இந்த உலகில் வாழ்வதற்கு ஒவ்வொரு மனிதனுக்கும் உணவு அவசியம். உண்ணும் உணவு ஆரோக்கியமாக. சுகாதாரமாக இருப்பது மிகவும் அவசியம். மனித ஆரோக்கியத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் உணவுப் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதற்காக ஐக்கிய நாடுகள் சபையால் உலக உணவுப் பாதுகாப்பு தினம் நிறுவப்பட்டது. அது ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 7ம் தேதி கொண்டாடப்படுகிறது. உணவினால் பரவும் நோய்களின் சுமையை குறைப்பதன் மூலம் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும்.
உணவுப் பொருட்களை பாதுகாப்பதன் அவசியம்: உணவுப் பொருட்களை பாதுகாத்து வைப்பது அவசியம். ஏனென்றால், அவை சீக்கிரமாக கெட்டுவிடும். ஈரப்பதமான உணவில் பாக்டீரியாக்கள் விரைவில் பெருகும். அந்த உணவை உண்பவர்களுக்கு நோய்கள் ஏற்படும். நோய்க்கிருமிகள் மற்றும் பாக்டீரியாக்களின் தாக்குதலைக் குறைக்க, ஈ.கோலி, சால்மோனெல்லா மற்றும் பிற நோய்க்கிருமிகள் மற்றும் பாக்டீரியாக்களால் நீண்ட காலமாக சேமிக்கப்படும் உணவு கெட்டுப்போகும் அபாயம் உள்ளது. எனவே, உணவுப் பொருட்களை அழிக்காமல் பாதுகாக்க வேண்டும். உணவு கெட்டுப்போவதால் அதனுடைய சுவை அமைப்பு மற்றும் தோற்றத்தை கணிசமாக பாதிக்கிறது. அதன் ஊட்டச்சத்தும் அழிந்து போகிறது. மேலும், அவற்றை உண்பவர்களுக்கு நோய்கள் ஏற்படும்.
உணவுப் பொருட்களைப் பாதுகாக்கும் முறைகள்:
காய்கறிகளை சேமிப்பதற்கான வழிகள்: காய்கறிகளை வாங்கி வந்ததும் அவற்றைப் பிரித்து உருளைக்கிழங்கு, வெங்காயம் போன்றவற்றை ஈரம் இல்லாத இடத்தில் உலர வைக்கவும். மற்ற காய்கறிகளை நன்றாக துணியால் துடைத்து விட்டு தனித்தனி கவர்களில் போட்டு பிரிட்ஜில் ஸ்டோர் செய்து வைக்கலாம். சமைக்கும் முன் அவற்றை நன்றாகக் கழுவி விட்டு அதன் பின்பே உபயோகிக்க வேண்டும். வாங்கி வந்த இரண்டு மூன்று நாட்களிலேயே அவற்றை உபயோகப்படுத்துவது நல்லது. இல்லையென்றால் அவற்றில் உள்ள சத்துக்கள் அழிந்து விடும். கீரைகளை ஆய்ந்து தனிக்கவரில் போட்டு வைக்க வேண்டும். கொத்தமல்லி, புதினா கருவேப்பிலை போன்றவற்றில் உள்ள மண் போக நன்றாகக் கழுவி விட்டு உலர வைத்து பின் அவற்றை தனித்தனிக் கவரில் போட்டு ஃப்ரிட்ஜில் வைக்கவும். தேவைக்கேற்ற காய்களை மட்டும் வாங்குவது நல்லது.
பால் பொருட்கள்: பால், தயிர் போன்ற பொருட்களை வாங்கி ஒரு நாளுக்குள் உபயோகம் செய்து விட வேண்டும். பாக்கெட் பால் வாங்கினால் அதை பாத்திரத்துக்கு மாற்றி காய்ச்சி ஆற வைத்து ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டும். அதேபோல, தயிரையும் உபயோகித்து முடித்ததும் ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டும்.
இறைச்சி, மீன்: இறைச்சியை வாங்கிய அன்றே உபயோகித்து விட வேண்டும். சமைக்காத இறைச்சியை ஃப்ரிட்ஜில் நீண்ட நேரம் வைக்கும்போது அதில் பாக்டீரியாக்கள் பல்கிப் பெருகி விடும். மீன் வகைகளை இரண்டு நாட்களுக்குள் பயன்படுத்தி விட வேண்டும்.
இட்லி மாவு: இட்லி மாவை இரண்டு நாட்களுக்கு மட்டும் பயன்படுத்தினால் நல்லது. சிலர் ஒரு வாரம் முழுவதும் இட்லி மாவை ஃப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்துவார்கள். அது தவறு. இப்படிச் செய்வது பல நோய்களுக்கு வழிவகுக்கும்.
ஊறுகாய்: ஊறுகாய் போன்ற பொருட்களை ஒரு பீங்கான் பாட்டிலில் அடைத்து வைத்து அதில் மர ஸ்பூன் போட்டு வைக்க வேண்டும். தண்ணீர் படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இல்லை என்றால் அது கெட்டுவிடும். கத்தரிக்காய், சுண்டைக்காய், நெல்லிக்காய், மாங்காய், அரை நெல்லிக்காய் போன்றவற்றை காய வைத்து வத்தலாக உபயோகிக்கலாம்.
செய்யக் கூடாதவை: சமைத்த உணவை ஃப்ரிட்ஜில் வைக்கக் கூடாது. வெள்ளை சாதத்தை பிரிட்ஜில் வைத்து உபயோகிக்கக் கூடாது. மீண்டும் சூடுபடுத்தினால் அதில் உள்ள சத்துக்கள் அழிந்து விடும். உடலுக்கும் கேடு. அதேபோல, சமைத்த உருளைக்கிழங்கையும் ஃப்ரிட்ஜில் வைத்து மீண்டும் உபயோகப்படுத்தக் கூடாது.