35 வயதை கடந்தும் திருமணம் ஆகாமல் ஒவ்வொரு ஊரிலும் குறைந்தது 100க்கும் மேற்பட்ட ஆண்மகன்கள் உள்ளார்கள். 30 வயதை கடந்தும் திருமணம் ஆகாமல் 50க்கும் மேற்பட்ட பெண்களும் உள்ளனர். காரணம் எதிர்பார்ப்புகள் அதிகரித்ததே.
அதாவது, மாப்பிள்ளைக்கு அடிப்படை சொத்து, விவசாய தோட்டம் ஒருசில ஏக்கர் இருக்க வேண்டும். அவரே Post graduate degree முடித்து, சென்னை, பெங்களூர் IT கம்பெனியில் வேலையில் இருக்க வேண்டும் அல்லது வெளிநாட்டில் வேலையில் இருக்க வேண்டும். குறைந்தது 75,000க்கும் மேல் சம்பளம் வாங்க வேண்டும்.
பல இளைஞர்கள் படித்த படிப்பிற்கேற்ற தகுதியான வேலை கிடைக்காததால், சுயதொழில் செய்து வருகின்றனர். சுயதொழில் செய்யும் ஆண்களை திருமணம் செய்துகொள்ள பெண்களும் அவர் வீட்டாரும் விரும்புவதில்லை.
வீட்டுக்கு ஒரே பையனாக இருந்தால் நல்லது. தோற்றத்தில் திரைப்பட நடிகர்கள் போல் இருக்க வேண்டும்.
அதேபோல ஆண்களின் எதிர்பார்ப்பு பெண்ணின் தந்தை செல்வந்தராக இருக்க இருக்க வேண்டும், பெண் பெயரில் நிறைய சொத்து இருக்க வேண்டும் , சம்பாதிப்பவளாகவும் இருக்க வேண்டும். எல்லாவகையிலும் ஆணை அனுசரித்து நடக்கவேண்டும். இறுதியாக பெண் சினிமா நடிகைகள் போல் இருக்க வேண்டும்.(1995 வரை திருமணம் செய்தவர்கள் சொத்து, உத்தியோகம், தகுதி பார்த்துதான் திருமணம் செய்வேன் என்று எண்ணி இருந்தால் இந்த தலைமுறையே இருக்காது.)
இதன் விளைவுகள் திருமண வயதை கடந்தும் ஆணும், பெண்ணும் அதிக அளவில் இருப்பது. ஒரு வகையில் ஜாதகமும் திருமணத்திற்கு தடங்கலாக இருக்கிறது.1960 முன்பு வரை ஒவ்வொரு கிராமத்திலும் பலர் 10 குழந்தைகள், 8 குழந்தைகள், குறைந்தது 5 குழந்தைகள் சர்வ சாதாரணமாக பெற்றுக்கொண்டார்கள்.1980க்கு பின் 80விழுக்காடு இரண்டு குழந்தைகளுடன் நிறுத்திக்கொண்டனர். எங்காவது ஒரு சில குடும்பத்தில் மூன்று குழந்தைகள் உண்டு. 2000க்கு பின் ஒரு குழந்தை அல்லது இரண்டு குழந்தைதான் என்பது எழுதப்படாத தீர்ப்பாக மாறிவிட்டது. ஆனால், 2010க்கு பின் ஒரு குழந்தை வேண்டுமே இறைவா என்று போகாத கோவிலும் இல்லை, பார்க்காத மருத்துவமும் இல்லை என்ற நிலையில் உள்ளோம்.
இதற்கு அறிவியல் ஆயிரம் காரணம் சொல்லலாம்; ஆனால் முதல் காரணம் ஆரோக்கியம். 1960 ஆம் ஆண்டு வாக்கில் நாம் சாப்பிட்ட பெரும்பாலான உணவு வகைகள் ராகி கம்பு சோளமாக தான் இருந்தது. அதனால் உடல் உறுதியாக இருந்தது. அதன் பின்னர் அரிசி, பட்டை தீட்டப்பட்ட அரிசி, துரித உணவுகள் என மாறிக்கொண்டே சென்றதில் நாம் ஆரோக்கியம் அதில் படுத்தே விட்டது.
இது தவிர்த்து வசதிகள் வைத்து திருமணம் முடிக்கப்பட்டால் அது வியாபாரம் என்பதையும் இன்றைய காலகட்ட பெற்றோர்கள் புரிந்து கொள்ள வேண்டும். திருமணத்துக்கு முன் ஏழையாக இருந்து, பிற்காலத்தில் பணம் புகழ் பெற்ற மனிதர்கள் ஏராளம். முதலில் சொத்து சுகம் என வாழ்ந்து திருமணம் முடிந்த சில ஆண்டுகளில் ஏழ்மைக்கு வந்தவர்கள் அதிகம்.
எனவே, வரும்காலம் இப்படிதான் இருக்கும் என்று தீர்மானம் செய்யாமல், நல்லதை மட்டும் நினைத்து மனங்கள் பிடித்தால் மணம் செய்யுங்கள். குடும்பம் மிக முக்கியமானது. அதற்கு பணம் தேவைதான். ஆனால் பணம் மட்டுமே வாழ்க்கை இல்லை. கல்வியறிவு, ஒழுக்கம், நல்லகுணம், சுறுசுறுப்பு, உழைக்கும் எண்ணம் உள்ள ஆணா, பெண்ணா என கண்டறிந்து மண முடியுங்கள்...வாழ்க்கை இனிமையாகும்.