
வீடு வாங்கும்பொழுது பல விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். பலர் வீடு வாங்கும்பொழுது பல வசதிகளைத் தேடுகிறார்கள். ஆனால், தனி வீடுகளை விட நவீன வசதிகளுடன் கேட்டட் கம்யூனிட்டிகளில் (Gated community) சகல வசதிகளுடன் வாழ்வது பாதுகாப்பானது என்ற நம்பிக்கை வரவர குறைந்து வருகிறது. காரணம், கேட்டட் கம்யூனிட்டிகளில் வசிக்கும் அப்பார்ட்மெண்ட்வாசிகள் பல்வேறு அவஸ்தைகளை எதிர்கொள்கின்றனர். இதில் முக்கியமாக கட்டுப்பாடுகள் மற்றும் விதிகள்.
1. பொருளாதார சுமை: கம்யூனிட்டிக்கு செலுத்த வேண்டிய பராமரிப்புக் கட்டணம் சில சமயங்களில் உயர்த்தப்படுகின்றன அல்லது எதிர்பாராத செலவுகள் ஏற்படுகின்றன. இது பொருளாதார சுமையை அதிகரிக்கின்றது. சில இடங்களில் மெயின்டனன்ஸ் சார்ஜ் அதிகம். ஆனால், அந்தளவுக்குத் தேவையான வசதிகள் இருப்பதில்லை. கேட்டட் கம்யூனிட்டிகளின் கட்டமைப்புகள் மற்றும் நிர்வாகம் குறித்த தெளிவான விதிமுறைகள் இல்லாததால், பல்வேறு உள்கட்டமைப்பு சிக்கல்களும், நிதி சார்ந்த சிக்கல்களும் ஏற்படுகின்றன.
2. பாதுகாப்பு மற்றும் தனியுரிமை: பாதுகாப்பு மற்றும் தனியுரிமைக்கான உயர் அளவிலான ஒழுங்குமுறைகள் குடியிருப்பாளர்களின் சுதந்திரத்தை பறிக்கிறது. சுதந்திரமான செயல்பாடுகளுக்கு இடையூறாக இருக்கிறது. சில கம்யூனிட்டிகளில் பாதுகாப்பு இருந்தபோதிலும், சமூகத்தில் தனியுரிமையின்மை, பாதுகாப்பு தொடர்பான அச்சங்கள் மற்றும் தனியுரிமை மீறல்கள் ஏற்படுகின்றன. சில கம்யூனிட்டிகளில் கண்காணிப்பு அமைப்புகள் மற்றும் பார்வையாளர்களை கண்காணிப்பது போன்றவற்றில் குறைபாடுகள் உள்ளன.
3. கட்டுப்பாடுகள் மற்றும் விதிகள்: கேட்டட் கம்யூனிட்டிகளில் குறிப்பிட்ட நேரம் வரையிலான தடை, விருந்தினர்கள் கட்டுப்பாடு போன்ற பல விதிகள் உள்ளன. பாதுகாப்பு ஊழியர்கள் அல்லது டிஜிட்டல் செக்-இன் அமைப்புகளால் சரிபார்ப்புக்கு உட்பட்ட பின்னரே விருந்தினர்கள் உள்ளே அனுமதிக்கப்படுகிறார்கள். இவை வசிப்பவர்களின் சுதந்திரத்தை பெரிதும் பாதிக்கிறது. இவற்றின் கட்டுப்பாடுகள் வெளிப்புற சமூகங்களுக்கு இடையிலான தொடர்புகளை குறைக்கின்றது.
4. நீச்சல் குளங்கள் மற்றும் ஜிம் வசதிகள்: வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக கட்டமைக்கப்பட்ட நீச்சல் குளங்கள், டேபிள் டென்னிஸ் போர்டு, உடற்பயிற்சி கூடங்கள் உடல் ஆரோக்கியம், ஓய்வு மற்றும் வசதியை மேம்படுத்தும் எண்ணத்துடன் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், நீச்சல் குளங்கள் மற்றும் உடற்பயிற்சி கூடங்கள் முதல் குழந்தைகள் விளையாடும் பகுதிகள் மற்றும் பார்க்கிங் வசதிகள் வரை சில கம்யூனிட்டிகளில் சரியாகப் பராமரிக்கப்படுவதில்லை. ஆனால், அதற்காக வசூலிக்கப்படும் கட்டணமோ மிகவும் அதிகம்.
5. அடிப்படை வசதிகளுக்கான தாமதம்: சில சமயங்களில் திட்டமிடப்பட்ட வசதிகள் தாமதமாகலாம். நீர், மின்சாரம் அல்லது பாதுகாப்பு போன்ற அடிப்படை வசதிகளில் பற்றாக்குறை ஏற்படலாம்.
6. தீர்வுகள்: இந்த கம்யூனிட்டிகளில் வசிப்பவர்கள் நிர்வாகத்திற்கு பொறுப்பானவர்களை அமர்த்தி, சட்டபூர்வமான ஆலோசனை பெறுவதன் மூலம் பிரச்னைகளுக்குத் தீர்வு காணலாம்.
கம்யூனிட்டி மேம்பாடு மற்றும் கட்டண முறை குறித்து நிர்வாகத்துடன் கலந்தாலோசித்து, அடிப்படை வசதிகள் தாமதமின்றி கிடைப்பதற்கு வழிவகை செய்வதுடன், பராமரிப்புக் கட்டணத்தை அதிகமாக்காமல் பார்த்துக் கொள்ளலாம்.
பாதுகாப்பு நடைமுறைகளை மேம்படுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுப்பதன் மூலம் அங்கு வசிப்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யலாம்.