏற்றவாறு சரியான இருக்கை அமைப்பை அமைப்பதாகும்.
சரியான காட்சி அமைப்பு: கண்களின் நேர்கோட்டில் மானிட்டர் இருக்கும் வகையில் மானிட்டரை கண்களின் மட்டத்திற்கு உயர்த்தி வைப்பது.
இதன் நன்மைகள்:
ஆரோக்கியம்: பணிச்சூழலியல் பணியிடங்கள் பணியாளர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றது. தசைக்கூட்டு அமைப்புகள் தொடர்பான காயங்கள் (MSDs) மற்றும் பிற உடல்நலப் பிரச்னைகளின் அபாயத்தைக் குறைக்கின்றது.
உற்பத்தித்திறன் மற்றும் செயல்திறன்: பணியாளர்களின் சோர்வைக் குறைத்து அவர்கள் மிகவும் வசதியாகவும், திறமையாகவும் வேலை செய்ய முடிவதால் உற்பத்தி திறன் அதிகரிக்கிறது.
மன உறுதி: ஊழியர்கள் தங்கள் பணியிடத்தை பாதுகாப்பானதாகவும், வசதியாகவும் மாற்ற ஊழியர்களை மதிப்புக்குரியவர்களாக உணர வைக்கிறது. இது அவர்களின் மன உறுதியை அதிகரிக்கிறது.
சீரான பணித்திறன்: சரியான பணிச்சூழலியல் அமைப்புகள், பணியாளர்களின் பணித்திறனை மேம்படுத்தி, வேலையில் திருப்தியை அதிகரிக்க உதவுகின்றது. வசதியான பணியிடங்கள் ஊழியர்களின் கவனம் மற்றும் உற்பத்தித்திறனை அதிகரிக்க உதவுகின்றன.