
குழந்தை வளர்ப்பு என்பது ஒரு மிகப்பெரிய கலை. அதிலும், குழந்தைகள் ஆறு மாதம் முதல் ஒரு வருடம் வரை அம்மாவின் அரவணைப்பை அதிகம் விரும்புகின்றனர். இந்தக் காலகட்டத்தில் குழந்தை வளர்ப்பில் நாம் செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும் என்னென்ன என்பதை இந்தப் பதிவில் காண்போம்.
தினசரி அவர்களைக் குளிக்கவைத்து விட்டு ஸ்டூலை திருப்பும்பொழுது, தன் நெஞ்சில், முகத்தில் தண்ணீர் அடித்து தன் வாயில் வைப்பார்கள் என்று கண் சிமிட்டி காத்திருக்கிறார்கள். அதை செய்யும்பொழுது குழந்தைகள் பரவசம் அடைகிறார்கள். அதேபோல், கதையோ, பாட்டோ சொல்லிக் கொண்டு சாப்பாடு ஊட்டும்பொழுது பொறுமையாக சாப்பிடுகிறார்கள். அதேபோல் தூங்கி எழும் நேரத்தில் அம்மா அருகில் இருந்தால் அழாமல் எழுந்து கொள்கிறார்கள். இல்லையென்றால், ‘இவ்வளவு நேரம் என்னைப் பார்க்காமல் எங்கே சென்று விட்டீர்கள்?’ என்று கேட்பது போல் உதட்டை பிதுக்கிக் கொண்டு அழுவதைப் பார்க்க வேண்டுமே. இதையெல்லாம் அருகில் இருந்து கவனிக்கும்பொழுது குழந்தையின் உணர்வுகள் எவ்வளவு நுணுக்கமானவை என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
இவ்வளவு நுணுக்கமான குழந்தைகளுக்கு முன்பு பெற்றோர்கள் வாக்குவாதங்களையோ, சொல்வீச்சு தகறாறுகளையோ அவர்களது காதில் விழுமாறு ஈடுபடக் கூடாது. அதேபோல், குழந்தைகளிடம் செல்லும்பொழுது அழுது கொண்டோ, கோபமான, ஆவேசமான நிலையில் செல்லாமல் இருந்தால் குழந்தைகளின் மனவளர்ச்சி நன்றாக இருக்கும்.
குழந்தை அருகில் செல்பவர்கள் குழந்தைகள் ஆனந்தம் அடையக்கூடிய மாதிரியான விஷயங்களை பேசிக்கொண்டோ, சிரித்துக்கொண்டோ, பாடிக்கொண்டோ செல்லும் பொழுது குழந்தைகளின் கண்களுக்கு பெற்றோர்களும், அவற்றை கண்காணிப்பவர்களும் அன்பானவர்களாக, ஆனந்தமானவர்களாக இருப்பதாக குழந்தைகள் உணரும். இதை நன்றாக உற்று நோக்கினால் குழந்தைகளின் சிரிப்பில் இருந்தும், செயல்பாட்டில் இருந்தும் அவற்றினை நன்றாக உணர்ந்துகொள்ள முடியும். இதுதான் குழந்தைகளின் மன வளர்ச்சிக்கு இன்றியமையாத அஸ்திவாரம்.
குழந்தைக்கு அருகில் செல்பவர்கள் எந்த மனநிலையில் சென்றிருந்தாலும், தங்களை சுதாரித்துக் கொண்டு நிதானமாக குழந்தையை முத்தமிட்டு கொஞ்ச வேண்டும். அரவணைக்க வேண்டும். உடலை வருடிக் கொடுக்க வேண்டும். குழந்தையுடன் கனிவாகப் பேச வேண்டும். நன்றாக விளையாட வேண்டும். குழந்தையை எப்படி எல்லாம் குஷிப்படுத்த முடியுமோ அப்படியெல்லாம் குஷிப்படுத்தலாம். குழந்தை தன்னைச் சுற்றி உள்ளவர்களின் முழு உணர்வுகளையும் புரிந்துகொள்ளும் தன்மை உடையதாக இருப்பதால், அவற்றை தன்னளவில் நன்கு வெளிக்காட்டவும் முயற்சி செய்கிறது. அதை அது அழும் தோரணை, சிரிக்கும் சிரிப்பு போன்றவற்றிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.
சில நேரம் குழந்தை மன உளைச்சலாக இருக்கிறது என்பதை நீங்கள் கைகளில் தாங்கி வைத்திருக்கும்போது ஓய்வான நிலையில் இல்லாமல், இறுக்கமான நிலையில் குழந்தையைப் பிடித்து வைத்திருப்பதை பார்த்தால் கட்டுப்படுத்த முடியாமல் தொடர்ந்து அழுதுகொண்டே இருப்பார்கள். அப்பொழுது பாலூட்டவோ, உணவூட்டவோ ஒத்துழக்க மாட்டார்கள். தூங்குவதற்கும் வழக்கத்திற்கு மாறாக அதிக நேரம் எடுத்துக் கொள்வார்கள். அடிக்கடி திடுக்கிடுவார்கள். சாதாரணமாக கவனத்தில் கொள்ளாத சத்தங்களை எல்லாம் தற்போது தொந்தரவு பண்ணுவது போல எடுத்ததற்கெல்லாம் அழுது தீர்ப்பார்கள். அதில் இருந்து கண்டுகொள்ளலாம்.
குழந்தையை சாந்தப்படுத்த உங்களுடன் அணைத்து வைத்துக்கொள்ள வேண்டும். அப்படியே நடந்தால் அமைதியாக தாழ்ந்த குரலில் பேச வேண்டும். அதிக அறிமுகம் இல்லாதவர்களிடம் குழந்தைகளைக் கொடுக்காமலும், வழக்கமாக எதையெல்லாம் செய்வோமோ அதை மட்டுமே செய்ய வேண்டும்.
திடீரென்று எதையாவது மாற்றினால் குழந்தைகள் குழப்பம் அடைந்து விடுவார்கள். ஆதலால், கால்களில் வைத்து, ‘சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு’ பாடலாம். அறையின் வெளிச்சத்தை தேவையானால் குறைத்து, குழந்தைக்கு அருகிலே படுத்துக்கொண்டு கதை சொல்லலாம். குழந்தை பயந்து அழும்போதும், விழிக்கும்பொழுதும் கட்டாயமாக அம்மா அருகில் இருப்பது அத்தியாவசியம். இதுபோல், ஆறு மாதத்தில் இருந்து ஒரு வருடத்திற்கான குழந்தை வளர்ப்பில் அம்மாவின் அருகாமை அதிகமாக தேவைப்படுகிறது. அதை உணர்ந்து ஆரோக்கியமாக குழந்தை வளர வழி வகுப்போம்!