
இந்தியக் கோவில்களில் பல ஆச்சர்யங்களும், அதிசயங்களும் புதைந்திருக்கிறது. எண்ணிலடங்கா பல விநோத நிகழ்வுகள் இங்குள்ள கோவில்களில் நடந்தேறியிருக்கிறது. அத்தகைய ஒரு வினோத சம்பவத்தைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
குஜராத் மாநிலத்தில் கார்பூர் என்ற இடத்தில் அமைந்துள்ள சுவாமி நாரயண கோபிநாத் கோவிலில் இருக்கும் கிருஷ்ணர் 50 ஆண்டுகளுக்கு மேலாக கைக்கடிகாரம் அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார் என்று சொன்னால் நம்பமுடிகிறதா? இந்த கைக்கடிகாரம் ஆங்கிலேயர் ஒருவரால் கிருஷ்ணருக்கு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒருமுறை இந்த கிருஷ்ணர் கோவிலுக்கு ஆங்கிலேயர் ஒருவர் சுற்றிப் பார்க்க வந்திருந்தார். அச்சமயம் கோவிலின் பூசாரி, ‘இந்த கிருஷ்ணர் சிலை உயிரோட்டம் கொண்டது’ என்று ஆங்கிலேயரிடம் கூறினார்.
அதைத்கேட்டு நம்ப மறுத்த ஆங்கிலேயர், உடனே தன் கைகளில் அணிந்திருந்த கைக்கடிகாரத்தை கழட்டி, ‘இதை கிருஷ்ணரின் கைகளில் அணிவியுங்கள். இந்த கைக்கடிகாரம் நம்முடைய நாடித்துடிப்பின் மூலமாக ஓடக்கூடியது. கிருஷ்ணரின் கைகளில் இது ஓடினால் நான் நீங்கள் சொல்வதை நம்புகிறேன்’ என்று கூறினார்.
உடனே பூசாரியும் அந்த கைக்கடிகாரத்தை வாங்கி கிருஷ்ணர் சிலையில் அணிவித்தார். என்ன ஆச்சர்யம்! அந்த ஆங்கிலேயர் தன் கையில் இருந்து கழட்டிய போது நின்ற கைக்கடிகாரம் கிருஷ்ணர் சிலையின் கையில் அணிவித்தப்போது ஓடத்தொடங்கியது. இதைப்பார்த்த அந்த ஆங்கிலேயர் ஆச்சர்யம் கலந்த அதிர்ச்சியுற்றார். இன்றும் அந்த கிருஷ்ணரின் சிலையின் கைகளில் கைக்கடிகாரத்தை காண முடியும்.
கிருஷ்ணரின் கைகளில் அணிந்திருக்கும் கைக்கடிகாரம் சுமார் 50 வருடங்களாக தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கிறது. இன்றைக்கும் அது சரியான நேரத்தை காட்டிக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கிருஷ்ணருக்கு அலங்காரம் செய்யும் போது கைக்கடிகாரம் கழட்டப்படுகிறது. அப்போது நின்றுப்போகும் கடிகாரம் மீண்டும் கிருஷ்ணர் சிலையின் கையில் அணிவிக்கும் போது ஓடத்தொடங்குகிறது. இந்த அதிசய நிகழ்வைக் காண எண்ணற்ற பக்தர்கள் இந்த கோவிலுக்கு வருகைத் தருகிறார்கள். உங்களுக்கும் கிருஷ்ணரை மிகவும் பிடிக்கும் என்றால், கட்டாயம் இந்தக் கோவிலுக்கு ஒருமுறையாவது சென்று வருவது சிறப்பாகும்.