குழந்தையின் கோபத்தை மாற்றும் நான்கு மந்திர வார்த்தைகள்!

Four magic words that will change a child's anger!
Four magic words that will change a child's anger!
Published on

பெரும்பாலான குடும்பங்களில் தற்போது ஒற்றைக் குழந்தையாக இருப்பதால் நிறைய செல்லம் கொடுத்து வளர்க்கப்படுகிறார்கள். இதனால் அந்தக் குழந்தைக்கும் சட்டென்று கோபம் வந்து விடுகிறது. சென்ற தலைமுறை பெற்றோர்களைப் போல இன்றைய தலைமுறை பெற்றோர்களால் அடிக்கவோ, திட்டவோ முடியவில்லை. குழந்தைகள் கோபமடையும்போது அவர்களின் உணர்ச்சிகளை குறைத்து, அவர்களை சமாதானப்படுத்த உதவும் நான்கு மந்திர வார்த்தைகள் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

நான்கு மந்திர வார்த்தைகள் என்ன?

குழந்தை கோபத்தில் கத்தும்போது அல்லது அழும்போது அதை அடிப்பதோ அல்லது திட்டுவதோ சரியான செயல்முறை அல்ல. அதனுடைய கோபம் இன்னும் அதிகமாகுமே தவிர, குறையாது. எனவே, அவர்களிடம் சொல்ல வேண்டிய நான்கு மந்திர வார்த்தைகள், ‘உனது உணர்வுகளை நான் புரிந்துகொள்கிறேன்’ என்பதுதான்.

இந்த சொற்றொடர் குழந்தையின் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த உதவுகிறது. தன்னை பெற்றோர் புரிந்து கொண்டனர் என்பதை அறிந்தவுடன் குழந்தையின் கோபமும் சட்டென அல்லது படிப்படியாக குறையும். இந்த அணுகுமுறை எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பார்ப்போம்.

அனுதாபம்: குழந்தையின் உணர்வுகளை அங்கீகரிப்பதன் மூலம் பெற்றோர் அனுதாப உணர்வை உருவாக்குகிறார்கள். இது குழந்தையின் உணர்ச்சி நிலையை பெற்றோர் அறிந்திருப்பதைக் குறிக்கிறது.

சரியாகப் புரிந்துகொள்ளப்பட்ட உணர்ச்சிகள்: குழந்தைகள் கோபமாக அல்லது வருத்தமாக இருக்கும்போது தவறாகப் புரிந்து கொள்ளப்படுகிறார்கள். மாறாக, இந்த நான்கு வார்த்தைகளை சொல்லும்போது தன்னுடைய உணர்வுகள் சரியாகப் புரிந்து கொள்ளப்பட்டன. தனது உணர்ச்சிகள் இயல்பானவை மற்றும் ஏற்றுக்கொள்ளக் கூடியவை என்பதை குழந்தைகள் அறிந்து கொள்கிறார்கள்.

இணைப்பு: இந்த நான்கு மந்திர வார்த்தைகள் பெற்றோருக்கும் குழந்தைக்கும் இடையேயான ஒரு நல்ல தொடர்பை உருவாக்குகிறது. ‘தங்கள் வருத்தம் மற்றும் கோபத்தை பகிர்ந்துகொள்ள ஆதரவான பெற்றோர் இருக்கின்றனர். தாம் தனியாக இல்லை’ என்ற நிலையை குழந்தைகளுக்கு எடுத்துச் சொல்கிறது, உணர்த்துகிறது.

தாங்கள் புரிந்துகொள்ளப்படுகிறோம் என்று குழந்தைகள் அறிந்து கொள்ளும்போது அவர்களது மனம் அமைதி அடையும். மேற்கொண்டு உரையாடலை வளர்த்த அல்லது வழிகாட்டுதலுக்கு பெற்றோரை அணுகுவதும் நடக்கும்.

மந்திர வார்த்தைகளைப் பேசும் முறை: குழந்தையிடம் பேசும்போது அமைதியான தொனியில் பேசுவது மிகவும் முக்கியம். அவர்களின் கண்களைப் பார்த்து அமைதியான முறையில் இந்த மந்திர வார்த்தைகளை சொல்லும்போதுதான் அது நல்ல பலனைத் தரும்.

இதையும் படியுங்கள்:
‘மோஷன் சிக்னஸ்’ பிரச்னைக்கான காரணங்களும் தீர்வுகளும்!
Four magic words that will change a child's anger!

மேலும், அவர்களது உயரத்திற்கு குனிந்து அல்லது மண்டியிட்டு குழந்தையை தோளில் தட்டித் தந்து அல்லது அணைப்பது போன்ற தொடுதலும் மென்மையான உடல் மொழியும், வாய்மொழி வெளிப்பாட்டை துணையாக கொண்டு செயல்பட உதவும்.

கவனமாகக் கேட்டல்: தம் குழந்தைகள் என்ன சொல்ல வருகிறார்கள் என்பதை முழு கவனத்துடன் பெற்றோர் கேட்பது மிகவும் முக்கியம். எத்தனை வேலை இருந்தாலும் அவர்கள் பேசுவதை நேரம் ஒதுக்கிக் கேட்டால் மட்டுமே அது நல்ல பலனைத் தரும்.

தீர்வுகளுக்கான வழிகாட்டுதல்: குழந்தையின் உணர்ச்சிகளை வெளிப்பட வைத்த பிறகு அவர்களது பிரச்னைக்கான அல்லது கோபத்திற்கான காரணம் என்ன என்பதைக் கண்டறிந்து அதற்கான சரியான தீர்வுகளை வழங்குவதும் முக்கியம்.

எனவே, ‘நான் உன்னை புரிந்து கொள்கிறேன்’ என்கிற மந்திர வார்த்தைகள் பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் இடையே ஒரு பாலமாக செயல்படும். முக்கியமாக, அவர்கள் கோபமோ அல்லது ஆத்திரமோ வருத்தமோ படும் நேரங்களில் இது ஒரு அதிசயமான மந்திர சக்தி போல செயல்படும் என்பது உண்மை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com