

குழந்தை வளர்ப்பு என்பது ஒவ்வொரு பெற்றோருக்கும் மிக முக்கியமான கடமையாக உள்ளது. அதிலும் தற்போது கூட்டுக் குடும்பங்கள் சிதைந்து விட்ட நிலையில் அனைத்து பொறுப்புகளையுமே இளம் வயது பெற்றோர்களே ஏற்க வேண்டியுள்ளது. சூழலியல் தரும் அதீத மன அழுத்தம் காரணமாக சில நேரங்களில் பெற்றோர்களுக்குள் சிறு சிறு பிரச்னைகள் என்பது சகஜமாகிவிட்டது. இந்த பிரச்னைகளின்போது குழந்தைகள் முன் சண்டையிட்டுக் கொள்வது என்பதும் இப்போது நிறைய வீடுகளில் நடந்து வருவதும் சகஜமான ஒன்றாக உள்ளது.
வசதியான வாழ்வுக்காக ஓடி ஓடி செய்யும் பணி அழுத்தம், வீட்டு நிர்வாகம் குறித்த கவலை, பெரியவர்கள் இல்லாமல் வாழ்க்கையை நடத்த வேண்டிய நிலை, அனைத்திற்கும் பொறுப்பேற்க வேண்டிய நிலையில், குழந்தை வளர்ப்பு என அதீத அழுத்தங்கள் இன்றைய பெற்றோர்களுக்கு நிறையவே உண்டு. ஆனால், எத்தனை காரணங்கள் இருந்தாலும் குழந்தைகள் முன் பெற்றோர் கத்தி சண்டையிடுவது, அடித்துக்கொள்வது போன்ற செயல்கள் நிச்சயம் அதைப் பார்த்துக் கொண்டிருக்கும் குழந்தையின் மனநிலை வெகுவாக பாதிக்கும்.
‘நீங்கள் எவ்வளவுதான் பாசமாக இருந்தாலும் அந்தக் குழந்தைக்கு நீங்கள் சண்டையிட்டுக் கொள்வது மட்டும்தான் மனதில் தங்கும்’ என்கிறார்கள் உளவியலாளர்கள். குழந்தைகள் முன் பெற்றோர் சண்டையிட்டுக் கொள்ளும்போது அந்தக் குழந்தைகளின் மன நிலை மற்றும் அது குறித்த தகவல்கள் குறித்த எச்சரிக்கைகளை இப்பதிவில் காண்போம்.
பெற்றோர்கள் குழந்தைகள் முன்பு சண்டை போடும் செயலானது குழந்தைகளின் ஆரோக்கியமான மனநிலைக்கும், அவர்களின் வளர்ச்சிக்கும் மிகத் தீவிரமான பாதிப்பை உண்டாக்கும். குறிப்பாக, குழந்தைகள் அவரவர் வயதுக்கு ஏற்ப வேறு வேறு விதமாக பாதிக்கப்படுகிறார்கள். எனினும், பொதுவாக அவர்கள் அனுபவிக்கும் சில நிலைகள் எவை என்றால், ‘நன்றாகப் பேசிய அம்மா, அப்பா திடீரென ஏன் இப்படி சண்டை போடுகிறார்கள்?’ என்று புரியாத பயம் மற்றும் குழப்பத்துடன் வீட்டில் பாதுகாப்பு இல்லை என்ற உணர்வு அவர்களுக்கு உருவாகலாம்.
அடிக்கடி சண்டைகளைப் பார்க்கும் குழந்தைகளுக்கு ஓயாத மன அழுத்தம் உருவாகும். அதன் விளைவாக நரம்புத் தளர்ச்சி, தலைவலி, தூக்க பாதிப்பு போன்றவை ஏற்படலாம். குறிப்பாக, ‘இந்த சண்டைக்கு நான்தான் காரணமா?’ என்று தன்னை குறை சொல்லி தனது மீதான தன்னம்பிக்கையை குறைத்துக் கொள்ளலாம். காரணம் என்னவென்று புரியாத வயதில் பெற்றோரின் உறவுப் பிரச்னையை தனது தவறாக நினைக்கும் குழந்தைகளும் உண்டு.
பெற்றோர்கள் செய்யும் இந்தத் தவறால் பிள்ளைகள் பள்ளி மற்றும் சமூகத்தில் பாதிப்படைவார்கள். அதாவது, படிப்பில் கவனம் குறையும். அத்துடன் தனக்குள்ளேயே வேதனைப்பட்டு நண்பர்களுடன் சரியாகப் பழக முடியாமல் தனிமையை அனுபவிக்கலாம். அதன் விளைவாக அதிகக் கோபம் அல்லது மிகுந்த மௌனம் போன்ற நடத்தை மாற்றங்களைத் தரலாம்.
குழந்தைப் பருவத்தில் பெற்றோர் சண்டைகளைக் கண்டு வளர்ந்தவர்கள் மனதில் எதிர்காலத்தில் தங்கள் உறவுகளிலும் அதே மாதிரி நடக்குமோ எனும் சந்தேகம் வரும். இதனால் அவர்கள் எதிர்கால வாழ்க்கையில் உறவுகள் மீதான நம்பிக்கையற்று அதனால் பிரச்னைகள் வரும் வாய்ப்பு அதிகம். மேலும், அன்பு, நம்பிக்கை, தொடர்பு போன்றவற்றில் சிக்கல்கள் ஏற்படலாம். அதோடு, மனநோய் உருவாகும் அபாயம் அதிகம் உள்ளது என்பதையும் கவனிக்க வேண்டும்.
சரி, இதற்கான தீர்வுதான் என்ன என்பதைப் பார்க்கையில், பெற்றோர்கள் நினைத்தால் இந்த நிலை வராமல் தடுக்கலாம். குழந்தைகள் முன்பு போடும் சண்டையைக் கட்டுப்படுத்த வேண்டும். பேச வேண்டிய விஷயங்களை தனியாக, அமைதியாகப் பேச வேண்டும்.
சண்டை நடந்துவிட்டால் கூட, குழந்தையிடம், ‘அதற்கு நீ காரணமில்லை’ என்று தெளிவாகச் சொல்லுங்கள். குழந்தைக்கு பாதுகாப்பு உணர்வை கொடுங்கள். ‘நாங்கள் உன்னை மிகவும் நேசிக்கிறோம்’ என்று அடிக்கடி செல்வதுடன், செயல்களிலும் காட்டுங்கள். அதையும் மீறி அடிக்கடி சண்டை ஏற்பட்டால் தகுதி வாய்ந்த நிபுணரின் குடும்ப ஆலோசனை (Family counseling) மிகவும் உதவும். குழந்தைகளுடன் செல்லும் இந்த ஆலோசனை நல்ல பலன் தரும்.
கவுன்சிலிங் வரை செல்லாமல், குழந்தையின் எதிர்காலத்தை மனதில் கொண்டு அவர்கள் முன்பு சண்டையிட்டுக் கொள்வதைத் தவிர்த்தால் குடும்பத்தில் நிரந்தரமாக மகிழ்ச்சி நிலவும்.