வீட்டில் நாய் வளர்ப்பவர்கள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டிய 7 விஷயங்கள்!

Dog
Essential Guidelines for Dog Care
Published on

வீட்டில் செல்லப்பிராணிகளை வளர்ப்பது மிகச் சிறந்த ஒரு அனுபவமாகும். அதிலும் நாயை வளர்த்தால், அது செய்யும் சேட்டைகளே உங்கள் வாழ்வில் உள்ள பாதி பிரச்சனைகளை மறக்கடித்துவிடும். இருப்பினும், நாய் வளர்ப்பவர்கள் அவற்றின் நல்வாழ்வை உறுதிப்படுத்த சில வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டியது அவசியம். அவை என்னவென்று இப்பதிவில் பார்க்கலாம். 

  1. பாதுகாப்பு மற்றும் வசதியான சூழல்: உங்கள் நாய்களுக்கு பாதுகாப்பு மற்றும் வசதியான சூழலை உருவாக்கவும். விஷத் தாவரங்கள், ரசாயனங்கள் மற்றும் நாய்கள் விழுங்கக்கூடிய சிறிய பொருட்களின் ஆபத்துக்கள் உங்கள் வீட்டில் இல்லாமல் இருப்பதை உறுதி செய்யவும். உங்கள் நாய்கள் ஓய்வெடுக்க வசதியான இடத்தை தயார் செய்து கொடுப்பது அவசியம். 

  2. சரியான உணவு: உங்கள் நாய்க்கு அவற்றின் வயது, அளவு மற்றும் இனத்திற்கு ஏற்ப சரியான உணவுகளை உண்ணக் கொடுங்கள். உங்கள் நாய்க்கு என்ன கொடுக்கலாம் என்பதை தெரிந்து கொள்ள கால்நடை மருத்துவரை அணுகவும். அவ்வப்போது நாயை வெளியே கூட்டிச்சென்று சற்று உடற்பயிற்சி கொடுங்கள். இவை அனைத்தும் உங்கள் நாயின் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியம். 

  3. முறையான பராமரிப்பு: நாய்களை வளர்த்தால் மட்டும் போதாது, அவற்றை முறையாக பராமரிப்பது மிகவும் முக்கியம். தடுப்பூசி, சுகாதார பரிசோதனை போன்றவற்றை வழக்கமாக செய்ய திட்டமிடுங்கள். எந்த ஒரு உடல்நலப் பிரச்சனையையும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல், உடனடியாக கால்நடை மருத்துவரிடம் அழைத்துச் சென்று நாயின் ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது அவசியம். 

  4. சுகாதாரம்: நாய்களுக்கென்று தனியான இடத்தை பராமரிக்கவும். அவை சுகாதாரமற்ற சூழலுக்கு செல்லாமல் பார்த்துக் கொள்ளவும். குறிப்பாக தேவையில்லாமல் வீட்டுக்குள் நுழைவதைத் தவிர்க்கவும். நோய்த் தொற்றுக்களைத் தடுக்க, நாய்களின் நகங்கள் மற்றும் பாதங்களை பராமரிக்கவும். அவ்வப்போது அவற்றின் காதுகளை சுத்தம் செய்தல், வாயை சுத்தம் செய்தல் போன்ற செயல்பாடுகளில் ஈடுபடுங்கள். இது நாயின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நல்லது. 

  5. பயிற்சி: சிறுவயதிலிருந்தே உங்கள் நாயை மற்றவர்களுடன் சகஜமாய் பழக பழக்குங்கள். வெவ்வேறு சூழல்கள், மனிதர்கள் மற்றும் பிற விலங்குகளுக்கு அவற்றை அறிமுகப்படுத்தி, நட்பாக இருக்க கற்றுக்கொடுங்கள். குறிப்பாக நீங்கள் சொல்வதை அவை கேட்கும்படியான பயிற்சிகளை அளிக்கவும். 

  6. நேரம், அன்பு, கவனம்: நாய்கள் சமூக விலங்குகள். அவை தங்களின் எஜமானனின் அன்பு, கவனிப்பு மற்றும் தோழமையை அதிகம் எதிர்பார்க்கும். எனவே உங்கள் வீட்டில் உள்ள நாயுடன் நேரம் செலவிட்டு விளையாடுங்கள். நீங்கள் அவற்றை கவனிக்கிறீர்கள் என்பதை தெரியப்படுத்துங்கள். இது உங்களுக்கும் உங்கள் நாய்க்கும் இடையேயான பிணைப்பை அதிகரிக்கும். 

  7. பாதுகாப்பு நடவடிக்கைகள்: வீட்டின் உட்புறத்திலும் வெளிப்புறத்திலும் உங்கள் நாய் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்யவும். வெளியே அழைத்துச் செல்லும்போது முறையாக சங்கிலியில் கட்டி அழைத்துச் செல்லவும். உங்கள் வீட்டைவிட்டு வெளியே செல்லாதவாறு தடுப்புகளை அமைக்கவும். உங்கள் நாய்க்கான அடையாளமாக கழுத்தில் பட்டை மாட்டவும். இப்போதெல்லாம் தொலைந்து போன நாயை கண்டுபிடிக்க ஜிபிஎஸ் கருவிகள் வந்துவிட்டன. முடிந்தால் அதில் ஒன்றை வாங்கி நாயின் கழுத்துப்பட்டையில் மாட்டி விடுங்கள். இது உங்களது நாயின் பாதுகாப்பை அதிகரிக்கும். 

இதையும் படியுங்கள்:
நாய் பிரியர்களே… இனி இந்த நாய்களை இந்தியாவில் வளர்க்கவே கூடாதாம்!
Dog

நாய் வளர்ப்பில் ஈடுபடும் அனைவருமே இந்த 7 விஷயங்களை கருத்தில் கொள்ள வேண்டியது அவசியம். இதன் மூலமாக உங்கள் நாயின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தி பல மதிப்புமிக்க அனுபவங்களை நீங்கள் பெறலாம். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com