தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவடைந்து பள்ளிகள் திறக்க இன்னும் சில நாட்களே உள்ளன. கடந்த சில வாரங்களாக மாணவர்கள் உள்ளூர் மற்றும் வெளியூரில் தங்களின் விடுமுறையை உற்சாகமாகக் கழித்து வருகின்றனர். சிலர் பயிற்சி வகுப்புகள், விளையாட்டு பயிற்சிகள் மற்றும் பயனுள்ள செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பள்ளி முதல் நாள் என்பது மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் பெற்றோர்களுக்கும் ஒரு முக்கிய தருணமாகும்.
புதிய ஆண்டு, புதிய வகுப்பு, புதிய நண்பர்கள், ஆசிரியர்கள் என பல மாற்றங்களைத் தரும் பள்ளி முதல் நாள் பலருக்கு உற்சாகமாக இருந்தாலும், சிலருக்கு அது பதற்றத்தை ஏற்படுத்தும் தருணமாகவும் இருக்கலாம். எனவே, பள்ளி முதல் நாளை அமைதியான மனநிலையில் சந்திக்க சில எளிய குறிப்புகள் பற்றி இங்கே வாசிக்கலாம்.
1. முன்கூட்டியே தயாராகுங்கள்
பள்ளிக்கு செல்லும் முன் தேவையான அனைத்து உபகரணங்களையும் புத்தகங்கள், பென்சில் பாக்ஸ், சீருடைகள் போன்றவை முன்பே தயார் செய்து வைக்க வேண்டும். இது அந்த நாளில் ஏற்படக்கூடிய அவசரத்தைத் தவிர்க்க உதவும். முன்கூட்டியே தயாராக இருப்பது மனநிலையையும் அமைதியாக வைத்திருக்க பெரிதும் உதவுகிறது.
2. நல்ல உறக்கம் எடுக்க வேண்டும்
பள்ளிக்கு செல்ல இருக்கும் முன்னிரவில் நன்றாக உறங்க வேண்டும். முழுமையான தூக்கம், மூளையின் செயல்திறனை மேம்படுத்தி, மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. பள்ளி தினம் ஆரம்பமாகும் போது புத்துணர்ச்சியுடன் இருப்பதற்கும் நல்ல உறக்கம் தேவை.
3. நேர்மறையாக அணுகுங்கள்
புதிய சூழ்நிலைக்குள் செல்லும் போது ‘நான் இதைச் சமாளிக்க முடியும்’ என்ற நம்பிக்கையுடன் செல்லுங்கள். பதற்றம் அல்லது தயக்கம் ஏற்பட்டாலும், அதைத் தன்னம்பிக்கையுடன் சமாளிக்கும் மன தைரியத்தை உருவாக்குங்கள். புதிய அனுபவங்களை ஏற்கும் திறன் உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக அமையும்.
4. புதிய நண்பர்களைச் சந்திக்க தயங்க வேண்டாம்
புதிய நண்பர்களைச் சந்திப்பது பள்ளி வாழ்க்கையை மகிழ்ச்சியாக மாற்றும். முதலில் நீங்கள் பேசத் தொடங்கினால் மற்றவர்களும் உற்சாகமாக பதிலளிப்பார்கள். இது நட்பு வளையத்தை விரிவுபடுத்தவும், தனிமையை தவிர்க்கவும் உதவும்.
5. நேரத்தை மதிக்க பழகுங்கள்
பள்ளியின் அட்டவணையை பின்பற்றுவது மிகவும் முக்கியம். வகுப்பு நேரம், இடைவேளை மற்றும் உணவு நேரத்தில் ஒழுங்குடன் நடந்து கொள்ளும் பழக்கம் வளர வேண்டும்.
6. ஆரோக்கியமான காலை உணவை தவறவிட வேண்டாம்
காலை உணவு மிக முக்கியமானது. சத்தான எளிதில் செரிக்கக்கூடிய உணவுகள், பள்ளி நேரத்தில் மூளையின் செயல்திறனை உயர்த்த உதவுகின்றன. பசி மற்றும் கவனச்சிதறலைத் தவிர்க்கவும், நாள் முழுவதும் புத்துணர்வுடன் இருக்கவும் ஆரோக்கியமான காலை உணவு உதவியாக இருக்கும்.
அதன் வகையில், பள்ளி வாழ்க்கையின் ஒரு புதிய பயணத்தை தொடங்கும் முதல் நாள், ஒவ்வொருவருக்கும் ஒரு நினைவான நாள். பெற்றோர் மற்றும் ஆசிரியர்களும் குழந்தைகளுக்கு ஆதரவாக இருந்தால் அவர்கள் சுறுசுறுப்பாகவும் தன்னம்பிக்கையுடனும் புதிய ஆண்டை எதிர்கொள்ள முடியும். சிறிய நடவடிக்கைகள், பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும். அதை நினைவில் வைத்துக்கொண்டு பள்ளி முதல் நாளை மகிழ்ச்சியாகக் கொண்டாடுங்கள்.