
அறுபது வயதைக் கடந்த பின்னும் கீழ்க்காணும் ஏழு செயல்களை நீங்களே செய்து கொள்கிறீர்கள் என்றால், நீங்கள் சரியான முறையில் உங்கள் முதுமையை எதிர்கொள்வதாக அர்த்தம். 60 வயதைக் கடந்துவிட்டால் பணியிலிருந்து விலக்கி, நம்மை ஓய்வெடுக்கச் சொல்லி வீட்டுக்கு அனுப்பி விடுகின்றனர். அறுபது வயதோடு நம் வாழ்வு முடிந்து போவதில்லை. நம் வாழ்க்கை அனுபவங்களை பிறருடன் பகிர்ந்து அவர்களுக்கு வழிகாட்டவும், நம் வாழ்வின் அடுத்த கட்டத்திற்கு சென்று, முதுமையை முறையாக எதிர்கொண்டு ஏற்றுக்கொள்ளவும் வேண்டிய நேரம் அது. நம் தகுதியை நாமே மதிப்பீடு செய்து கொள்ள, இப்பதிவில் கூறப்பட்டிருக்கும் ஏழு செயல்களை பிறர் துணையின்றி நாமே செய்துகொள்ள முடியுமா என்பதைப் பார்ப்போம்.
1. வரவு, செலவுகளை கையாளும் விதம்: உங்களின் வங்கிக் கணக்கிற்கு எங்கிருந்தெல்லாம் பணம் வருகிறது, அவற்றை எந்த மாதிரி செலவுகளுக்கெல்லாம், நீங்கள் பயன்படுத்துகிறீர்கள், அதாவது செக் புக் மூலமா அல்லது ஆன்-லைன் பரிவர்த்தனையா என்பதையெல்லாம் தெரிந்து வைத்திருக்கிறீர்கள் என்றால் நீங்கள் முழுமையான அறிவாற்றலுடன் தகுதியானவராக இருக்கிறீர்கள்.
2. தொழில் நுட்ப அறிவு பெற்றிருத்தல்: மாறிவரும் சவால்கள் நிறைந்த நடைமுறைக்கேற்ப, ஸ்மார்ட் போனில் தேவையான செயலிகளை பதிவிறக்கம் செய்யவும், இன்டர்நெட் சேவையை கையாளவும் தெரிந்திருப்பது என்பது கற்றுக் கொள்வதில் உங்களுக்குள்ள ஆர்வத்தையும், மூளையின் செயல் திறனையும் காட்டும்.
3. தனித்துப் பயணங்கள் மேற்கொள்ளல்: உங்களுக்குத் தேவையான உடைமைகளை நீங்களே பையில் அடுக்கி, பயண ஏற்பாடுகள் செய்து வேறு ஊர்களுக்கு சென்று வருவது மற்றொரு சவாலான விஷயம். அது உங்களின் தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் காட்டுவதோடு, புதிய இடங்களின் கலாசாரத்தை அறியவும், புதிய சூழலுக்கு உங்களைப் பொருத்திக் கொள்ளும் திறனை வளர்க்கவும் உங்களுக்கு உதவும்.
4. உங்கள் உடற் தகுதியை பராமரித்தல்: சரியான நேரத்தில், சரியான உணவு வகைகளை உட்கொள்ளல், உடற்பயிற்சி செய்தல், குறிப்பிட்ட இடைவெளிகளில் உடற் பரிசோதனைகள் செய்து கொள்வது போன்ற பழக்க வழக்கங்களை தொடர்ந்து பின்பற்றுவது நீங்கள் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளித்து முதுமைக்கு முட்டுக்கட்டை போடுவதைக் குறிக்கும்.
5. சமூக நலனில் அக்கறை: சமூக நலனில் அக்கறை கொண்டு, தன்னார்வ சேவை நிறுவனத்தினருடன் இணைந்து செயலாற்றுவதும் உங்கள் சுறுசுறுப்பான வாழ்வியல் முறையை வெளிப்படுத்த உதவி புரியும்.
6. பிறர் மீது செலுத்தும் அன்பை தன் மீதும் காட்டுதல்: மற்றவர் மீது காட்டும் அன்பையும் அக்கறையையும், சிறிது அளவும் குறையாமல் உங்கள் மீதும் காட்டுவது நேர்மறை எண்ணங்களை உருவாக்கவும் மனோபலம் அதிகரிக்கவும் உதவும். உடலில் உருவாகும் மாற்றங்களும், இயலாமையும் இயற்கை என்றறிந்து இயல்பாக இருப்பதற்குக் கற்றுக்கொள்ளுதல்.
7. புதுப் புது விஷயங்களில் ஆர்வம் காட்டுதல்: புது வகையான பொழுதுபோக்கு அம்சங்களைக் கண்டறிவதில் ஆர்வம், தான் வசிக்கும் பகுதியிலேயே உள்ள புது இடங்களுக்குச் சென்று வருவது போன்ற செயல்களும் உங்கள் மூளையை கூர்மையாக வைத்திருக்க உதவும்.
இவற்றையெல்லாம் நீங்கள் செய்து வருகிறீர்கள் என்றால் அறுபதுக்குப் பின்னும் உங்கள் வாழ்வு வளமாகும்.