
இந்தியாவில் அக்டோபர் முதல் டிசம்பர் வரை விழாக்காலம் என்பதால் சர்வதேச நிறுவனங்களின் ஆன்லைன் விற்பனை திருவிழாக்கள் தொடங்கிவிட்டன. பொருட்களை ஆன்லைனிலும் நேரிடையாகவும் வாங்க பொதுமக்கள் தயாராக உள்ள நிலையில் நிறுவனங்களின் கவர்ச்சிகரமான தள்ளுபடிகள் மற்றும் சலுகைகளுக்கு பின்னால் மறைந்திருக்கும் வணிக ரகசியங்களை இப்பதிவில் காண்போம்.
விற்பனை அதிகரித்துள்ள இந்த வேளையில் வழங்கப்படும் சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் மிகவும் நியாயமானவை என்பதே பெரும்பாலான வாடிக்கையாளர்களின் நம்பிக்கையாக உள்ளது.
ஆனால் செப்டம்பர் மாதம் முடியும் காலாண்டு காலத்தில் அதிக விற்பனையை பதிவு செய்ய முன்னணி நிறுவனங்கள் முனைகின்றன. இதனால் நிதி ஆண்டு முடிவில் வருமான வரி மற்றும் பிற வழிகளில் சலுகைகளை பெற முடியும் என்பதால் பண்டிகை காலங்களில் சலுகைகளை அதிகரித்து பொதுமக்களின் வாங்கும் ஆர்வத்தை தூண்டுகின்றன. இதனால் அவசியமற்ற பொருளை வாங்கும் பொதுமக்கள் மூலமாக முன்னணி நிறுவனங்கள் லாபம் பெறுகின்றன.
உதாரணமாக லேட்டஸ்ட் மொபைல் போனுக்கு 20 சதவிகிதம் தள்ளுபடி என்ற செய்தியை கேட்டதும் நமக்குத் தேவைதானா என்பதை விட அதை வாங்கும் ஆர்வம் மேலோங்கி வாங்குகிறோம். மேலும் ஸ்டாக் உள்ளவரை மூன்று மணி நேரம் மட்டும் விற்பனை என்ற செய்தியை கேட்டவுடன் அந்த நொடியே அந்த பொருளை வாங்குவதால் முன்னணி நிறுவனஙள் தங்கள் இலக்கை எளிதில் எட்டு விடுகின்றன. தேவையில்லாத பொருள் உங்கள் தலையில் கட்டப்படுகிறது என்பதுதான் வணிக ரகசியம்.
ஒரு பொருளின் உண்மையான விலையை ஆன்லைன் தளங்கள் உயர்த்தி காட்டி பின்னர் அதை பாதி விலையில் விற்பனை செய்கின்றன. உதாரணமாக ஒரு மிக்ஸி 5000ரூ எனில் அதை 7000ரூ என்று மாற்றி பின்னர் 20 சதவிகிதம் தள்ளுபடி என்று கூறி ரூ.5600க்கு விற்பனை செய்வார்கள்.
ஆனால் அதன் உண்மையான விலை 5000 தான். ஆகவே இந்த வணிக தந்திரங்களை கண்டறிய வாடிக்கையாளர்கள் கடந்த சில மாதங்களில் ஒரு பொருளின் சராசரி விலை என்ன என்பதை ஒப்பிட்டு பார்த்து வாங்குவது சிறந்தது.
கிரெடிட் கார்டு பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு தள்ளுபடி, கேஷ் பேக்,இஎம்ஐ போன்ற வசதிகள் விழாக்கால நேரங்களில் கிடைக்கின்றன. ஆனால் processing fee என்ற மறைந்திருக்கும் செயலாக்க கட்டணம் வாடிக்கையாளர்களை நிதி நெருக்கடிக்கு கொண்டு செல்லும்.
refurbished product என்ற பெயரில் விற்கப்படும் பொருட்கள் மீண்டும் சரி செய்யப்பட்ட பழைய பொருட்களாக இருப்பதால் இவற்றை வாங்குவதற்கு முன்பாக விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் முழுமையாக படித்து பார்த்து வாங்குவது அவசியம் ஆகும்.
பொருட்களுக்கு கூடுதலாக வழங்கப்படும் பாதுகாப்பு திட்டங்களும் இன்சூரன்ஸ் வசதிகளும் பெரும்பாலும் அவசியமற்றவை.
எந்த ஒரு பொருளின் விலை குறைந்து கொண்டே வருகிறதோ அந்த பொருளுக்கு தான் நிறுவனங்கள் தவணை முறையை அறிமுகப்படுத்துவார்கள். தங்கத்தை யாராவது தவணை முறையில் தருகிறார்களா என்பதை யோசிங்கள்.
ஆகவே ஒரு பொருளை வாங்குவதற்கு முன்பாக நமக்குத் தேவைதானா என்பதை யோசித்து முடிவு எடுப்பதோடு, கவர்ச்சியான விளம்பரங்களுக்கு அடிமையாகாமல் உண்மையான பொருளின் விலையை நேரிடையாக கடைகளிலும் ஆன்லைனிலும் சரிபார்த்து வாங்கி புத்திசாலித்தனமாக செலவு செய்யுங்கள்.