சமீப காலமாக சமூக வலைதளங்களில் அதிகமாகப் பேசப்படுவது திருமணத்தை மீறிய உறவுகள்தான். அடுத்தவர் வீட்டு செய்தியைக் கேட்பதும், பார்ப்பதும் சுவாரஸ்யமாக இருக்கலாம். ஆனால், திருமணத்தை மீறிய உறவுகள் அமைவது நம் சமூக நலத்தையே பாதித்துவிடும். ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழ்ந்த காலம் மெல்ல மெல்ல மறைந்து வருகிறது. இப்படித் தெரிந்தோ, தெரியாமலோ உறவுகள் வளர்க்கப்படுவது மிகவும் ஆபத்தான விஷயம்.
இவை வெறும் உடல் ரீதியான ஈர்ப்பா என்றால் அப்படியும் சொல்லி விட முடிவதில்லை. கணவன், மனைவிக்குள் புரிதலும், அன்பும் ஏதோ ஒரு இடத்தில் விடுபடுவதால்தான் இம்மாதிரியான உறவுகள் தொடர்கின்றன. கணவன், மனைவி இருவருக்கும் இடையில் ஏற்படும் ஈகோ பிரச்னையும், அதிக எதிர்பார்ப்பும்தான் இருவருக்கிடையேயும் அன்பு குறைய காரணமாகிறது. இதனால் மூன்றாவது நபர் எளிதாக உள்ளே வந்து குடும்பத்தில் குழப்பத்தை உண்டுபண்ணுவது வாடிக்கையாகி விடுகிறது. திருமணம் என்ற புனிதமான உறவில் கணவன், மனைவி இருவருமே ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துவதும் புரிதலுடனும் வாழ்ந்தால்தான் அந்த உறவு கடைசி வரை நீடிக்கும். இல்லையெனில் நூல் அறுந்த பட்டம் போல் ஆகிவிடும். இதனால் பாதிக்கப்படுவது அந்தத் தம்பதியர் மட்டுமல்லாமல், அவர்களுடைய பிள்ளைகளின் எதிர்காலமும்தான்.
பிள்ளைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டாவது கணவன், மனைவி இருவரும் ஆரோக்கியமான உறவை பலப்படுத்த முயற்சிகள் எடுக்க வேண்டும். திருமண உறவுக்கு ஆதார சுருதியே அன்பும், புரிதலும், விட்டுக்கொடுத்தாலும்தான். ஆனால், உறவில் ஏற்படும் பிரச்னைகளுக்குக் காரணம் அடித்தளத்தை உறுதிப்படுத்திக் கொள்ளாமல் மேற்கூரையை மட்டும் சரி செய்து கொள்வதுதான். எந்த நேரத்திலும் கூரை தலையில் விழும் என்பதால் அதனைப் பிடித்துக் கொண்டிருக்கிறோம். வாழ்க்கையின் அடிப்படையை சீர்செய்து கொள்ளாமல் சின்னச் சின்ன விஷயங்களை சரி செய்வதால் பயனில்லை.
எப்பொழுது கணவன், மனைவி என்ற பந்தத்திற்குள் நுழைகிறோமோ அப்போதே நமக்கு சில பொறுப்புகள் வந்து விடுகின்றன. எந்த வகையான பிரச்னைகளையும் மனம் விட்டுப் பேசித் தீர்த்துக்கொள்ளவும், நாம் பெற்றெடுத்த பிள்ளைகளை ஒழுக்கமாக, நேர்மையாக வளர்க்கவும் இருவருமே பொறுப்பெடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். இதில் யாருக்கும் பொறுப்பை தட்டிக் கழிக்கும் உரிமை கிடையாது. ஆண், பெண் இருவருமே புரிதலுடன், மன அளவிலும் உடல் அளவிலும் திருமண பந்தத்தில் ஒருங்கிணைந்து பயணித்தால் மட்டுமே அந்த உறவை கடைசி வரை ஆரோக்கியமாகக் கொண்டு செல்ல முடியும்.
கணவனோ, மனைவியோ தங்கள் எண்ணங்களையும், ஆசைகளையும், துக்கத்தையும் தங்கள் துணையுடன் பகிர்ந்து கொள்வதை விட ஈர்க்கப்பட்ட மூன்றாவது நபருடன் பகிர்ந்து கொள்ளத் தயாராக இருப்பதால்தான் இந்த விபரீதம் நடைபெறுகிறது. திருமண பந்தத்தின் புனிதத்தைப் பற்றி கவலைப்படாததால் உண்டான விளைவு இது. பெரும்பாலான தம்பதிகள் வேலை அல்லது தொழில் நிமித்தம் ஒருவரையொருவர் விட்டு விலகி இருக்க நேரிடுகிறது. இதனால் புதிதாக வேறு ஒருவரிடம் ஈர்ப்பு ஏற்பட்டு தவறான பாதையில் செல்லத் தூண்டுகிறது.
திருமணத்துக்கு புறம்பான விவகாரங்கள் சமூகத்தில் ஏற்றுக்கொள்ள முடியாதவை. மேலும், ஒழுக்கக் கேடானவை மற்றும் சமூகத்தின் தார்மீக முறையற்றவை.