
இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் தங்கள் வாழ்க்கையைத் திட்டமிடுவதில் பல சவால்களை எதிர்கொள்கின்றனர். மாறிவரும் வாழ்க்கை முறை, புதிய தேவைகள், பணவீக்கம் மற்றும் சமூக அழுத்தங்கள் எனப் பல காரணிகள் நிதி மேலாண்மையை இன்னும் சிக்கலாக்குகின்றன. இந்நிலையில், புதிதாக திருமணமாகி குடும்ப வாழ்க்கையை தொடங்கும் இளைஞர்களுக்கு, குடும்ப பட்ஜெட்டை எவ்வாறு ஸ்மார்ட்டாகத் திட்டமிடுவது என்பது பற்றி இங்கே தெரிந்து கொள்வோம்.
1.வருமானம் மற்றும் செலவுகளை முழுமையாக அறிந்து கொள்ளுங்கள்:
வருமானத்தைக் கணக்கிடுங்கள்: உங்கள் மாத வருமானம் அதாவது சம்பளம், பிற வருமான ஆதாரங்கள் எவ்வளவு என்பதைத் துல்லியமாக கணக்கிடுங்கள்.
செலவுகளைப் பட்டியலிடுங்கள்: ஒரு மாதம் முழுவதும் செய்யக்கூடிய உங்கள் அனைத்து செலவுகளையும் வாடகை, மளிகை, போக்குவரத்து, மின்சாரம், தொலைபேசி கட்டணம், ஈ.எம்.ஐ, பொழுதுபோக்கு, வெளியூர் பயணம், குழந்தைகளின் கல்வி போன்றவற்றை பட்டியலிடுங்கள். சிறிய செலவுகளையும் மறக்காமல் குறித்து வையுங்கள்.
2. 50/30/20 விதியைப் பின்பற்றுங்கள்
இது பட்ஜெட் திட்டமிடலுக்கான எளிமையான மற்றும் பயனளிக்கும் ஒரு விதிமுறை;
50% அத்தியாவசியத் தேவைகளுக்கு: உங்கள் வருமானத்தில் 50% வாடகை, மளிகை, போக்குவரத்து, அடிப்படை உபயோகப் பொருட்கள் போன்ற அத்தியாவசியத் தேவைகளுக்கு ஒதுக்கலாம்.
30% ஆசைகளுக்காக: மீதமுள்ள 30% பொழுதுபோக்கு, வெளியூர் பயணம், புதிய உடைகள், பிடித்த உணவகங்களில் சாப்பிடுவது போன்ற ஆசைகளுக்காக ஒதுக்கலாம்.
20% சேமிப்பு மற்றும் முதலீடு: எதிர்காலத்திற்காக குறைந்தபட்சம் 20% பணத்தை சேமிக்கவும் முதலீடு செய்யவும் பயன்படுத்த வேண்டும். இது ஓய்வூதியம், குழந்தைகளின் கல்வி, வீடு வாங்குவது போன்ற நீண்டகால இலக்குகளுக்கு உதவும்.
3. தெளிவாக இலக்குகளை நிர்ணயியுங்கள்:
ஒரு விடுமுறை பயணத்திற்கு சேமிப்பது, புதிய கேட்ஜெட் வாங்குவது, ஒரு சிறிய கடனை அடைப்பது போன்ற குறுகிய கால இலக்குகளையும், சொந்த வீடு வாங்குவது, குழந்தைகளின் கல்வி நிதி, ஓய்வூதியத் திட்டம், கார் வாங்குவது போன்ற நீண்ட கால இலக்குகளையும் நிர்ணயிக்கும்போது, அவற்றுக்கு எவ்வளவு பணம் தேவைப்படும், எவ்வளவு காலத்தில் அடைய வேண்டும் என்பதைத் தெளிவாக எழுதுங்கள். இது சேமிக்கும் ஆர்வத்தைத் தூண்டும்.
4. அவசர கால நிதியை உருவாக்குங்கள்:
குடும்ப பட்ஜெட்டில் மிக முக்கியமான பகுதி அவசர கால நிதி. எதிர்பாராத மருத்துவச் செலவுகள், வேலை இழப்பு போன்ற சூழ்நிலைகளைச் சமாளிக்க இது உதவும்.
குறைந்தபட்சம் 3 முதல் 6 மாத செலவுகளுக்கு சமமான தொகையை அவசரகால நிதியாக சேமித்து வைக்க வேண்டும். இந்த நிதியை எளிதில் எடுக்கக்கூடிய ஒரு வங்கிக் சேமிப்புக் கணக்கில் வைத்திருக்கலாம்.
5. கடன் மேலாண்மையை திட்டமிடுங்கள்:
இளைஞர்கள் மத்தியில் கிரெடிட் கார்டு கடன்கள் மற்றும் தனிநபர் கடன்கள் அதிகமாக இருப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. அதிக வட்டி விகிதம் கொண்ட கடன்களை முதலில் அடைப்பதற்கு முன்னுரிமை கொடுங்கள்.
தேவையில்லாத கடன்களைத் தவிர்த்து, அவசியமான கடன்களை மட்டும் திட்டமிட்டுப் பெறுங்கள்.
6. டிஜிட்டல் கருவிகளைப் பயன்படுத்துங்கள்:
பல பட்ஜெட் திட்டமிடும் செயலிகள், நிதி மேலாண்மை தளங்கள் உள்ளன. இவை உங்கள் செலவுகளைக் கண்காணிக்கவும், வரவு செலவுகளைப் பகுப்பாய்வு செய்யவும் உதவுகின்றன.
7. முதலீடுகளைத் தொடங்குங்கள்:
சேமிப்பு என்பது ஒரு ஆரம்ப படி. உங்கள் பணத்தைப் பெருக்க முதலீடு செய்வது அவசியம்.
மியூச்சுவல் ஃபண்டுகள், பங்குச் சந்தை, பிபிஎஃப் போன்ற முதலீட்டு வாய்ப்புகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
சிறு வயதிலேயே முதலீடு செய்யத் தொடங்குவது, எதிர்காலத்தில் பெரிய தொகையை ஈட்ட உதவும்.
8. குடும்பத்துடன் கலந்துரையாடுங்கள்:
பட்ஜெட் திட்டமிடல் என்பது குடும்பத்தின் கூட்டு முயற்சி ஆகும். உங்கள் துணையுடன் வெளிப்படையாக நிதி சார்ந்த விஷயங்களைப் பேசுங்கள்.
ஒவ்வொருவரின் நிதிப் பொறுப்புகளையும் தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள்.
இவ்வாறு கலந்து பேசி முடிவுகளை எடுப்பதன் மூலம், பட்ஜெட்டை சிறப்பாக செயல்படுத்த முடியும்.
9. பட்ஜெட்டை தொடர்ந்து மதிப்பாய்வு செய்யுங்கள்
நீங்கள் திட்டமிட்ட பட்ஜெட் என்பது நிலையானது அல்ல. வாழ்க்கைச் சூழ்நிலைகள் மாறும்போது, உங்கள் தேவைகளும் செலவுகளும் மாறும்.
மாதாந்திரம் அல்லது காலாண்டுக்கு ஒருமுறை உங்கள் பட்ஜெட்டில் தேவைக்கேற்ப மாற்றங்களைச் செய்யுங்கள்.
இவ்வாறு நீங்களும் பட்ஜெட்டை திட்டமிடுவதன் மூலம், நிதி ரீதியாக சிறந்த எதிர்காலத்தை உருவாக்கி, தங்கள் குடும்பத்திற்கு மகிழ்ச்சியான வாழ்க்கையை வழங்க முடியும்.