
ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்க்கையில் முன்னேற பலவித திட்டங்கள் இருக்கும். வாழ்வில் வெற்றி, தோல்வி என்பது சகஜமான ஒன்றே. தோல்வி நிலையென நினைத்தால் வெற்றிவாசல் வெற்று வாசலாகி விடும்! அதேபோல, வெற்றி நிலைத்திட வேண்டுமென்றால் நம்மிடம் நிதானம் என்ற கவசம் இருக்க வேண்டும். அந்தக் கவசத்தை நாம் ஒருபோதும் இழந்துவிடக் கூடாது.
நாம் வெற்றியை இலக்காக வைத்து, உழைப்பின் தன்மை உணர்ந்து செயல்பட வேண்டும். நம்மோடு இருந்துகொண்டே நமது முன்னேற்றத்திற்கு தடையாய் இருக்கும் நபர்களிடம் ஜாக்கிரதையாய் இருப்பது நல்லது. சோம்பல் மற்றும் விஷயங்களை ஒத்திப்போடுதல் நமக்கு நாமே தேடிக்கொள்ளும் அவஸ்தைக்கான முதலீடு.
‘என்னால்தான் எதுவுமே செய்ய முடியும், நான் இல்லையென்றால் எதுவும் நடக்காது’ என்ற மனோநிலை நம்மை அழிக்கக் காத்திருக்கும் ஓவர் டோஸ் தூக்க மாத்திரை! அதற்காக ஓவர் கான்பிடன்ட் வரவே கூடாது. நாவடக்கத்தைக் கடைபிடிப்பது உத்தமமே.
நம்மை ஆட்டிப்படைக்கும் அதிகப்பிரசங்கித்தனமான தன்மையே நமக்கான பரம எதிாி. நம்மை, நமது முன்னேற்றத்திற்கான பாதையில் செல்ல விடாமல் தடுக்க போடப்படும் தடைக்கற்களை, நமது உழைப்பால், நமது முன்னேற்றப் பாதையின் படிக்கட்டுகளாக மாற்றும் மனோதைாியம் நம்முள் நிறையவே இருப்பது நல்லதே!
எவ்வளவு பொறாமை வந்தாலும் அதைக் கடந்து போகக்கூடிய ஆற்றலே நமக்கான ஊற்றுக்கண். முதலில் உன்னை நீயே நம்பு. மனோதிடம் உனக்கான தெம்பு வைராக்கியம் நீ கடக்கப்போகும் வெற்றிப்பாதைக்கான வழிகாட்டி. அன்பால் அனைவரையும் நேசித்தலே சிறப்பான வெற்றிக்கான பழுதில்லாத விதை. வினை விதைத்தால் வினையைத்தான் அறுவடை செய்ய முடியும்.
உழைப்பு எனும் விதையை விதைத்தால் வெற்றி எனும் பயிரை அமோகமாக அறுவடை செய்யலாமே! பொறாமையை விலக்கி, பொறுமையை உனதாக்கு. உண்மை பேசு, பொய் உன் பக்கம் வரவே பயப்படும். மனசாட்சி கடைபிடி. அதுவே, தெய்வ சாட்சிக்கு இணையானது. நீ வாழ பிறரைக் கெடுக்காதே! அமைதியை கடைபிடி, ஆற்றல் தானே வரும். தீய செயல்களை செய்யத் துணியாதே! பிறருக்கு கொடுத்து வாழாதிருக்காதே!
வாய்ப்பும் வசதியும் வரும்போது தக்க வைத்துக்கொள். வீண் விதண்டாவாதம், பிடிவாதம் தவிா்த்திடு. வாதத்திற்கு மருந்து உண்டு. பிடிவாதத்திற்கு மருந்தில்லை. ஆத்திரம் கொள்ளாதே. சில விஷயங்களில் நியாயமெனப்பட்டால், அனுசரித்துப் போவதில் தப்பில்லை. மதியாதாா் வாசல் மிதியாதே! காாியம் பொிதா? வீாியம் பொிதா? என பட்டிமன்றம் பேசாதே! தன்னடக்கமான வெற்றியை நமதாக்க காாியமே பொிது என நம்பு.
அனுபவஸ்தர்கள் சொன்னால் கேட்டுக்கொள்ளும் மனப்பக்குவமே மகத்தான மருந்து. இத்தனையையும் ஒரே மூச்சில் உள்வாங்கி விடாதே. கொஞ்சம் கொஞ்சமாய் கடைபிடி. தெய்வத்தின் துணையுடன் நல்ல வாழ்க்கையை நாசமாக்காமல் வாழ்ந்திடு. வாழ்க்கை என்றும் உன்வசம்தான். அது என்றும் தருமே பொன்வசந்தம்!