காய்கறி ஷாப்பிங்கில் தெரிந்துகொள்ள வேண்டிய அத்தியாவசிய ரகசியங்கள்!

vegetables shopping
vegetables
Published on

வீட்டு சமையலுக்குத் தேவையான காய்கறிகளை முதன் முதலாக வாங்கப் போகிறீர்களா? காய்கறிகளின் தரம் அறிந்து வாங்க சில அத்தியாவசியமான குறிப்புகளை இந்தப் பதிவில் காண்போம்.

நீளமான வெளிர் பச்சை நிற மிளகாயில் அதிகம் காரம் இருக்காது. குட்டையான கரும்பச்சை நிறத்தில் இருக்கும் மிளகாயில் அதிக காரம் இருக்கும்.

கிழங்கு வகைகள், வெங்காயம், வாழைக்காய், மாங்காய் போன்றவற்றை வாங்கும்போது விரல்களால் சற்று அழுத்திப் பார்க்க வேண்டும். அவை அழுந்தினால் வாங்கக் கூடாது. கிழங்கு வகைகள், வெங்காயத்தை மூடி வைக்காது,. காற்றாட பரப்பி வைக்க வேண்டும்.

காலிபிளவரை வாங்கும்போது பூத்து விரிந்ததை வாங்கக் கூடாது. அவை சுவையாக இருக்காது. காலிபிளவர் பூ வெண்மையாகவும், அழுத்தமாகவும் நல்ல கனமாகவும் இருக்க வேண்டும்.

தேங்காய் வாங்கும்போது உள்ளே தண்ணீர் நிறைய இருப்பதை உறுதிப்படுத்தி குலுக்கிப் பார்த்து வாங்க வேண்டும். தேங்காயை சரிபாதியாக உடைக்க தண்ணீரில் நனைத்து பின்னர் உடைக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
மழைக்காலத்தில் படுக்கையறையை கதகதப்பாக வைத்திருக்க சில யோசனைகள்!
vegetables shopping

முளைக்கீரை, அரைக்கீரை போன்றவற்றில் தண்டுகள் பெருத்திருந்தால் கீரை சுவையாக இருக்காது. தண்டு பெருக்காத கீரையாகப் பார்த்து தேர்ந்தெடுக்க வேண்டும்.

முற்றிலுமாக பழுத்த தக்காளிகளை விட, அரை அல்லது முக்கால் பாகம் பழுத்த தக்காளிகள் சமையலுக்கு சுவையாக இருக்கும்.

கருணைக்கிழங்கு நல்ல சிவந்த நிறத்துடன் காணப்பட்டால் அதுதான் நல்ல கிழங்கு. அது சுவையாக இருப்பதுடன் சீக்கிரமாகவும் வெந்துவிடும்.

முட்டைக்கோஸ் வாங்கும்போது நல்ல கனமாக, இலை பிரியாமலும் சற்று பச்சை நிறமாக இருப்பதாகவும் பார்த்து வாங்க வேண்டும்.

நூல்கோல், முள்ளங்கி, சுரைக்காய், சௌசௌ, பீர்க்கங்காய் போன்றவற்றை நகத்தினால் அழுத்திப் பார்க்க வேண்டும். நகம் இறங்கினால் வாங்கலாம். நகம் இறங்காவிட்டால் வாங்கக் கூடாது. அவை முற்றல்.

பாகற்காயை இரண்டாக வெட்டி வைத்து விட்டால் பழுத்து விடாமல் பசுமையாக இருக்கும்.

பீட்ரூட், கேரட், முள்ளங்கி, கோவைக்காய் போன்றவற்றை ஃப்ரிட்ஜில் வைக்கும்போது இரண்டு பக்க முனைகளையும் வெட்டிவிட்டு வைக்க வேண்டும். அப்பொழுதுதான் அழுகாமல் இருக்கும். கொத்தமல்லி, புதினாவின் வேர்களை நறுக்கி விட்டு பிளாஸ்டிக் டப்பாவில் போட்டு வைக்க வேண்டும். காயாமல் இருக்கும்.

இதையும் படியுங்கள்:
முதுமையை முறியடிக்கும் வாழ்க்கையின் 7 ரகசியங்கள்!
vegetables shopping

கறிவேப்பிலையை இலை இலையாக உருவி ஒரு கவரில் போட்டு வைக்கலாம். தேங்காயை துருவி டப்பாவில் போட்டு வைத்தால் வீணாகாமல் இருக்கும். உபயோகிப்பதும் எளிது. பூசணி, பரங்கி பத்தைகளில் உள்ள விதைகளை நீக்கி, தோலையும் சீவி ஆறு ஏழு துண்டுகளாக நறுக்கி வைத்தால் கெடாமல் இருக்கும்.

மிகவும் சின்ன வெங்காயத்தை ஒரு பிளாஸ்டிக் பைக்குள் போட்டு, அதை அப்படியே பிரிட்ஜில் வைத்து, மறுநாள் எடுத்து உரித்தால் தோலை சுலபமாக உரிக்க முடியும். கண்ணிலும் தண்ணீர் வராது.

பச்சைக் காய்கறி கூடை மீது ஈரத் துணியால் மூடினால் வாடாமல் இருக்கும்.

மழைக்காலத்தில் உப்பு ஜாடியில் இரண்டு பச்சை மிளகாய் போட்டு வைத்தால் உப்பு நீர்த்துப் போகாது.

ஒரு கண்ணாடி டம்ளரில் நீர் ஊற்றி அதில் கொத்தமல்லியின் காம்பு நீரில் மூழ்கி இருக்குமாறு வைத்தால் கொத்தமல்லி ஃபிரஷ்ஷாக இருக்கும்.

குளிர்ந்த நீரில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து அதில் உலர்ந்த காய்கறிகளை ஒரு மணி நேரம் போட்டு வைத்தால் காய்கறிகளின் உலர்வுத் தன்மை நீங்கி, புதிது போல் ஆகிவிடும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com