

உணவு என்பது உண்ணும் பொருள் மட்டுமல்ல, அது உறவுகளை ஆரோக்கியமான நிலையில் வைத்திருக்க மற்றும் இணைக்கும் உன்னத பொருளும் கூட என்கிறார்கள் உளவியல் நிபுணர்கள்."ஒன்றாக உண்ணும் குடும்பம் ஒன்றாக நிலைத்திருக்கும்." இந்தப் பிரபலமான கூற்று இப்போது பல குடும்பங்களால் நடைமுறைப் படுத்தப்படுகிறது. ஏறக்குறைய அனைவரும் மன அழுத்தத்தால் அவதிப்படும் இக்காலத்தில், குடும்ப சகிதம் சாப்பிடும் இரவு உணவு மேசை உரையாடல்கள் அதிலிருந்து மீட்டெடுக்க ஒரு கருவியாக அமையலாம் என்கிறார்கள்.
தினமும் குடும்பத்துடன் அமர்ந்து சாப்பிடும்போது, நடக்கும் அந்த உரையாடல்கள் மனநலனை மேம்படுத்துவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இது பதற்றத்தைக் குறைத்து, மகிழ்ச்சியை அதிகரிக்கிறது. குடும்ப நேரங்களில் போன்களை தவிர்த்துவிட்டு, ஒரு வேளை உணவையாவது குடும்பத்துடன் சேர்ந்து உண்பது அவசியம் என்கிறார்கள்.
சாப்பிடும்போது ஆரோக்கியமான விஷயங்களைப் பேசுவது, குழந்தைகளின் உணவுப் பழக்கத்தை மேம்படுத்த உதவுகிறது.'குடும்ப உணவின் வியக்கத்தக்க நன்மைகள்' என்ற தலைப்பிலான ஆய்வின்படி, குடும்ப உணவுகள் ஒரு சமூகத்தின் பிணைப்பாகவே பார்க்கப்படுகின்றன.
டைனிங் டேபிளில் நடக்கும் கலகலப்பான உரையாடல்கள் உறவுகளை ஆழப்படுத்துவதோடு, ஒரு பாதுகாப்பான சூழலையும் உருவாக்குகின்றன. அன்புக்குரியவர்களுடன் ஆழமான உரையாடல்களை 2,000 பெரியவர்களைக் கொண்டு நடத்தப்பட்ட சமீபத்திய ஆய்வின்படி, 64% பேர் அதை விரும்புவதாகவும், அது அவர்களின் மனதை ஆசுவாசப்படுத்தி தன்னம்பிக்கையை அதிகரிக்க உதவுகிறது என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஒன்றாக இரவு உணவு உண்ணும்போது அது அவர்களுக்கென சிறிது நேரத்தை உறுதி செய்வதோடு, அவர்களை ஒருவருக்கொருவர் தகவலறிந்தவர்களாகவும் இணைந்தவர்களாகவும் வைத்திருக்கிறது. மேலும், இது மன ஆரோக்கியத்திற்கும் சிறந்தது. வெவ்வேறு வயதுப் பிரிவினர் இரவு உணவின்போது உரையாடுவதால், புதிய கண்ணோட்டங்களைக் கேட்க முடிகிறது. என்கிறார்கள்.
ஆலோசனை உளவியலாளரான ரியா கடானி, “இரவு உணவு மேசை உரையாடல்களின் போது, உங்கள் கருத்துக்கள் கேட்கப்படுவது மட்டுமல்லாமல், உங்கள் உணர்வுகளும் மதிக்கப்படுகின்றன. இது நீங்கள் தனிமையாக உணர்வதைக் குறைக்கிறது. உங்கள் கருத்துக்கள் கேட்கப்படும் என்றும், உங்கள் குடும்பத்திற்கு நீங்கள் ஆதரவாக இருப்பீர்கள் என்றும் உங்களுக்குத் தெரியும்” என்று கூறுகிறார்.
மூத்த உளவியலாளரான டாக்டர் பிரசாந்த் பிமானி “ஒரு பெற்றோர் தங்கள் குழந்தையுடன் விளையாடும்போது அல்லது பேசும்போது, அன்பின் ஹார்மோனான ஆக்சிடோசின் உருவாகிறது. இது அவர்களை ஓய்வெடுக்கச் செய்வதோடு, அவர்களுக்கு ஒரு சிகிச்சை போலவும் செயல்படுகிறது” என்று கூறுகிறார்,
வாரத்திற்கு குறைந்தபட்சம் நான்கு முறையாவது குடும்பமாக அமர்ந்து இரவு உணவு சாப்பிடும் குழந்தைகள், கல்வியில் சிறப்பாக செயல்படுவதாக கொலம்பியா பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.இந்த இரவு உணவு வழக்கம் உணர்ச்சி பிணைப்பு, சமூக தொடர்பு, பெற்றோருடனான ஈடுபாடு என ஆரோக்கியமான பழக்கத்தை ஊக்குவிக்கும். பள்ளியில் நடந்த விஷயங்கள் பற்றி விவாதிக்கும் இடமாகவும், குழந்தைகளின் யோசனைகள், சிந்தனைகளை வெளிப்படுத்தும் இடமாகவும் அமையும். குழந்தைகளின் அறிவாற்றல் வளர்ச்சியையும் பலப்படுத்த உதவிடும் என்றும் அந்த ஆய்வு தெரிவிக்கின்றது.
டைனிங் டேபிளில் அமர்ந்து உணவருந்தும்போது பெற்றோர்கள் பேசும் உரையாடலை கேட்கும் குழந்தைகளின் மொழி அறிவும், மூளையின் ஆற்றலும் அதிகரிக்கும் என்கிறார்கள் இங்கிலாந்து நாட்டின் யார்க் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள். “குழந்தைகள் சொல்வதைக் கேட்பது மிகவும் முக்கியம். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் சொல்வதைக் கேட்டால், அவர்கள் கேட்கும் திறனை வளர்த்துக் கொள்கிறார்கள்.”
இரவு உணவு மேசை உரையாடல்கள் உங்கள் தனிமையைக் குறைக்கின்றன. மன அழுத்தம் நிறைந்த ஒரு நாளுக்குப் பிறகு, அது மனதை இலகுவாக்குகிறது, மேலும் அந்த உரையாடல்கள் விஷயங்களைச் சரியான கண்ணோட்டத்தில் பார்க்க உதவுகின்றன.” இந்த உரையாடல்கள் ஒரு சிகிச்சை போன்றது'.ஒவ்வொரு உரையாடலும் அமைதியானதாக இருக்காது என்றாலும், விவாதங்கள் செய்வது ஒரு நல்ல விஷயம் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். எனவே இரவு உணவு மேசை உரையாடல்களை குடும்ப வழக்கத்தின் ஒரு பகுதியாக ஆக்குங்கள் என்கிறார்கள்.