

நீங்கள் தைரியமான ஆளாக இருக்கலாம். ஆனால், ஒரு புதருக்குள் நடக்கும்போது திடீரென காலில் ஏதோ ஊர்வது போலத் தெரிந்தால், ஒரு நொடி இதயம் நின்று துடிப்பது போல இருக்கும். அது பாம்பாகவோ அல்லது ஒரு பெரிய சிலந்தியாகவோ இருந்தால் சொல்லவே வேண்டாம், அலறி அடித்து ஓடிவிடுவோம்.
ஆனால், ஒரு முயல்குட்டியையோ அல்லது பூனையையோ பார்த்தால் நமக்கு இந்தப் பயம் வருவதில்லை. ஏன் குறிப்பிட்ட இந்த இரண்டு உயிரினங்களைக் கண்டால் மட்டும், உலகம் முழுவதும் உள்ள மனிதர்களுக்கு, இனம், மொழி வேறுபாடின்றி ஒரே மாதிரியான பயம் வருகிறது? இது நாம் கற்றுக்கொண்ட பயம் இல்லை; நம் ரத்தத்திலேயே ஊறிய பயம். அது எப்படி என்று பார்ப்போம்.
ஆதிமனிதனும், அவனது சர்வைவல் யுத்தமும்!
இதற்கான விடை பல லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய நம் முன்னோர்களிடம் இருக்கிறது. ஆதிமனிதர்கள் காட்டில் வாழ்ந்த காலத்தில், அவர்களுக்கு ஒவ்வொரு நாளும் ஒரு உயிர் பிழைக்கும் போராட்டம்தான். சிங்கம், புலி போன்ற பெரிய விலங்குகளை தூரத்தில் இருந்தே பார்த்துத் தப்பித்துவிடலாம். ஆனால், காலடியில் புல்லோடு புல்லாக மறைந்திருக்கும் பாம்புகளும், மரங்களில் தொங்கும் விஷச் சிலந்திகளும் தான் மிகப்பெரிய எமனாக இருந்தன.
அப்போதே மனிதர்கள் இரண்டு வகையாக இருந்திருக்கலாம். ஒருவர், "இது என்ன புதுசா இருக்கு?" என்று பாம்பின் அருகில் சென்று ஆராய்ந்தவர். இன்னொருவர், அந்த நெளிவு சுளிவைப் பார்த்தவுடனே, "இது ஆபத்து" என்று உள்ளுணர்வு சொல்லி ஓடியவர். இதில், அருகில் சென்று ஆராய்ந்தவர்கள் கடிக்கப்பட்டு இறந்து போயிருப்பார்கள். பயந்து ஓடியவர்கள் மட்டுமே உயிர் பிழைத்து, குழந்தைகளைப் பெற்று வம்சத்தை விருத்தி செய்தார்கள்.
மரபணுவில் கலந்த பயம்!
உயிர் பிழைத்த அந்த முன்னோர்களின் ரத்தம்தான் நம் உடலில் ஓடுகிறது. அவர்கள் பாம்பையும் சிலந்தியையும் பார்த்துப் பயந்த அந்த 'பய உணர்வு', காலப்போக்கில் நமது டி.என்.ஏ-விலேயே பதிவாகிவிட்டது. இதைத்தான் பரிணாம வளர்ச்சி என்கிறோம்.
இதை நிரூபிக்க விஞ்ஞானிகள் ஒரு ஆய்வு செய்தார்கள். பாம்பு என்றால் என்னவென்றே தெரியாத, ஆறு மாதக் குழந்தைகளிடம் பாம்பின் படத்தையும், பூவின் படத்தையும் காட்டினார்கள். பாம்பின் படத்தைப் பார்த்தபோது மட்டும் அந்தக் குழந்தைகளின் கண் பாவை விரிந்து, ஒருவித பதற்றத்தை வெளிப்படுத்தியதாம். யாரும் சொல்லிக் கொடுக்காமலே வரும் பயம் இது.
இன்றைய தேதியில் ஒரு பாம்பை விட, துப்பாக்கியோ அல்லது வேகமாக வரும் காரோ ஆபத்தானது. ஆனால், ஒரு காரைப் பார்த்தால் நமக்குக் குலை நடுங்குவதில்லை. ஏனென்றால், கார்களும் துப்பாக்கிகளும் கண்டுபிடிக்கப்பட்டுச் சில நூறு வருடங்களே ஆகின்றன. நமது மரபணுவில், "கார் வந்தால் பயப்படு" என்ற தகவல் பதிவாக இன்னும் பல ஆயிரம் வருடங்கள் ஆகலாம். ஆனால், பாம்புகள் லட்சக்கணக்கான வருடங்களாக நம்முடன் பயணிக்கின்றன.
அடுத்த முறை நீங்கள் ஒரு சிலந்தியையோ, பாம்பையோ பார்த்துப் பயந்து கூச்சலிட்டால், வெட்கப்படாதீர்கள். "ஐயோ, நான் கோழை" என்று நினைக்காதீர்கள். உங்கள் மூளை சரியாக வேலை செய்கிறது என்று அர்த்தம். அந்தப் பயம், உங்கள் முன்னோர்கள் உங்களுக்குக் கொடுத்த ஒரு பாதுகாப்புக் கவசம். "விஷ ஜந்துக்களிடம் இருந்து தள்ளி இரு" என்று உங்கள் உள்ளுணர்வு உங்களுக்கு அனுப்பும் ஒரு எச்சரிக்கை மணிதான் அது. பயம் நம்மைப் பாதுகாக்கும் ஒரு கருவி…