
அடிக்கடி மின்சாரக் கட்டணங்கள் விலை ஏறிக்கொண்டே உள்ளது. விலை ஏறும் கட்டணங்களை நம்மால் குறைக்க முடியாது. ஆனால், நம் வீட்டில் மின்சார உபயோகத்தினை கட்டுப்படுத்துவதன் மூலம், மின்சாரப் பயன்பாட்டை குறைத்து அதன் மூலம் கட்டணங்களைக் குறைக்க முடியும்.
மின்சார சிக்கனத்தின் முதல்படியாக வீட்டில் மின்கசிவு இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அதன் தொடக்கமாக மின்சாரக் கம்பத்தில் இருந்து உங்கள் வீட்டு மெயின் பாக்ஸிற்கு வரும் வயர்கள் தரமானதா? என்று சோதனை செய்துக் கொள்ளுங்கள். தரமற்ற வயர்கள் மின்சாரத்தை கசிய விடும். அது மின் இழப்பை ஏற்படுத்தும். நறுக்கிய வயர்களில் எப்போதும் ஜாயின்ட் அடிக்காதீர்கள். இதனால் மின் கசிவின்றி மின்சாரம் பாயும். இதனால் மின்சார இழப்பும் குறையும்.
வீட்டில் டங்ஸ்டன் இழை குண்டு பல்புகள், ஸ்டார்ட்டர் டியூப் லைட்கள் போன்ற அதிக மின்சாரத்தை இழுக்கும் பழைய காலத்து லைட்டுகளை எல்லாம் மாற்றி விடுங்கள். அதற்கு மாற்றாக எல்இடி குண்டு பல்புகள், எல்இடி டியூப் லைட்கள் ஆகியவற்றை பயன்படுத்துங்கள். இவை விலையும் குறைவு, அதேநேரம் நீடித்து உழைக்கும் தன்மை கொண்டது. 60W பழைய குண்டு பல்பின் வெளிச்சத்தை விட 10W எல்இடி குண்டு பல்பு அதிக வெளிச்சத்தை தரும்.
அடிக்கடி பியூஸ் போகும் பிரச்னை எல்இடி பல்புகளில் கிடையாது. இவை சராசரியாக 1 ஆண்டுக்கும் மேல் உழைக்கின்றன. 1000 சதுர அடி கொண்ட வீட்டின் வெளிச்சத்திற்கு முன்பு குறைந்தது 250W தேவைப்படும். எல்இடி பல்புகளை பயன்படுத்தினால் 80W முதல் அதிகபட்சம் 120W வரைதான் மின்சாரம் செலவாகும். இதனால் லைட்களுக்கான மின்சாரத் தேவை பாதிக்கும் மேல் குறையும்.
வீட்டில் அதிக மின்சாரத்தை இழுக்கும் ஒரு விஷயம் பேன்கள்தான். சீலீங் பேன்களை விட, டேபிள் பேன்கள் அதிக மின்சாரத்தை எடுத்துக் கொள்கின்றன. டேபிள் பேன்களின் பயன்பாட்டை குறைத்து, சீலிங் பேன்களை அதிகம் உபயோகித்து பாருங்கள். அதிலும், சற்று சிக்கனம் செய்ய விரும்பினால், 5ல் இருக்கும் வேகத்தை 4 ஆக குறைத்து பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். இது மின்சாரத்தை பெருமளவில் சிக்கனப்படுத்தும்.
இன்றைய காலத்தில் ஏர் கண்டிஷனருக்கு நாம் பழகி விட்டோம். இப்போதெல்லாம் அரசாங்க பஸ்ஸில் கூட ஏசி இருக்கிறதா? என்று பார்த்துதான் ஏறுகிறோம். நம்மால் இப்போது ஏசி இல்லாமல் இருக்க முடியாது. வீட்டில் ஏசி ஓடும்போது மீட்டரை ஒரு முறை பாருங்கள். பேனை போல வேகமாக சுத்திக் கொண்டிருக்கும். ஏசி உச்சபட்சமாக உங்கள் கரண்ட் பில்லை ஷாக் அடிக்க வைக்கிறது.
ஏசியை பயன்படுத்தும்போது எப்போதும் 25 டிகிரியில் பயன்படுத்தத் தொடங்குங்கள். அப்போதுதான் வெளி வெப்பத்திற்கு ஓரளவு உங்கள் உடல் தாங்கும். 18 டிகிரிக்கு பழகினால் தமிழ்நாடு போன்ற சூடான மாநிலங்களில் தாக்கு பிடிக்கவும் முடியாது. 25 டிகிரியில் அரை மணி நேரம் ஏசியை ஓட விட்டு, அதன் பின்னர் 26 அல்லது 27க்கு மாற்றிக் கொள்ளுங்கள். இப்போது மீட்டரை போய் பாருங்கள் அது மெதுவாக சுற்றும். இந்த முறையை பின்பற்றினால் உங்கள் வீட்டு மின்சாரக் கட்டணம் 50 சதவிகிதம் குறைந்து விடும்.
மின் மோட்டார்களை பயன்படுத்தும்போது தண்ணீர் தொட்டியில் நீர் நிரம்பிய உடன் ஆப் செய்து விடுங்கள். நீண்ட நேரம் தண்ணீர் வழிந்து அக்கம் பக்கத்தினர் பார்த்து சொல்லும் வரையில் மோட்டார் ஓடினால், கரண்டு பில்லும் உயரத்தான் செய்யும்.
கிரைண்டர், மிக்ஸி என எதை உபயோகம் செய்தாலும், அதில் பாதி கொள்ளளவுக்கு மட்டும் பொருட்களை போட்டு அரைத்துக் கொள்ளுங்கள். அதிக பொருட்களை திணித்து அரைக்கும்போது மோட்டாரின் இழுவை திறன் அதிகரித்து, அதிக மின்சாரத்தையும் இழுக்கும்.
எந்த மின்சாரப் பொருள் வாங்கினாலும் அதிக ஸ்டார் ரேட்டிங் உள்ள பொருட்களாக வாங்குங்கள். அவை மின்சாரத்தை குறைவாக சாப்பிடுபவை. பழைய மின் சாதனங்கள் அதிக மின்சாரத்தை இழுப்பவை. அதனால், புதிய சாதனங்கள் வாங்குவது லாபமாக இருக்கும். எப்போதும் பயன்படுத்தாத நேரங்களில் டிவி, பேன், லைட்களை அனைத்து விடவும். இந்த வழிமுறைகளைப் பின்பற்றினால், உங்கள் வீட்டு மின்சாரக் கட்டணம் பெருமளவில் குறையும். மேலும், மின்சாரத்தில் சிக்கனத்தைக் கடைப்பிடிப்பதன் மூலம், அடுத்த தலைமுறைக்கும் இயற்கை வளங்களை விட்டு வைக்கிறோம் என்று நாம் பெருமிதம் அடையலாம்.