இயல்பாக இருக்க விடுங்கள் வீடு இன்பமுறும்!

இயல்பாக இருப்பதே இன்பம்
இயல்பாக இருப்பதே இன்பம்https://trichyvision.com
Published on

சிலர் தனது வீட்டை விட்டு மற்றவர்கள் வீட்டிற்குச் செல்லும்பொழுது இயல்பாக இருக்க மாட்டார்கள். ஒருவித பயத்துடன் நடந்து கொள்வார்கள். இதை செய்தால் குற்றம் ஆகிவிடுமோ? நாம் செய்வது தவறோ? என்று பதுங்குவார்கள். அதற்கு முக்கியக் காரணமாக இருப்பது அவர்கள் வீட்டில் அவர்கள் செய்யும் வேலையை கணவர், குழந்தைகள் மற்றும் வீட்டில் உள்ளவர்கள் அடிக்கடி குறை கூறுவதுதான். அதை நிறுத்தினாலே தன்னம்பிக்கையுடன் தான் எங்கு சென்றாலும் இயல்பாக இருக்க ஆரம்பித்து விடுவார்கள். அவர்களை இயல்பாக இருக்க விடுவது எப்படி என்பதை இந்தப் பதிவில் காண்போம்.

பொதுவாக, வீட்டிற்கு வரும் விருந்தாளிகள் தின்பண்டங்கள் பழங்கள் என்று வாங்கி வருவது வாடிக்கை. முன்பெல்லாம் அப்படி வாங்கி வந்தால் அதை பிரித்துத் தரும் வரை ஆவலாக இருப்போம். கொடுப்பவற்றை விரும்பி வாங்கியும் சாப்பிடுவோம். ஏனென்றால், ஒவ்வொரு வீட்டிலும் அப்பொழுது அதிகமான குழந்தைகள் இருப்பார்கள். கிடைப்பதை அப்பொழுது சாப்பிட்டால்தான் உண்டு. அதன் பிறகு எடுத்து சாப்பிடவெல்லாம் முடியாது. ஆதலால் அப்படி ஒரு நிலை இருந்தது அன்று. ஆனால், இன்றைய நாட்களில் எல்லோரது வீடுகளிலும் அதிகமான குழந்தைகள் இல்லை. அப்படியே இருந்தாலும் ஆவலுடன் மற்றவர்கள் வாங்கி வருவதையும் எடுத்துப் பார்த்து சாப்பிடுவது இல்லை. சாதாரண தின்பண்டமாக இருந்தால் அதை சீண்டுவதும் இல்லை. ஆதலால் வாங்கிச் செல்வது அப்படியே டைனிங் டேபிள் மீது இருப்பதைக் காண முடிகிறது.

இதைக் கண்ணுற்ற ஒரு முதியவர் அடுத்த முறை அவர்கள் வீட்டிற்கு வரும்பொழுது அவர்கள் வீட்டில் என்ன சமைத்து சாப்பிடுகிறார்கள் என்று பார்த்துவிட்டு அதற்கு ஏற்றாற்போன்ற சுண்டல், சிறுதானிய வகைகள் சிலவற்றை வாங்கி வந்தார். அதை அடுத்த நாளே பிரித்து சமைத்து அந்த வீட்டுப் பெண்மணி பரிமாறினார். அதை கண்ணுற்றவர்க்கு சந்தோஷம் ததும்பியது. தான் வாங்கி வருவதைப் பயன்படுத்தும் பொழுதுதான் அதை வாங்கி வந்தவர்களுக்கே சந்தோஷம் பிறக்கும். ஆதலால் விருந்தினராக ஒரு வீட்டிற்குச் செல்லும்பொழுது அடிக்கடி சென்றால் அவர்களின் பழக்க வழக்கங்களைப் புரிந்து வைத்துக்கொண்டு அதற்குத் தகுந்த பொருளை வாங்கிச் செல்லலாம். இது அவர்களுக்கும் பயன்படும் நமக்கும் மன நிம்மதியை தரும். மேலும், இயல்பாக நம்மை அவர்களுடன் பழக வைக்கும்.

ஒரு வயது முதிர்ந்த பெண்மணி யார் வீட்டுக்கும் போய் வரமாட்டார். அவருக்குப் போய் வருவது என்றால் பெரிய சுமை. குளிப்பதிலிருந்து அச்சப்படுவார். சாப்பிடுவதற்கோ இன்னும் பயப்படுவார் .எல்லாவற்றிற்கும் மேலாக வீட்டை பூட்டினோமா, சிலிண்டரை அணைத்தோமா? பொருட்களை எல்லாம் பாதுகாப்பாக வைத்து விட்டு வந்தோமா? தோட்டம் துறவு என்று எப்பொழுதும் வீட்டு நினைப்பாகவே இருப்பார். ஆதலால் வீட்டை விட்டே வெளியில் கிளம்ப மாட்டார். அப்படியே கிளம்பினாலும் அடுத்த ஒரு மணி நேரத்திற்குள் வீட்டுக்குத் திரும்பி விடுவார்.

அவர் ஒரு சமயம் உறவினர் வீட்டுக்கு வந்து தங்கியபோது அவர் வீட்டில் எப்படி எல்லாம் சமைப்பாரோ அதே மாதிரி சமைக்க விட்டார்கள். அங்கு எப்படி எல்லாம் வேலை செய்வாரோ அதுபோலவே இங்கும் வேலை செய்யத் தொடங்கியதை யாரும் தடுக்கவில்லை. வீட்டை சுத்தம் செய்து அடுக்குவதில் இருந்து தோட்டத்தில் உள்ள செடிகளைப் பராமரிப்பது வரை அவர் வீட்டை போலவே பாதுகாத்தார். இதை யாரும் தடுக்காததால் ஒரு வாரம் இருந்து விட்டுச் சென்றார். இதை கண்ணுற்ற அவர்களின் வீட்டாருக்கே மிகப்பெரிய ஆச்சரியமாக இருந்தது. விருந்தினருக்கு மதிப்பும் மரியாதையும் கொடுக்க வேண்டும் என்பதற்காக, அவர்களை வேலை செய்ய விடாமல் முடக்கிப் போடுவதைத்தான் அவர்கள் பெரிய சுமையாக நினைத்துக் கொள்கிறார்கள்.

இதையும் படியுங்கள்:
இரத்த சோகை நோயிலிருந்து நிவாரணம் தரும் காளான் உணவுகள்!
இயல்பாக இருப்பதே இன்பம்

மற்றொரு பெரியவர் மகன் வீட்டிற்கு வந்திருந்தபொழுது ஹார்லிக்ஸ் குடிக்க ஆசைப்பட்டார். ஆனால், அந்தப் புது மருமகளுக்கு அவருடைய விருப்பம் தெரியாததால் பூஸ்ட் பானத்தைக் கலந்து கொடுத்தார். இவரும் எனக்கு ஹார்லிக்ஸ்தான் வேண்டும் என்று கூறவில்லை. கொடுத்ததையும் குடிக்கவில்லை. பிறகு அவராகவே கடைக்குச் சென்று ஹார்லிக்ஸ் பாட்டிலை வாங்கி வந்து கொடுத்தார். மருமகள் சாதாரணமாக ஒரு ஸ்பூன்  ஹார்லிக்ஸ் பொடியை பாலில் போட்டு கலக்கி ஆற்றி கொடுத்தார். அது அவருக்குப் பிடிக்கவில்லை. அவராகவே உள்ளே சென்று பாலை திக்காகக் காய்ச்சி அதில் மூன்று ஸ்பூன் ஹார்லிக்ஸ் கலந்து குடித்தார். அப்பொழுதுதான் அவருக்கு குடித்த திருப்தியும் கிடைத்தது. அதைக் கண்ணுற்ற அவரின் மருமகள் அடுத்த நாளிலிருந்து நான்கு முறை அவர் விரும்பியதைப் போல செய்து கொடுத்தார்.

இதுபோல, மிகவும் நெருங்கிய உறவினர் வீடுகளுக்குச் செல்லும்பொழுது தனக்கு என்ன விருப்பம் என்பதை அவர்களிடம் கூறிவிட்டால் பிரச்னை இல்லை. அல்லது தனக்குப் பிடித்த மாதிரி தானே அதை வாங்கி வந்து போட்டு சாப்பிட்டு இயல்பாக நடந்து கொண்டாலும் இரண்டு குடும்பத்திற்கும் பிரச்னை இல்லை. ஆதலால் என்ன இயல்போ அப்படியே நடந்து கொள்ளுங்கள். அதைத்தான், அந்த வெளிப்படைத் தன்மையைத்தான் இந்தக் காலத்தில் இளைய தலைமுறையினர் விரும்புகிறார்கள்.

இப்படி பிரச்னைகளைப் புரிந்து நடந்து கொண்டால் இளைய தலைமுறைகளோடு முதியவர்கள் ஒத்துப்போவதும், முதியோர்களோடு  இளையவர்கள் ஒத்துப்போவதும் எளிதான காரியம் ஆகிவிடும். ஆதலால் அவரவர்களை அவர்களின் இயல்போடு இருக்க விடுங்கள். வீடு இன்பம் பயப்பதாய் அமையும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com