
இந்தியாவில் தற்போது பண்டிகைக் காலம் தொடங்கிவிட்டது. ஆயுத பூஜை, தீபாவளி, கிறிஸ்மஸ் என அடுத்தடுத்து பண்டிகைகளை நாம் கொண்டாடப்போகிறோம். இம்மாதிரியான காலங்களில் இந்தியாவில் மக்களின் நுகர்வு கலாசாரம் அதிகரித்து வருகிறது. மக்கள் அதிகமான பொருட்களை வாங்குவதற்கு கையில் இருக்கும் பணத்தையெல்லாம் செலவு செய்யத் தயாராவார்கள். அடுத்த வரும் சில மாதங்களுக்கு இந்தியாவில் எங்கு பார்த்தாலும் பொருட்களின் தள்ளுபடி விற்பனைகளையும் அதிகமாகக் காண முடியும்.
சமீப காலமாக சுலபத் தவணை முறை விற்பனை, இணைய தளத்தின் மூலம் தொடங்கி, கடைகளில் நேரடியாகச் சென்று நாம் பொருட்கள் வாங்குவது வரை அனைத்து பொருட்களுமே தற்போது நம் கையில் காசு இல்லாவிட்டாலும் கடனில் எளிதாகக் கிடைக்கின்றன. தற்போது நாம் வாங்க விரும்பும் பொருளுக்கு முழுத் தொகையையும் நாம் செலுத்த வேண்டிய தேவையில்லை. மாதம்தோறும் ஒரு கணிசமான தொகையை செலுத்தினால் போதும். இந்தியச் சந்தையில் விற்பனைக்கு வந்துள்ள சமீபத்திய நுகர்வுப் பொருட்களை 70 சதவிகிதம் நுகர்வோர் மாதாந்திர சுலபத் தவணை முறையில்தான் வாங்குகிறார்கள். அண்மையில் வெளியான ஆய்வு ஒன்றில் மாதம் 50 ஆயிரம் ரூபாய்க்கும் கீழ் சம்பளம் பெறக்கூடிய 93 சதவீத இந்தியர்கள் கடன்அட்டையைக் கொண்டுதான் தங்களின் அன்றாட செலவினங்களை மேற்கொள்வதாகக் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் தற்போது வாங்கிக் கொண்டு பின்னர் பணம் செலுத்தக்கூடிய கலாசாரம் அதிக அளவிற்கு வளர்ந்து இருக்கிறது. பண்டிகைக் காலங்களில் இவ்வாறு கடன் வாங்கி நுகர்வுப் பொருட்களை வாங்குவது இன்னும் அதிகரிக்கும்.
நமது வருமானத்திற்கு ஏற்ப செலவு செய்யும் பழக்கத்தை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும். தேவையில்லாமல் அதிக வட்டியில் பொருட்களை கடனில் வாங்கி நம்முடைய வருமானத்தை இழப்பதைத் தவிர்ப்பது நல்லது. சேமிப்பில் இருந்து நாம் ஒரு பொருளை வாங்கும் முடிவை தேர்ந்தெடுப்பதே சிறந்த முடிவாகும். மாதாந்திரக் கடன் செலுத்தும் முறையில் கணிசமான பணத்தை வட்டியாகவே செலுத்தி வருவதை நாம் பெரும்பாலான தருணங்களில் உணர்வ்தே இல்லை.
மாதாந்திர தவணை மூலம் பொருட்களை வாங்கும் வசதி நம்மில் பலரையும் எளிதாக ஒரு பொருளை வாங்கத் தூண்டிவிடுகின்றது. ஆனால், அதற்காக நாம் மாதம் தோறும் நம்முடைய செலவுகளை கட்டுப்படுத்திக் கொண்டு மாதாந்திர கடன் தவணையை செலுத்த வேண்டியிருக்கிறது.
அந்த ஒரு நாள் மகிழ்ச்சிக்காக நாம் பல நாட்கள் கஷ்டப்பட வேண்டிய சூழலுக்கு ஆளாகிறோம். குறிப்பாக, கடன் அட்டைகளை பொறுத்தவரை வட்டியாகவே பல மடங்கு பணத்தை நாம் செலுத்த வேண்டி இருக்கிறது என்பதே உண்மை. மாதாந்திர கடன் தவணை, கடன் அட்டை போன்றவை நமது மாதாந்திர வருமானத்தை நமக்கே தெரியாமல் விழுங்கிக் கொண்டிருக்கின்றன என்பதை நாம்அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்.
தற்போது பெரும்பாலான நிறுவனங்கள் ஊழியர்களின் மீது பணி நீக்க நடவடிக்கையை மேற்கொண்டு வரக்கூடிய சூழலில் கடனில் பொருட்களை வாங்குபவர்கள் ஒரு முறைக்கு பலமுறை யோசிக்க வேண்டியது கட்டாயம். நமது வருமானத்தை விட அதிகமாக செலவு செய்வதன் மூலம் நாம் ஒருபோதும் பணக்காரனாகி விட முடியாது. இந்தியாவின் தற்போதைய இந்தக் கடன் கலாசாரத்திற்கு இந்த கூற்று மிகவும் சரியாகப் பொருந்தும்.
கூடுமானவரை கடன் அட்டைகளின் பயன்பாட்டை குறைத்துக்கொள்ள வேண்டும், நமது பணத்தை காம்பவுண்டிங் முறையில் வளர்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். முறையான முதலீட்டு கருவிகளை தேர்ந்தெடுத்து நமது பணத்தை அவற்றில் முதலீடு செய்ய வேண்டும். கடன் என்பது நம்மையே அறியாமல் நம்மை முழுவதுமாக விழுங்கி விடக்கூடிய ஒரு முதலைப் போன்றது. அதில் சிக்கிக்கொண்டு நாம் இனிமையான் நம் வாழ்நாளை தொலைத்து விடக் கூடாது.
நாம் வாங்கும் பொருட்கள் விரைவில் பழைய பொருளாகி சந்தையில் அதன் மதிப்பு வெகுவாகக் குறைந்துவிடும். எனவே, கடனை அடைக்க அவற்றை ஒரு நாளும் நாம் வாங்கிய விலைக்கே திரும்பவும் விற்க விரும்பினாலும் விற்க முடியாது. எனவே, கடனும் வேண்டாம். அதனால் ஏற்படும் கவலையும் வேண்டாம் என்பதே நம் வாழ்வியலாக மாற வேண்டும். சிக்கனம் வீட்டைக் காக்கும் என்பதை உணர்ந்து இனியாவது கடனின்றி வாழப் பழகுவோம்.