மூளை ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் செயல்பட நான்கு பயிற்சிகள்!

Four exercises to keep the brain healthy and active
Four exercises to keep the brain healthy and activehttps://tamil.oneindia.com

டலுக்கு நடைப்பயிற்சி மற்றும் உடற்பயிற்சி மிகவும் முக்கியம். அவை எலும்புகளையும் தசைகளையும் உறுதியோடு வைக்கிறது. ஆரோக்கியமான உடல் அமைப்பைத் தருகிறது. அதுபோல மூளையும் நன்றாக சுறுசுறுப்பாக வேலை செய்யவும் ஆரோக்கியமாக இருக்கவும் ஞாபக சக்தி அதிகரிக்கவும் மூளைக்கும் சில பயிற்சிகள் அவசியம்.

மூளைப் பயிற்சிகளின் பயன்கள்: இந்த விதமான மூளை பயிற்சிகளை தினமும் செய்வதால் சிந்தனை கூர்மையாகும். மூளையின் செயல்பாடுகள் மேம்படும். புத்திசாலியாக மாற்றும். மூளையின் ஆரோக்கியத்திற்கு அதிசயங்களைச் செய்யும்.

1. புதிய விஷயங்களை கற்றுக்கொள்ளுதல்: ஒருவர் எந்த வயதில் இருந்தாலும் புதிய விஷயங்களை கற்றுக்கொள்ள முடியும். இதற்கு அதீத ஆர்வமும் அர்ப்பணிப்பு உணர்வும் இருந்தால் போதும். டெக்னிக்கலான விஷயங்களை கூட கற்றுக்கொள்ள முடியும். வயதானவர்களுக்கு டிஜிட்டல் போட்டோகிராபி பற்றி தெரிந்துகொள்ள ஆசை என்றால் அதற்கான பயிற்சி வகுப்பில் சேர்ந்து கற்றுக் கொள்ளலாம். இசைக்கருவிகள் வாசிப்பது, கார் ஓட்ட கற்றுக் கொள்வது, புதிய மொழியை கற்றுக் கொள்வது என்பது போன்ற எந்த விஷயமாக இருந்தாலும் கற்றுக் கொள்ளலாம். இது மூளையை சுறுசுறுப்பாக வைக்கும் திறன்களை மேம்படுத்தும்.

2. பிறருடன் பழகுதல்: பெரும்பாலும் வயதானவர்கள் தனித்தே இருப்பார்கள். அதனால் அவர்களுடைய ஞாபக சக்தி குறையக்கூடும். ஆனால், சமூகத்தினருடன் நன்றாகப் பழகக்கூடிய மனிதர்களுக்கு ஞாபக சக்தி அதிகமாக இருக்கும். பிறருடன் பழகும் சமூகத் தொடர்பு மூளைக்கு பிளாஸ்டிசிட்டியை ஊக்குவிக்கும். பிளாஸ்டிசிட்டி என்பது மூளை ஆரோக்கியமாக செயல்பட உதவும் அத்தியாவசியமான ஒரு விஷயம். பிறருடன் நன்றாக கலந்து பழகும்போது அது மனதிற்கு மட்டும் மகிழ்ச்சி தருவதில்லை, மூளையையும் சுறுசுறுப்பாக வைக்கிறது. ஆழமான மற்றும் அர்த்தமுள்ள உறவுகளை உருவாக்க உதவுகிறது. நல்ல நினைவாற்றல் மற்றும் உணர்ச்சிகளை சீராக வைத்திருக்கவும் உதவும்

3. இடது கையை உபயோகிக்கவும்: பெரும்பாலும் வலது கைதான் அதிகமாக உபயோகத்தில் இருக்கும். சிலர் இடதுகைப் பழக்கம் உள்ளவர்களாக இருப்பார்கள். எனவே, அதிகம் உபயோகப்படுத்தாத கை எதுவாக இருந்தாலும் அதை அதிகமாக பயன்படுத்தப் பழக வேண்டும். இது ஒரு எதிர்மறையான பயிற்சி. ஆரம்பத்தில் மிகவும் கடினமாக கூட இருக்கலாம்.

இதையும் படியுங்கள்:
ஃபென்னல் டீயில் இத்தனை ஆரோக்கிய நன்மைகளா?
Four exercises to keep the brain healthy and active

நரம்பியல் நிபுணர் லாரன்ஸ் கார்ட்ஸ் என்பவர் மூளையின் வலிமையை மேம்படுத்த, ஆதிக்கம் செலுத்தாத கையை பயன்படுத்த பரிந்துரைக்கிறார். அதிகம் உபயோகப்படுத்தாத கையை பழக்குவது சவாலான விஷயம். ஆனால், மூளையின் செயல்பாட்டை அதிகரிக்க இது ஒரு சிறந்த வழி என்று ஆய்வுகள் நிரூபிக்கின்றன. 80 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கூட நல்ல ஞாபக சக்தியையும் மேம்பட்ட மூளையின் செயல்பாடுகளுக்கும் வழிவகுக்கிறது. எல்லாவற்றையும் வலது கையால் எடுக்காமல் இடது கையாலும் எடுக்கவும் வேலை செய்யவும் பழக்க வேண்டும். எளிய சிறிய வார்த்தைகளை எழுத வேண்டும்.

4. ஓட்டப்பயிற்சி (ரன்னிங்): ஓட்டப்பயிற்சி சிந்தனை திறன்களை அதிகரிக்கும். கவனச்சிதறல்களை தடுக்கும். அறிவாற்றலை மேம்படுத்தி செயல்பாட்டை கூர்மைப்படுத்தும். ஓடுவது மூளையை மிக ஆரோக்கியமாக வைத்திருக்கும். அரிசோனா பல்கலைக்கழகம், மனித நரம்பியல் அறிவியல் துறை வெளியிட்டுள்ள ஆராய்ச்சி முடிவில் நீண்ட தூர ஓட்டப்பந்தய வீரர்களின் மூளை உடற்பயிற்சி செய்யாதவர்களின் மூளையை விட அறிவாற்றல், திட்டமிடுதல், முடிவெடுத்தல், செயல்படுத்துதல் போன்றவற்றில் மிகுந்த சுறுசுறுப்பாகவும் மேம்பட்டதாகவும் இருப்பதாகக் கூறுகிறது.

எனவே, இந்த நான்கு பயிற்சிகளையும் மேற்கொண்டால் எந்த வயதுக்காரர்களுக்கும் மூளையின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com