
அன்றாட வாழ்வில் பலரும் பல்வேறு உடல் சார்ந்த பிரச்னைகளை சந்தித்துக் கொண்டிருப்போம். இவை நமது தினசரி உணவுப் பழக்கம் மற்றும் வாழ்வியல் சம்பந்தப்பட்டவைகளாகவே இருக்கும். இவற்றுக்கு அவ்வப்போது சில எளிய கைவைத்தியங்களை நாமாகவே அல்லது வீட்டுப் பெரியவர்கள் கூறியோ செய்து நிவாரணம் கண்டிருப்போம். பிறகு அது நமக்கு மறந்தேபோய் இருக்கும். அது போன்று அவசியம் தெரிந்து வைத்திருக்க வேண்டிய சில கைவைத்தியக் குறிப்புகளை இந்தப் பதிவில் காண்போம்.
* எண்ணெய் பலகாரம் சாப்பிட்டு நெஞ்சு எரிச்சல் வந்து கஷ்டப்படும்போது சில ரொட்டித் துண்டுகளை மெதுவாக மென்று சாப்பிட்டால் நெஞ்சு எரிச்சல் நீங்கும்.
* நெஞ்சு கரிப்பு இருந்து சாப்பிட முடியாதபோது பொரித்த பெருங்காயத்தூளை சிறிதளவு நீர் மோரில் கலந்து குடிக்கலாம்.
* உடம்பில் சுளுக்கு பிடித்துக் கொண்டால் உடனே அந்த இடத்தில் ஐஸ்கட்டி ஒத்தடம் கொடுத்தால் அந்த இடத்தில் வீக்கம் வராது. வலியும் குறைந்து நிவாரணம் தரும்.
* உடம்பில் வாயு அதிகமாகும்போது சில நேரங்களில் ஏதாவது ஒரு பகுதியில் சுளுக்கு பிடித்து வேதனை தரும். அப்போது பெருங்காயத்தை வாழைப்பழத்தில் வைத்து அப்படியே சாப்பிட வேண்டும். அதுபோல் சாப்பிட்டால் வாயு பிடிப்பு குணம் பெறுவதை நன்கு உணரலாம்.
* சில நேரங்களில் கை, கால்களில் எரிச்சல் ஏற்படுவதுண்டு. அதற்கு பாகற்காயை நைசாக கெட்டியாக அரைத்து எரிச்சல் உள்ள இடத்தில் பூசி வந்தால் எரிச்சல் குறைவதை நன்கு உணரலாம்.
* கண் எரிச்சலின்போது இரவில் படுக்கும் முன் பச்சை வாழைப்பழத்தை வட்டமாக வெட்டி கண்களின் மேல் வைக்க நல்ல பலன் கிடைக்கும்.
* ஒரு வாழைப்பழத்துடன் சிறிது பெருங்காயம் வைத்து சாப்பிட்டால் உணவு செரிக்காமல் இருந்தால் நல்ல பலன் தரும்.
* சீரகத்தை வறுத்து தூள் செய்து அதை ஒரு வாழைப்பழத்தில் வைத்து சாப்பிட நல்ல தூக்கம் வரும்.
* குழந்தையின் நாக்கில் அடிக்கடி தேன் தடவி வந்தால் பேச்சு தெளிவாகும். அதேபோல் வசம்பை உரசி தேனுடன் குழைத்து கொடுத்தால் சளி, மாந்தம், வாந்தி போன்றவை நிற்கும்.
* தேனி கொட்டிய இடத்தில் பேக்கிங் சோடாவை தண்ணீரில் குழைத்து போட உடனே விஷம் இறங்கும். வலியும் வேதனையும் உடனே குறையும்.
* நெருப்புத் தணலில் கைப்பிடி அளவு எள்ளுப் பொடி தூவி அதிலிருந்து கிளம்பும் புகையை சுவாசித்தால் தலைபாரம் மண்டையில் நீர் கோர்த்திருப்பது முதலியவை நீங்கும்.
* புதினா இலையை காய வைத்து அதனுடன் வேப்பம்குச்சி, உப்பு சேர்த்து பொடித்து அதை கொண்டு பல தேய்த்தால் வாய் மணக்கும். பல்லும் பளிச்சென்று ஆகி பல் நோய் வராமல் தடுக்கும்.
* தலைச்சுற்றலுக்கு அன்னாசிப்பழம், தக்காளி, ஆரஞ்சுபழம், நெல்லிக்காய் இவற்றில் ஏதாவது ஒன்று சாப்பிட்டு வர நல்ல பலன் கிடைக்கும்.
* நார்த்த இலையை தண்ணீரில் கொதிக்க விட்டு வாய் கொப்பளிக்க வாய் துர்நாற்றம் குறையும். பல், ஈறு வலி பாதிப்புகள் குறையும்.