
ஆஸ்திரேலியாவில் யூகலிப்டஸ் மரத்தின் இலைகள் கோலா கரடிகளுக்கு முக்கிய உணவாக உள்ளன. இது தவிர, இந்த மூலிகை இலைகள் வேறு எப்படியெல்லாம் பயன்படுத்தப்படுகின்றன என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.
யூகலிப்டஸ் மரத்தின் இலைகளில் உள்ள நச்சுத்தன்மை அதை மனிதர்கள் உண்பதற்கு ஏற்றதல்லாததாக ஆக்கியுள்ளது. ஆனால், அந்த இலைகளிலிருந்து பெறப்படும் ஆயில், லோஷன் அல்லது பிற வெஜிடபிள் ஆயிலுடன் கலந்து உடம்பில் தேய்த்துக்கொள்ளப் பயன்படும். மனிதர்களின் உலர்ந்த சருமத்தை நீரேற்றத்துடன் வைக்கவும் மூட்டு வலியை நீக்கவும் யூகலிப்டஸ் ஆயில் பயன்படுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
பொதுவாக, இந்த ஆயில் அரோமாதெரபி (Aromatherapy)யிலும், சருமத்தின் வெளிப்பகுதியை இறுக்கமுறச் செய்து நீர்ச்சத்தை வெளியேற விடாமல் பாதுகாக்கவும் பயன்படுகிறது. மூக்கினால் நுகரவும், உடம்பில் மசாஜ் செய்துகொள்ளவும், குளிக்கும் நீரில் கலந்து குளிப்பதற்கும் கூட இந்த ஆயில் பயன்படுகிறது.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பழங்குடி மக்களால் இந்த ஆயில் மருந்துகள் தயாரிப்பிலும், திருமணம் போன்ற குடும்ப விழாக்களில் செய்யப்படும் சடங்குகளிலும் உபயோகப்படுத்தப்பட்டு வந்துள்ளது. யூகலிப்டஸ் ஆயிலில் உள்ள ஆன்டி இன்ஃபிளமேட்டரி குணங்கள் ஆர்த்ரிடிஸ் நோயைக் குணப்படுத்த உதவுவதாக எகிப்து மற்றும் தென் கொரிய ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
அதன் ஆன்டி மைக்ரோபியல் குணமானது தொற்று நோய்க் கிருமிகளின் தாக்கத்தைத் தடுக்கவும், ஆன்டி இன்ஃபிளமேட்டரி மற்றும் அனால்ஜெசிக் குணங்கள் வீக்கங்களைக் குறைக்கவும், காயங்களினால் உண்டாகும் வலியைக் குறைக்கவும் உதவுகின்றன.
குளிர் காலங்களில் யூகலிப்டஸ் ஆயில் சளி மற்றும் ஃபுளு ஜுரம் குணமாக உதவி புரியும். இதன் கடுமையான வாசனை மூச்சுப் பாதை அடைப்பை நீக்கி, சுலபமாக மூச்சு விடவும் சளி வெளியேறவும் உதவும். யூகலிப்டஸ் ஆயிலை அப்படியே உடம்பில் தேய்த்துக்கொள்ளும்போது, உடம்பில் தடிப்பு, எரிச்சல் போன்றவை உண்டாவதுடன் ஒவ்வாமையினால் உண்டாகக்கூடிய விளைவுகளும் ஏற்படும். ஆகையால், இதை கேரியர் (Carrier) ஆயில் எனப்படும் பிற வெஜிடபிள் ஆயிலுடன் கலந்து உபயோகிக்க அறிவுறுத்தப்படுகிறது. இந்த ஆயிலை உபயோகித்தால் தலைவலி அல்லது மைக்ரைன் போன்ற உபாதைகள் ஏற்பட்டால் தவிர்த்து விடுதல் நலம்.
கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் ஆஸ்துமா நோயுள்ளவர்களும் யூகலிப்டஸ் ஆயிலை பயன்படுத்தாதிருப்பது நலம். முறைப்படி யூகலிப்டஸ் ஆயிலைப் பயன்படுத்துவோரின் ஸ்ட்ரெஸ் மற்றும் மனக் கவலைகள் குறைவதாக தென் கொரிய ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இதன் தேவையறிந்து, நாமும் முறைப்படி யூகலிப்டஸ் ஆயிலைப் பயன்படுத்தி நலம் பெறுவோம்.