வாழ்வில் பல விஷயங்களையும் தத்துவங்களையும் நம்மால் ஏற்றுக்கொள்ளவே முடியாது. அந்த உண்மைகளை நாம் கசப்பான உண்மைகள் என்று அழைப்போம். சிலர் அதனை ஏற்றுக்கொள்ளாமல் தொடர்ந்து ஏமாற்றங்களை சந்திப்பார்கள். சிலர் அந்த ஏமாற்றங்களைக் கடந்து அதிலுள்ள உண்மைகளை ஏற்றுக்கொள்ள ஆரம்பிப்பார்கள். ஆனால், சிலர் எதனால் ஏமாறுகிறோம் என்று தெரியாமலேயே மீண்டும் மீண்டும் பாதிக்கப்படுவார்கள். இனி, வாழ்வின் கசக்கும் அந்த உண்மைகளை அறிந்துக்கொண்டு அதனை ஏற்றுக்கொள்ள பழகுங்கள்.
1. உங்களுடைய வாழ்க்கையின் ஒருகட்டத்தில் வாழ்க்கைத் துணை என்பது அவசியமாகிவிடும். அந்த சமயங்களில் நீங்கள் செய்யும் அனைத்து விஷயங்களுக்கும் துணையாக இருக்கும் ஒருவரை தேர்ந்தெடுங்கள். அப்படி யாரும் கிடைக்கவில்லை என்றால் கிடைக்கும் வரை நீங்கள் தனியாக இருப்பதே நல்லது. அப்படி இல்லாமல் ஊர் பேசும், உறவு பேசும் என்று எண்ணி தப்பான நபரை தேர்ந்தெடுத்தீர்கள் என்றால் வாழும் ஒரு வாழ்க்கையும் வீணாகிவிடும். வீணானால் கூட பரவாயில்லை, வேறொருவர் கைகளுக்குச் சென்று கொடுமையையே அனுபவிக்கும். Supportive partner அல்லது No partner என்ற மந்திரத்தை நினைவில் கொள்ளுங்கள்.
2. உங்கள் நண்பரோ அல்லது உங்களுடன் இருப்பவர்களோ உங்களைப் புகழ்ந்து பேசிக்கொண்டே இருந்தால் உங்களுக்கும் மிகவும் பிடிக்கும்தானே? அதேபோல், ஒருவர் உங்களை குறை கூறினால் அதற்காக நீங்கள் வருத்தப்படுகிறீர்களா? இனி அந்த வருத்தம் வேண்டாம். ஏனெனில், உங்கள் வளர்ச்சி மேல் அக்கறைக் கொண்டவர்கள் நன்மைகளை மட்டுமல்ல, உங்களின் குறைகளையும் எடுத்துக் கூறுவார்கள். குறை கூறுவது என்பது தவறானது அல்ல. அது உங்களைத் திருத்திக்கொள்ள உதவும் ஒரு வழி என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.
3. உங்கள் வாழ்வில் நிறைய வருடங்கள் ஒரே நிறுவனத்தில் பணிபுரிய வேண்டுமென்று நினைக்கிறீர்களா? நீங்கள் பகல், இரவு என முழுவதும் வேலைப் பார்த்துக்கொண்டு அதில் வரும் பணத்தை செலவு செய்யக் கூட நேரமில்லாமல் இருக்கும்போது வாழ்க்கையை எப்படி முழுவதுமாக உங்களால் வாழ முடியும். ஆகையால், கொஞ்ச காலம் குடும்பத்துடனும் கொஞ்ச காலம் வீட்டிலிருந்தும் வேலை பாருங்கள். உலகின் அழகையும் இயற்கையின் ரகசிய மொழிகளையும் கேட்க நேரத்தை செலவிடுங்கள்.
4. சுயமரியாதை என்பது சுயக்கட்டுப்பாட்டினால் ஏற்படும் ஒன்று. ஆம்! ஒருவர் மேல் இருக்கும் அன்பு அதிகமாகி அவரிடம் அன்புக்காக ஏங்கும்போது சுயமரியாதையை இழக்க நேரிடும். ஆகையால், உங்கள் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துங்கள். இந்த உண்மையை ஏற்றுக்கொண்டால், இப்போதே உணர்வுகளைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளை செய்ய ஆரம்பியுங்கள்.
5. உங்களுடைய சந்தோஷங்கள் சமூக வலைத்தளத்திலும் அதில் பேசுபவர்களிடமும்தான் உள்ளது என்று நினைப்பது முட்டாள்தனம். பெரும் பகுதி நேரத்தை அதில் செலவழித்து முன்னேற்றத்திற்கான பாதைகளை மறந்து விடுகிறோம். சிலர் போனில் நிறைய விஷயங்களை கற்றுக்கொள்ளலாமே என்று கூறுவார்கள். உண்மைதான். நாம் புத்தகம் படிக்கும்போது மட்டும் முழு நேரமும் படிக்கிறோமா என்ன?
இந்த ஐந்து உண்மைகளைப் புரிந்துக்கொண்டு அதனை ஏற்றுக்கொண்டாலே பல பிரச்னைகள் வராமல் தடுக்க முடியும்.