ஏர் கண்டிஷனரை உபயோகிப்பதால் கோடைக் காலங்களில் அதீதமான வெப்பத்திலிருந்து விடுதலை கிடைக்கிறதென்றாலும், அதிக நேரம் ஏ.சி.யிலேயே இருப்பது பல வகையான ஆரோக்கிய சீர்கேடுகளை உண்டுபண்ணும் என்பதும் உண்மை. இப்படி எந்த நேரமும் ஏசியிலேயே இருப்பதால் நம் உடலுக்கு என்னென்ன தீங்குகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
ஏ.சி.யிலிருந்து வெளியேறும் வறண்ட குளிர் காற்றானது சுவாசப் பாதையில் எரிச்சலை உண்டுபண்ணும். சுவாசப் பாதையில் உள்ள ஈரமான சவ்வுகள் வறண்டு போவதால் சுலபமாக சுவாசக் கோளாறுகள் உண்டாகும் வாய்ப்பேற்படும்.
தொடர்ந்து ஏ.சி.யின் குளிர்ச்சியில் இருக்கும்போது வறண்ட காற்றானது சருமம் மற்றும் கண்களின் ஈரத் தன்மையைக் குறைத்துவிடும். இதனால் கண்கள் ஈரப் பசையின்றி எரிச்சல் ஏற்பட காரணமாகும்.
குளிர்ச்சியான சூழலில் இருக்கும்போது சிலருக்கு கால்களின் தசைகள் கடினமாகி மூட்டுக்களில் வலி உண்டாகும். ஏற்கெனவே ஆர்த்ரைடிஸ் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு அந்தப் பிரச்னை இன்னும் தீவிரமாகும் அபாயம் உள்ளது.
அதிகக் குளிரினால் உடலின் நீர்ச்சத்து குறைவதாலும் இரத்தக் குழாய்கள் சுருங்குவதாலும் சிலருக்கு தலைவலி உண்டாகவும் வாய்ப்புண்டு.
ஏ.சி. யூனிட்டில் ஒவ்வாமையை உண்டாக்கும் கூறுகளை வடிகட்டி பிரித்தெடுக்கும் வசதி உண்டு. சரியான பராமரிப்பில்லாத காரணத்தால் ஏ.சி. யூனிட்டிலிருந்து வெளிப்படும் குளிர் காற்றுடன் அலர்ஜென்களும் (Allergens) சேர்ந்துவிடுவதுண்டு. இதனால் ஒவ்வாமை மற்றும் ஆஸ்துமா நோய்களுக்கான அறிகுறிகள் தோன்றுவதைத் தவிர்க்க இயலாது.
இரவில் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலையில் தூங்க முற்படும்போது நமது ஸ்லீப் சைக்கிள் தொந்தரவுக்குட்பட்டு நாம் தூங்க ஆரம்பிக்கும் நேரத்திலும் அமைதியான தூக்கம் பெறுவதிலும் தடை ஏற்பட வாய்ப்புண்டாகும்.
குறிப்பிட்ட இடைவெளியில் தகுந்த பராமரிப்புப் பெறாத ஏ.சி. யூனிட், லெஜியோனெல்லா (Legionella) என்ற ஒரு வகை பாக்டீரியாக்களின் உறைவிடமாகிவிடும். அவை நிமோனியா வகையைச் சேர்ந்த லெஜியோனெய்ர்ஸ் (Legionnaires) என்ற ஓர் அபாயகரமான நோயை வரவழைக்கக் கூடியவை.
ஏ.சி.யை அதிகம் உபயோகிப்பவர்கள் மேற்கூறிய கருத்துக்களை மனதில் வைத்துக்கொண்டு ஏ.சி.யையும் தங்கள் உடல் ஆரோக்கியத்தையும் நல்ல முறையில் பராமரிப்பது மிக மிக அவசியம்.