படாதபாடு படுத்தும் காதுப் புழுக்கள், மூளைப் புழுக்கள் பற்றி கேள்விப்பட்டதுண்டா?

Brain
Brain
Published on

காதுப் புழுக்கள் என்பது ஒரு விதமான புழுவோ அல்லது உயிரினமோ அல்ல, அவை ஒட்டுண்ணிகள் ஆகும். உங்கள் மூளையில் தங்கும் இவ்வகையான ஒட்டுண்ணிகள் அறிவாற்றல் அரிப்பு (Cognitive Itch) அல்லது மூளை அரிப்புக்கு (Brain Itch) வழிவகுக்கும். இன்னும் புரியும்படி சொன்னால், காலையில் வானொலியில் கேட்கும் பாடலை அன்று முழுவதும் முணுமுணுத்துக் கொண்டிருப்பதைப் பலரும் அனுபவித்து இருக்கலாம். இதனையே, ‘காதுப் புழு’ (Ear Worm) அல்லது ‘மூளைப் புழு’ (Brain Worm) என்கின்றனர். 

நாம் ஒவ்வொரு முறையும் ஒரு இசையைக் கேட்கும் போது, மூளையின் கேட்புப் புறணி (Auditory Cortex) எனப்படும் ஒரு பகுதி தூண்டப்படுகிறது. இது தொடர்பான ஒரு ஆராய்ச்சியில் பங்கு கொண்ட தன்னார்வலர்களுக்கு ஒரு பழக்கமான பாடலின் ஒரு பகுதியை வாசிக்கும் போது​​, ​​அவர்களின் கேட்புப் புறணி தன்னிச்சையாக மீதமுள்ள பாடலின் பகுதியை நிரப்புவது கண்டறியப்பட்டுள்ளது.

வேறுவிதமாகக் கூறினால், ஒரு இசை முடிந்த பிறகும் கூட, அவர்களின் மூளை தொடர்ந்து அந்த இசையை முணுமுணுக்கிறது. இதை டார்ட்மவுத் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் உறுதி செய்துள்ளனர். மூளையின் இந்த அரிப்பைத் தீர்க்க ஒரே ஒரு வழிதான் உள்ளது. ஒரு காதுப் புழுவை அகற்றுவதற்கு, இன்னொரு காதுப்புழுவை அனுமதிப்பதே அவ்வழி.

சின்சினாட்டி வணிக நிர்வாகப் பல்கலைக்கழகத்தின் சந்தைப்படுத்தல் துறைப் பேராசிரியரான ஜேம்ஸ் கெல்லாரிஸ் என்பவர், காதுப் புழுக்கள் மற்றும் மூளை அரிப்புகள் குறித்த ஆராய்ச்சி செய்தார். அந்த ஆராய்ச்சியின் படி, 98% நபர்கள் காதுப் புழுக்களை அனுபவிக்கின்றனர். பெண்களும் ஆண்களும் சமமாக அடிக்கடி இந்த நிகழ்வை அனுபவிக்கிறார்கள், ஆனால், காதுப் புழுக்கள் பெண்களுக்கு நீண்ட காலம் நீடிக்கும் மற்றும் அவர்களை எரிச்சலூட்டும். கெளரிஸ் புள்ளி விவரங்களின்படி, பாடல்களின் பாடல் வரிகளே 73.7% காதுப் புழுக்களுக்குக் காரணமாக இருக்கின்றன. அதே வேளை, கருவி இசை 7.7% மட்டுமே இவ்விளைவுகளை ஏற்படுத்துகின்றன.

இதையும் படியுங்கள்:
மனிதர்கள் ஏன் சண்டை போட்டுக் கொள்கிறார்கள்?
Brain

2010 ஆம் ஆண்டில், பிரிட்டிஷ் உளவியல் இதழில் (British Journal of Psychology) வெளியிடப்பட்ட தரவு இந்த விஷயத்தை நேரடியாகக் குறிப்பிட்டது. மேலும், அதன் முடிவுகள் காதுப் புழுக்கள் பொதுவாக 15 முதல் 30 வினாடிகள் நீளம் கொண்டவை என்றும், இசையில் ஆர்வமுள்ளவர்களிடம் இது பொதுவாகத் தொற்றிக் கொள்கிறது என்று தெரிவித்தது. 

காதுப் புழுக்கள் 'நேர்மறை' அல்லது 'எதிர்மறை' இசையுடன் ஏற்படலாம். இதில் நேர்மறை இசை மகிழ்ச்சியான மற்றும் / அல்லது அமைதியான இசையாக இருக்கும். எதிர்மறை இசை எதிர்மாறாக இருக்கும், அங்கு இசை கோபமாகவோ அல்லது சோகமாகவோ இருக்கும். 

எல்லா மோக் மற்றும் அவரது குழுவினர் நடத்திய ஆராய்ச்சிப் பரிசோதனையில், இசையின் நேர்மறை / எதிர்மறை உணர்வைத் தூண்டினால் ஏற்படும் காதுப் புழுக்களினால் வரும் பாதிப்பைக் கண்டறியும் முயற்சியில், அவர்கள் கருவி இசையை மட்டும் பயன்படுத்தினர். இதன் முடிவில், காதுப் புழுவின் தரம் வேறுபட்டாலும், அனைத்துப் பங்கேற்பாளர்களும் ஒரே அளவிலான காதுப் புழுக்களை அனுபவித்ததாகத் தீர்மானித்தது. எதிர்மறையான இசையில் இருந்து பிறந்த காதுப் புழுக்கள் அதிகத் துன்பத்தைக் கொண்டு வந்தன மற்றும் நேர்மறை இசையால் உருவாக்கப்பட்டதை விடக் குறைவாக அடிக்கடி நிகழ்கின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com