
பொதுவாக நம் நாட்டில் திருமணமான ஜோடிகள் பாரம்பரிய முறைப்படி ஒரே வீட்டில், பாத்ரூம் முதல் படுக்கையறை வரை அனைத்தையும் பகிர்ந்துகொண்டு, ஒன்றாக வாழ்ந்து வருவது வழக்கம்.
இதற்கு நேர் மாறாக தற்காலத்தில் கணவன் மனைவி இருவரும் வேறு வேறு வீடுகளில், வெவ்வேறு வகையான வாழ்க்கை முறையைப் பின்பற்றி வாழ்ந்து வருவது புதுவித வழக்கமாக மாறியுள்ளது. இதற்கு 'லிவிங் அபார்ட் டுகெதர் (LAT)' அல்லது அபார்ட்னராக இருப்பது என பெயரிடப்பட்டுள்ளது. நவீன ட்ரெண்டிங் இது!
இதில் ஜோடி இருவரும் தனித்தனி வீடுகளில் தனித்துவமான சுதந்திரத்தை அனுபவித்துக்கொண்டு, ஆரோக்கியம், சந்தோஷம் மற்றும் தன் துணையுடனான காதலையும் நீண்ட நெடுங்கலாம் தொடர்ந்து பராமரித்து வரமுடியும் என நம்புகின்றனர். இது எப்படி சாத்தியம். பாரம்பரிய வாழ்க்கை முறையிலிருந்து இது எவ்விதத்தில் சிறந்தது என்பதை இப்போது பார்க்கலாம்.
வேலை நிமித்தம் கணவன் மனைவி இருவரும் வெவ்வேறு ஊரிலோ அல்லது மாநிலத்திலோ தனியாக வசிக்கலாம். ஆனால், ஒரே ஊரில் இருக்கும்போது வெவ்வேறு வீடுகளில் வசிப்பது எந்த வழியில் சிறந்தது என நமக்கு கேட்கத் தோன்றுகிறது. அந்த முறையில், வாழ்க்கையை தேர்ந்தெடுத்து வாழ்ந்து கொண்டிருப்பவர்கள், பல வழிகளில் அது நன்மை தருவதாக நம்புகின்றனர்.
தனிப்பட்ட வளர்ச்சியை தடையின்றி அடையவும் உறவை பலப்படுத்தவும் இது உதவும் என்கின்றனர். மேலும், விடிந்தது முதல் படுக்கச் செல்லும்வரை பலவித வீட்டுப் பிரச்னை காரணமாக எழும் வாக்குவாதம் மற்றும் சண்டை சச்சரவு, அவை தரும் மன அழுத்தம் போன்றவை இல்லாமல் அமைதியாக வாழ LAT முறை உதவிபுரியும் என்றும் கூறுகின்றனர்.
இம்முறை பரவலாக அறியப்படும் முன்னரே, சாரா பால்சன் & ஹாலண்ட் டேயலர் போன்ற பல செலிபிரிட்டி ஜோடிகள் இதைப் பின்பற்றி வாழ்க்கையில் வெற்றியும் கண்டுள்ளனர். "நாங்கள் சேர்ந்து வாழவில்லை. அதுவே எங்கள் வாழ்க்கை ரகசியம். நானும் ஹாலண்டும் பல மணி நேரங்களை ஒன்றாக செலவிடுகிறோம். வேண்டும் என்று நினைக்கையில் ஒன்றாக இருப்போம். வேண்டாம் என்னும்போது பிரிந்திருப்போம்" என்கிறார் சாரா.
அமெரிக்கன் Horror Story நாயகி, "இந்த முறையைப் பின் பற்றி வாழும் வாழ்க்கை இருவருக்குள்ளும் உறவில் நேர்மறை விளைவுகளை உண்டு பண்ணுவதாகவே உள்ளது" என்கிறார்.
நம் நாட்டில் குறைந்த அளவு ஜோடிகளே இம்முறையைப் பின் பற்றுவதாக தெரிகிறது. "பல நாள் பிரிந்திருந்து மீண்டும் சந்திக்கும்போது உண்டாகும் உற்சாகம் அளப்பறியது. இருவருக்குமிடையிலான இணைப்பையும் இறுக்கத்தையும் அதிகரிக்கச் செய்யவே இந்தமுறை உதவுகிறது", என்கிறார் ஓர்
அபார்ட்னர். அனைத்துத் தரப்பினருக்கும் இம்முறை ஏற்றுக்கொள்ளுமாறு இருக்குமென்று கூறமுடியாது.
ஒரே வீட்டில் ஒன்றாக இணைந்து வாழும் ஜோடிகளை விட, தனித்தனி வீடுகளில் வசிக்கும் அபார்ட்னர்களின் வாழ்க்கையை குறைத்து மதிப்பிட எந்த ஆதாரமும் இல்லை என்றும் கூறப்படுகிறது.