
படுக்கை அறையில் நல்ல தூக்கமும், அமைதியும் நிலவ வேண்டுமானால் சில வேண்டாத விஷயங்களை தவிர்க்க வேண்டும். படுக்கை அறைக்கான வாஸ்து சாஸ்திரத்தின்படி மாஸ்டர் பெட்ரூம் வீட்டின் தென்மேற்கு மூலையில் இருக்க வேண்டும். படுக்கும் திசைக்கு, உடலின் தலை தெற்கு திசையை நோக்கியும், கால்கள் வடக்கு திசையை நோக்கியும் இருக்க வேண்டும். அமைதியின் நிறங்களான அறையின் நிறமாக நீலம், வெளிர் நீலம், பழுப்பு, வெள்ளை மற்றும் கிரீம் நிறங்களை பயன்படுத்தலாம்.
வாஸ்து சாஸ்திரப்படி தவிர்க்க வேண்டிய விஷயங்கள்:
1. தெய்வப் படங்கள்: வாஸ்து சாஸ்திரத்தின்படி படுக்கை அறையில் தெய்வங்களின் படங்களை வைக்காமல் இருப்பது நல்லது. இது தம்பதியரின் வாழ்க்கையை எதிர்மறையாக பாதிக்கும்.
2. விலங்குகளின் படங்கள்: சிலர் படுக்கை அறையில் வேட்டையாடும் விலங்குகளின் படங்கள் அல்லது சிலைகளை வைத்திருப்பார்கள். இது தம்பதிகளின் உறவில் மோதல்களை ஏற்படுத்தும். அமைதியை குலைக்கும். விரிசல்களை உண்டாக்கும். படுக்கையறை என்பது அமைதி, நிம்மதி மற்றும் சந்தோஷத்தை தரக்கூடிய இடமாக இருக்க வேண்டும்.
3. காலணிகள்: படுக்கை அறையில் எக்காரணம் கொண்டும் காலணிகளை வைக்கக் கூடாது. இரவு நேரம் பாத்ரூமுக்கு செல்ல வேண்டியிருக்கும்போது கால்கள் ஈரமாகாமல் இருப்பதற்காக சிலர் காலணிகளை வைத்திருப்பார்கள். தவிர்க்க முடியாத பட்சத்தில் அவற்றை தலைப்பகுதிக்கு அருகிலும், படுக்கைக்கு அடியிலும் வைக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இல்லையெனில் இவை எதிர்மறை சக்தியை அதிகரித்து, உடல்நலப் பிரச்னைகளை உண்டுபண்ணும்.
4. துடைப்பம்: படுக்கை அறையில், குறிப்பாக படுக்கைக்கு அடியில் துடைப்பத்தை வைப்பது தவறான செயல். இவை நம் நிதி நிலையை மோசமாக்கும். துரதிர்ஷ்டத்தை தரக்கூடியது. அத்துடன் குடும்பத்தில் உள்ளவர்களின் உடல்நல குறைபாடுகளையும் ஏற்படுத்தும்.
5. படுக்கையை பிரதிபலிக்கும் கண்ணாடிகள்: படுக்கை அறையில் கண்ணாடிகள் வைப்பதைத் தவிர்க்க வேண்டும். தவிர்க்க முடியாத சூழ்நிலையில் கண்ணாடியுடன் கூடிய பீரோக்கள் இருந்தால் அவை படுக்கையை பிரதிபலிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
6. மின்னணு பொருட்கள்: படுக்கையறை என்பது அமைதியாக தூங்கும் இடம். இங்கு இரவு தூங்கும் சமயங்களில் மின்னணு சாதனங்களை வைப்பதைத் தவிர்க்க வேண்டும். உறவுகளில் நல்லிணக்கத்தை பாதிக்கும் மின்னணு சாதனங்களை வைக்காமல் இருப்பது நல்லது. இவை தம்பதிகளுக்கு இடையே உள்ள இடைவெளியை அதிகரிக்கும்.
7. குப்பைகள் இருக்கக் கூடாது: படுக்கைக்கு அடியில் குப்பைகள் மற்றும் தேவையற்ற, பயனற்ற பொருட்கள் சேராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். படுக்கை என்பது நம் உடல் மட்டுமல்லாமல், உள்ளத்தையும் புத்துணர்வுடன் வைத்திருக்கக் கூடிய இடமாகும். இங்கு தேவையற்ற கழிவுப் பொருட்களை வைப்பது எதிர்மறை சக்திகளை உண்டாக்குவதுடன், தூக்கம் வராமலும் போகக்கூடும்.
8. படுக்கையின் மீது வரும் நேரடி சூரிய ஒளி: படுக்கையின் மீது நேரடி சூரிய ஒளி பாயும் வகையில் கதவு அல்லது ஜன்னல் அமைப்பதைத் தவிர்க்கவும். அத்துடன் படுக்கையின் எந்த பகுதியையும் அறையின் மூலையில் வைப்பதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், இது நேர்மறை ஆற்றல் ஓட்டத்தை தடை செய்யும்.
9. அறையின் மையத்தில் படுக்கை: படுக்கையை அறையின் மையத்தில் வைப்பதைத் தவிர்க்க வேண்டும். ஏனென்றால், இது ஆற்றல் பாய்வதைத் தடுக்கும். படுக்கையறை சதுரமாக இருக்க வேண்டும். படுக்கையறை கதவு வடக்கு, கிழக்கு அல்லது மேற்கு சுவர்களில் இருக்க வேண்டும். ஒற்றை கதவுதான் சிறந்தது.