

படிக்க உட்கார்ந்தாலே ஒரு பக்கம் மைண்ட் டிஸ்ட்ராக் ஷன் ஆகுது. இன்னொரு பக்கம் கொட்டாவியா வந்து தூக்கம்தான் வருது. இதுபோன்ற பிரச்னைகள்லதான் பல மாணவர்கள் இருக்காங்க. மாணவச் செல்வங்களே, இத எப்படியாவது நாம கட்டுப்படுத்தியாகணும். நூற்றுக்கு நூறு மதிப்பெண் வாங்குவது மட்டும்தான் படிப்பு இல்ல, அதையும் தாண்டி இந்தப் படிப்பினால நாம என்ன புரிஞ்சுகிட்டோம், இதனால நம்மளுக்கு என்ன பயன் அப்படிங்கிறத நாம கத்துக்க ஆரம்பிச்சோம்னா நாமளும் டாப்பர்தான்! இப்போ நான் சொல்லப்போற இந்த ஏழு வழிமுறைகளைப் படிக்கும்போது, கவனமா பின்பற்றும்போது நீங்களும் தேர்வில் நல்ல மதிப்பெண் வாங்கலாம்!
1. படிக்கும் நேரத்தினை சிறிய பகுதிகளாகப் பிரிக்க வேண்டும்: குறிப்பிட்ட நேரத்துக்கு டைம் வச்சு அதுக்கு இடையில நாம எந்தப் பாடத்தை படிக்கப்போறோம் என்பதை முதல்ல முடிவு எடுங்க. 30 நிமிடம் படிக்கிறோம் என்றால் முழு கவனத்தோட படிங்க. முதல்ல ஆரம்பிக்கும்போது கஷ்டமாகத்தான் இருக்கும். பழகப் பழக சுலபமாகிவிடும். அதுக்கப்புறம் ஒரு கால் மணி நேரம் ஓய்வு எடுத்துக்கலாம். அந்த ஓய்வுலயும் சும்மா இருக்காம; நடக்கிறது, அம்மா கூட பேசறது, தம்பிங்க கூட விளையாடுறதுன்னு இருக்கணும். அதுக்கப்புறம் நீங்க படிச்சதுக்கு ஒரு மதிப்பிடா உங்களுக்கு நீங்களே கொடுத்துக்கிடணும்.
2. படிக்குமிடத்தை தேர்வு செய்யுங்கள்: உங்களுக்கு எந்த இடத்தில் படிப்பதற்கு ஏதுவாக இருக்கிறதோ அந்த இடத்திலேயே படிக்க ஆரம்பியுங்கள். பொதுவாக, மொட்டை மாடி, பால்கனி, வீட்டிற்குள் இப்படி ஏதாவது ஒரு இடம் இருக்கும். அந்த இடத்தில் உட்கார்ந்து படிக்க ஆரம்பியுங்கள். படிக்கும் இடத்தினை பொறுத்துதான், நமது எண்ணங்களும் அதற்கேற்றாற்போல் செயல்படும். அதனால் உங்களோட விருப்ப இடங்களை முதலில் நீங்களே தேர்வு செய்யுங்கள்.
3. சுறுசுறுப்போடு படியுங்கள்: புத்தகத்தை திறக்கும்போதே, ‘என்னடா இது…’ அப்படின்னு இல்லாம ஒரு ஆர்வத்தோட ஓபன் பண்ணுங்க. ஒவ்வொரு வரிகளையும் வாசிங்க, அதுல என்ன சொல்ல வராங்கன்னு புரிஞ்சுக்க ட்ரை பண்ணுங்க. சோர்வா இருக்கிற மாதிரி ஃபீல் ஆச்சுன்னா, உடனே எந்திரிச்சிடுங்க. அஞ்சு நிமிஷம் பிரேக் எடுத்துட்டு மறுபடியும் அதே சுறுசுறுப்போட படிக்க உட்காருங்க. இப்படி நமக்குள்ளே ஒரு உத்வேக ஆற்றலை வளர்த்துக்கணும்.
4. உண்மையோடு பொருத்திப் பாருங்கள்: வாசித்து முடித்துவிட்டு, அதில் என்ன சொல்ல வர்றாங்க என்பதை உண்மையோடு பொருத்திப் பாருங்க. படித்ததை உங்களோட வார்த்தைகள்ல பொருத்தி எக்ஸ்ப்ளைன் பண்ணிப் பாருங்க. அப்படியும் புரியவில்லை என்றால் மறுபடியும் படிங்க. ஏதாவது ஒரு பொருளோடையோ அல்லது கதையோட அர்த்தங்கள், படங்கள், கலர் இப்படின்னு நீங்க படிச்சத அந்த இதுல ஒப்பிட்டுப் பாருங்க.
5. குறிப்பு எடுக்கப் பழகுங்கள்: படிக்கும்போதோ அல்லது ஆசிரியர் பாடம் நடத்தும்போதோ புத்தகத்தில் முக்கியமான வரிகளையோ, வாக்கியங்களையோ குறித்துக் கொள்ளுங்கள். இப்படிக் குறிப்பதனால், மறுபடியும் அந்த வரிகளை பார்க்கும்போது ஏற்கெனவே, படித்த ஒரு ஞாபகம் வரும். இதனால் சுலபமாகப் படிக்க முடியும். அதுமட்டுமில்லாமல், படித்ததை உங்களுடைய சொந்த வரியில் எழுதிப் பாருங்கள்.
6. அடுத்தவர்களுக்கு சொல்லிக் கொடுங்கள்: நீங்கள் படித்ததை, உங்களது நண்பர்களுக்கு சொல்லிக் கொடுங்கள். அப்படி சொல்லிக் கொடுக்கும்பொழுது நீங்கள் படித்தது இரண்டு மடங்கு உங்களுக்கு ஞாபகத்தில் இருக்கும். பத்து முறை படிப்பதற்கு, அதனை ஒருவருக்கு ஒருமுறை சொல்லிக் கொடுப்பதற்கு சமமாகும். நீங்க படிச்சதை உங்களோட மாடுலேஷன்ல சொல்லும்போது உங்களுக்கு கண்டிப்பா மறக்கவே மறக்காது.
7. கவனச் சிதறலை கையாள வேண்டும்: படிக்கும்போது, நமக்குப் பக்கத்தில் இருக்கும் செல்போனை தூரத்தில் வைக்க வேண்டும். அல்லது ஸ்விட்ச் ஆப் செய்ய வேண்டும். டிவி அருகிலேயோ, சத்தமான இடங்களிலோ படிக்கும்போது கவனச் சிதறல் அதிகமாக ஏற்படும். எனவே, நமக்கு என்னவெல்லாம் படிப்புக்கு இடையூறா கவன சிதறல்ல இருக்குதுன்னு, முதல்ல கவனிச்சு அதை நாம சரி பண்ண பார்க்கணும்.
மாணவச் செல்வங்களே, படிப்பதில் இந்த ஏழு உத்திகளை கடைபிடிச்சீங்கனா நீங்களும் தேர்வில் நல்ல மதிப்பெண் எடுக்கலாம். அதோடு, பாடத்தை நல்லா படிச்சு புரிஞ்சுகிட்டோம் என்கிற ஒரு நிம்மதியும் ஏற்படும்.