'உயில்' தெரிந்துகொள்ள வேண்டிய உண்மைகள்!
அனைத்துப் பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளுக்காக சொத்துக்களை சேர்க்கிறார்கள். சிலர் இறக்கும் முன்பு அவர்கள் தங்கள் உயில்களில் சொத்துக்கள் மற்றும் பங்குகளை தங்களுக்குப் பிறகு யார் யார் எவ்வளவு பகிர்ந்துகொள்ள விரும்புகிறார்கள் என்பதைத் தெளிவாக உயில் எழுதுகிறார்கள். அவர்கள் இறந்த பிறகு, சொத்துக்கள் அவர் எழுதிய உயிலின்படி வாரிசுகளுக்கு பகிர்ந்து அளிக்கப்படுகிறது. இது குடும்பத்தில் சொத்து தகராறுகள் மற்றும் நீதிமன்ற வழக்குகள் ஏற்படுவதற்கான வாய்ப்பை தவிர்க்கிறது.
உயில் எழுதியவர் இறந்த பிறகுதான் ‘உயில்’ அமலுக்கு வரும். சிலர் முதலில் எழுதுவார்கள். பிறகு அந்த உயிலில் உள்ளபடி தனது சொத்து பங்கிடப்பட்டு விடக்கூடாது என்ற பயத்தில் வேறொரு உயில் எழுதுவார்கள். ஒருவர் எத்தனை உயில் எழுதினாலும் அவர் இறக்கும் முன்பு எழுதும் கடைசி உயில்தான் சட்டப்படி செல்லும். உயில் எழுதியவர் தனது உயிலை ரத்து செய்யவோ, மாற்றியமைக்கவோ முழு உரிமை உண்டு.
இப்படித்தான் உயில் எழுத வேண்டும் என்று எந்த குறிப்புகளும் கிடையாது.சொல்ல வேண்டியதை தெளிவாகச் சொல்ல வேண்டும். வீண் சந்தேகங்களுக்கோ, இரண்டு விதமான அர்த்தங்களுக்கோ இடமளிக்கும் விதமாக உயில் அமைந்து விடக் கூடாது.
உயிலை பொறுத்தமட்டில் இரண்டு விஷயங்கள் முக்கியமானது. ஒன்று உயில் எழுதுகிறவர் சிந்தித்து முடிவெடுக்கக்கூடிய அளவுக்கு சுய நினைவுகளோடு அவரே விருப்பப்பட்டு எழுதுவதாக உயில் இருக்க வேண்டும். இரண்டாவது, உயில் எழுதுகிறவர் உயிலில் கையெழுத்திடுவதை வேறு இரண்டு பேர் நேரடியாகப் பார்த்து சாட்சி கையெழுத்திட வேண்டும். சாட்சி கையெழுத்திட வந்தவர்களை உயிலுக்கு சொந்தக்காரர் ஒப்புதல் செய்ய வேண்டும்.
உயிலை பத்திரத்தில் தன் எழுத வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை. சாதாரண வெள்ளைத் தாளில் கூட எழுதலாம். அதை பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிய வேண்டும் என்கிற அவசியமும் இல்லை.
இங்கிலாந்து நாட்டில் லாரி ஒன்று சாலையில் நடந்து போய்க்கொண்டு இருந்த ஒருவர் மீது திடீரென மோதியது. இரத்த வெள்ளத்தில் இருந்த அவர் உயிர் பிரியும் வேளையில் இரத்தத்தில் கையை நனைத்து, ‘எல்லாம் என் மனைவிக்கு’ (All to my wife) என்று அந்த லாரி மீது எழுதி விட்டு இறந்து விட்டார். இதையே உயிலாகக் கருதி அவர் மனைவிக்கு அவரது சொத்துக்கள் வழங்கப்பட்டது. மகனோ, மகளோ இல்லாத மாமியார், தனது சொத்தை மறுமகளுக்குக் கூட உயில் எழுதி வைக்கலாம்.
1994ம் ஆண்டு டெல்லியில் உள்ள கின்னஸ் ரிஷி என்பவர் 489 பக்கங்களில் 1,04,567 வார்த்தைகளில் ஒரு உயிலை எழுதினார். இதுதான் உலகின் மிகப்பெரிய உயில். அதேபோல், 1995ம் ஆண்டு டெல்லியில் உள்ள திருமதி பிம்லாரிஷி என்பவர், ‘அனைத்தும் மகனுக்கே’ என்று தனது உயிலை எழுதினார். இதுதான் உலகின் மிகச்சிறிய உயில்.
கேத்தரின் உல்பெர்க் என்ற அமெரிக்க பெண் ஒருவர் தனது கோடிக்கணக்கான சொத்துக்களை அவளது 5 பூனைகளுக்கும், ஒரு நாய்க்கும் உயில் எழுதி வைத்துவிட்டு இறந்தார். இங்கிலாந்தில் ஒருவர் தனது உயிலை அவர் வீட்டுக் கதவில் எழுதி வைத்தார். அந்த உயில் பற்றிய பிரச்னை வரவே கதவு உயிலை கோர்ட்டுக்குக் கொண்டு வந்தார்கள்.
19ம் நூற்றாண்டில் இங்கிலாந்து நாட்டில் வாழ்ந்த ஜேம்ஸ் எட்வர்ட்ஸ் என்ற புத்தகப் பிரியர், அவர் ஏராளமான புத்தகங்களைச் சேர்த்து வைத்திருந்தார். அவர், ‘தாம் இறந்தால், தம் வீட்டில் உள்ள புத்தக அலமாரிச் சட்டங்களைக் கொண்டே தமது சவப் பெட்டியைச் செய்ய வேண்டும்’ என்று உயில் எழுதி வைத்தார்.
ஆனால், சிலர் உயில் எழுதாமல் இறந்து விடுகிறார்கள். அப்படியானால், இறந்தவரின் சொத்துக்களை யார் பெறுவார்கள்? ஒரு உயில் எழுதப்படாவிட்டால் என்ன நடக்கும்? 1956ம் ஆண்டு இந்து வாரிசுரிமைச் சட்டத்தின்படி, சொத்து ஒரு நிலையான வரிசையில் வாரிசுகளுக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது.
பெற்றோர் உயிருடன் இருக்கும்போதே, சொத்துப் பங்குகள் மற்றும் வாரிசுகளுக்கு விநியோகம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதைக் குறிப்பிட்டு, உயில் எழுதுவது நல்லது. அவர்களின் வாரிசுகளும் உயில் எழுதுவதற்கான தேவையைப் பற்றி விவாதிக்க வேண்டும். இப்போதெல்லாம் உயில் எழுதுவது மிகவும் எளிது. இப்போது நீங்கள் ஒரு ஆன்லைன் உயிலையும் தயாரிக்கலாம். எதிர்காலத்தில் சொத்துக்கள் குறித்து குடும்பத்தில் எந்தத் தகராறுகளையும் தவிர்க்க, ஒரு வழக்கறிஞரால் உயில் தயாரிக்கப்படுவது நல்லது. மேலும், வங்கிக் கணக்குகள், முதலீடுகள் மற்றும் காப்பீட்டுக் கொள்கைகளில் நாமினி விவரங்களைப் புதுப்பித்த நிலையில் வைத்திருக்க கவனமாக இருக்க வேண்டும்.