
மன்னிப்பு எனும் வார்த்தை மனுக்குலத்துக்கே உரியது. மிகவும் எளிதான இந்தச் செயலைச் செய்வதில்தான் இன்று பலருக்கும் தயக்கம் இருக்கிறது. அதனால்தான் நமது வாழ்க்கை சண்டை, அடிதடி, வெறுப்பு, கோபம், நோய்கள் என துயரத்தின் நெருக்கடிகளில் சிக்கித் தவிக்கிறது.
நாம் கோபப்படும் போது நம்முடைய இரத்த அழுத்தம் எகிறுகிறது. எல்லை மீறினால் மாரடைப்பே வந்து விடுகிறது. ஆனால் இந்த நிகழ்வின் துவக்கத்திலேயே நீங்கள் அந்த நபரை மன்னித்து விட்டால் அத்துடன் சிக்கல்கள் எல்லாம் முடிந்து விடும்.
மன்னிப்பது கோழைகளின் செயல் என பலரும் நினைக்கிறார்கள். உண்மையில் மன்னிப்பதுதான் போரை விட வீரமானது. போர் உடல்களைத் தான் வெற்றி கொள்ளும், மன்னிப்பு தான் மனதையே வெற்றி கொள்ளும். இதைத் தான் மகாத்மா சொன்னார், “மன்னிப்பு பலவான்களின் செயல், பலவீனர்களால் மன்னிக்க முடியாது.”
பல வேளைகளில் தவறிழைக்கும் நபர்கள் தவறை உணர்ந்து தட்டுத் தடுமாறி மன்னிப்புக் கேட்பதுண்டு. அப்படிப்பட்டவர்களை நிபந்தனையற்று மன்னியுங்கள். “சே.. இதுல மன்னிப்பு கேட்க என்ன இருக்கு” என்பது போன்ற வார்த்தைகள் நட்பையும், உறவையும் பலமடங்கு இறுக்கமாக்கும்.
சிலர் மன்னிப்புக் கேட்க தயங்குவார்கள். அப்படிப்பட்டவர்களுடன் பழகும்போது எந்த வித்தியாசமும் இல்லாமல் பழகுங்கள். அவர்களை மனதார மன்னித்துவிட்டதைச் செயல்களில் காட்டுங்கள். மன்னிப்புக் கேட்கும் முன்னாலேயே மன்னிப்பது உயர்ந்த நிலை. நாம் அனைவரும் தவறும் இயல்புடையவர்கள் எனும் உணர்வு நமக்கு இருந்தால் மன்னிப்பு வழங்க மறுப்பதில் அர்த்தமில்லை .
மன்னிப்புக் கேட்கும்போதும் அடுத்தவரைக் குற்றம் சாட்டும் மனநிலையுடனோ, பழி போடும் மனநிலையுடனோ, ரொம்பவே தற்காப்பு மனநிலையுடனோ பேசாதீர்கள். “செய்தது தவறு வருந்துகிறேன்… “ எனும் நேர்மையுடன் பேசுங்கள். உடனடியாக மன்னிப்புக் கிடைக்கவில்லையென்றால் பதட்டப்படாதீர்கள்.
மன்னிப்பைப் பற்றி மருத்துவம் சொல்வது கதிகலங்க வைக்கிறது. “நீங்கள் ஒரு நபர் மீது எரிச்சலும், கோபமும் கொள்ளும்போது உங்கள் மூளையில் ஒரு வடிவம் உருவாகிறது. உங்கள் எரிச்சலும், கோபமும் அதிகரிக்க அதிகரிக்க அந்த வடிவம் ரொம்ப வலுவாக மாறிவிடுகிறது. அந்த வலுவான நிலைமை பின்னர் உங்கள் இயல்பாகவே மாறிப் போகிறது. அதன் பின் கோபமும், எரிச்சலும் இல்லாமல் வாழ்வது உங்களுக்கு குதிரைக் கொம்பாகிவிடும்” என்கின்றன மருத்துவ ஆராய்ச்சிகள்.
மன்னிக்கும் பழக்குமுடைய மனிதர்கள் ஆனந்தமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கிறார்கள் என்கின்றன பல்வேறு ஆராய்ச்சிகளின் முடிவுகள். மன்னிக்கும் மனிதர்கள் உடலிலும், உள்ளத்திலும் ஆரோக்கியமாகவும் ஆனந்தமாகவும் இருப்பதாக அடித்துச் சொல்கின்றன.
இந்தியா மதங்களின் நாடு. மதங்கள் எல்லாமே மன்னிப்பைப் பேசுகின்றன. “ஒரு மனிதன் தேவ நிலையை அடையவேண்டுமெனில், மன்னிக்கும் குணம் அவனிடம் இருக்க வேண்டும்” என்கிறது பகவத் கீதை. இஸ்லாம் கடவுளை “அல் கஃபிர்” என்கிறது, முழுமையாய் மன்னிப்பவர் என்பது அதன் அர்த்தம். “மன்னிக்க மறுப்பவர்கள் சுவர்க்கம் செல்ல முடியாது” என்கிறது கிறிஸ்தவம்.
மன்னிப்பு சட்ட திட்டங்களால் வருவதில்லை. மன்னிக்கும் மனதுடைய மக்களுடன் பழகும் போது நம்மை அறியாமலேயே அந்த நல்ல பழக்கமும் நம்முடன் வந்து ஒட்டிக் கொள்கிறது. மன்னிக்கும் மனநிலை பெற்றோருக்கு இருந்தால் பெற்றோர்களைப் பார்த்து வளரும் குழந்தைகள் மன்னிக்கும் மனநிலையை எளிதாகவே பெற்று விடுவார்கள். குழந்தைகளுக்கு மன்னிக்கும் மனம் இயல்பாகும்போது எதிர்கால சமூகம் வன்முறைகளின் வேர்களை அறுத்துவிடும்.
மன்னிப்பு கடந்தகாலத்தின் நிகழ்வுகளை மாற்றாது. ஆனால் அது எதிர்காலத்தை ஆனந்தமாக மாற்றும். வாழ்க்கை பணத்தினாலோ, செல்வத்தினாலோ கட்டப்படுவதல்ல. அது அன்பின் இழைகளால் பின்னப்படுவது. உண்மையான அன்பு இருக்கும் இடத்தில் மன்னிக்கும் மனம் தானே முளைவிடும்.
மன்னிப்புக் கேட்கும் எவருக்கும், மன்னிப்பை மறுக்காதீர்கள். மன்னிப்புக் கேட்காதவர்களையும் மன்னிக்க மறக்காதீர்கள். ஏனெனில் மன்னிப்பு மட்டுமே மகத்துவமிக்க மனிதகுலத்தை உருவாக்கும்.