
நமது வாழ்வின் பிரிக்க முடியாத அம்சமாகிவிட்டது செல்ஃபோன். ஆனால், எல்லா நேரமும் அதைப் பயன்பாட்டில் வைக்க முடியாது. சில இடங்களில் கட்டாயம் செல்ஃபோனை சைலன்ட் மோடில் வைத்தே ஆக வேண்டும். அவை என்ன மாதிரியான இடங்கள் மற்றும் சூழ்நிலைகள் என்பது பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
நூலகங்கள்: அறிவுத் தேடலில் ஈடுபட்டிருக்கும் மனிதர்களுக்கு சிறிதும் தொந்தரவு தராத வகையில் செல்ஃபோனை இங்கு சைலன்ட் மோடில் வைக்க வேண்டியது அவசியம். ஆனால், ஒருசிலர் இதை கவனத்தில் கொள்ளாமல் போனில் சத்தமாகப் பேசி, புத்தகமோ நாளிதழோ வாசித்துக் கொண்டிருப்பவர்களுக்கு தொந்தரவு தருவார்கள். எனவே, நூலகத்தில் இருக்கும்போது செல்ஃபோனை சைலன்ட் மோடில் போடுவது நல்லது. நோட்டிஃபிகேஷன்களையும் அணைத்து வைப்பது நல்லது.
திரையரங்குகள் / கச்சேரிகள் / நாடகங்கள்: பார்வையாளர்கள் மிக மிக ஆர்வத்துடன் சினிமாவையோ, நாடகங்களையோ, கச்சேரிகளையோ பார்த்துக் கொண்டிருக்கும்போது தொலைபேசி ஒலித்தால் அவர்கள் எரிச்சால் படக் கூடும். அவர்களுக்கும், நாடகங்கள், கச்சேரிகளில் பங்கு பெறும் கலைஞர்களுக்கும் இதனால் பாதிப்பு ஏற்படாத வகையில் ஃபோனை சைலன்ட்டில் போடவும்.
அருங்காட்சியகங்கள் மற்றும் கலைக்கூடங்கள்: இந்த இடங்களில் பார்வையாளர்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படுத்தாத வண்ணம், செல்ஃபோன்கள் அமைதி நிலையில் இருக்க வேண்டும். அமைதியாக அருங்காட்சியகங்களிலும் கலைக்கூடங்களிலும் வைக்கப்பட்டிருக்கும் பொருட்களைப் பார்வையிட வேண்டும். சில இடங்களில் செல்ஃபோனை கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்டு, அவர்களே வாங்கி வைத்துக் கொள்கிறார்கள். வெளியே வந்ததும் பெற்றுக் கொள்ளலாம்.
கருத்தரங்குகள் மற்றும் மாநாடுகள்: கருத்தரங்குகளில் அறிஞர்கள் மற்றும் பேராசிரியர்கள் பேசிக்கொண்டிருக்கும்போது செல்ஃபோனில் வரும் ரிங்டோன்கள் பார்வையாளர்களின் கவனத்தை திசை திருப்புவதுடன், பேச்சாளரின் பேச்சையும் பாதிக்கும்.
வகுப்பறைகள்: மாணவர்களும் ஆசிரியர்களும் செல்ஃபோனை சைலன்ட் மோடில் வைப்பது மிகவும் அவசியம். ஏனென்றால், கற்றலில் ஈடுபட்டிருக்கும் மாணவர்களுக்கும், கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்களுக்கும் அலைபேசியினால் தொல்லை இருக்கக் கூடாது.
மருத்துவமனைகள்: நோயாளிகளுக்கு மருத்துவர்கள் வைத்தியம் செய்து கொண்டிருக்கும்போது செல்ஃபோன் ஒலித்தால் அது மருத்துவர்களின் கவனத்தை திசை திருப்பும். அவர்களால் தங்களது பணியை சிறப்பாக செய்ய முடியாது. தொந்தரவாக உணர்வார்கள். காத்திருக்கும் நோயாளிகளுக்கும் இது எரிச்சலையே தரும்.
நேர்காணல்கள்: நேர்காணல்கள் நடத்துபவர்களும் அதில் கலந்து கொள்பவர்களும் கண்டிப்பாக அலைபேசியை சைலன்ட் மோடில் வைப்பது மிக மிக அவசியம்.
வழிபாட்டுத் தலங்கள்: வழிபாட்டுத் தலங்களில் அவசியமாக செல்ஃபோனை சைலன்ட் மோடில் போட்டே ஆக வேண்டும். ஏனென்றால், மக்கள் தங்களது வேண்டுதல்களை, பிரார்த்தனைகளை பூர்த்தி செய்துகொள்ள பக்தியுடன் நாடும் இடங்கள் அவை. அங்கே செல்ஃபோனை ஒலிக்கச் செய்யும்போது அவர்களுக்கு மிகவும் தொந்தரவாக அமையும். இது ஒரு அவமரியாதைக்குரிய செயலாகும்.
இறுதிச் சடங்குகள்: ஒருசில இடங்களில் இறுதிச் சடங்குகளில் கூட சிலர் செல்ஃபோன் ரிங் டோனின் அளவைக் கூட குறைக்காமல், சத்தமாக ஒலிக்க விட்டுக் கொண்டிருப்பது வருத்தமான விஷயமாகும். துக்க வீட்டினரின் உணர்வுகளுக்கு மரியாதை செய்யும் வண்ணம் நாம் செயல்பட வேண்டும்.
தூங்கும்போது: தூங்கும்போது அவசியம் செல்ஃபோனை சைலன்ட் மோடில் போட வேண்டும். படுக்கை அறையில் செல்ஃபோன்களை சைலன்ட் மோடில், தலையணைக்கு அருகில் வைத்துக் கொண்டு உறங்குவதால் மூளையின் செயல் திறனைப் பாதிக்கின்றன. எனவே, படுக்கையறையில் இல்லாமல் வெளியே வேறு இடத்தில் செல்ஃபோன்களை வைக்கலாம்.