

பலரும் செய்யும் பல்வேறு உலக சாதனைகள் புதிய கின்னஸ் சாதனைகளாக ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. அப்படி ஏற்றுக்கொண்ட சுவாரஸ்யமான சில கின்னஸ் உலக சாதனைகள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
100 வயதில் திருமணம்: கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்த திருமண ஜோடி அமெரிக்காவின் பிலடெல்பியா நகரை சேர்ந்த 100 வயதான பெர்னி லிட்மேன் என்பவர் 102 வயதான மார்ஜோரி பிடர்மேன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் பிலடெல்பியாவில் உள்ள ஒரு மூத்த குடிமகன்கள் வாழும் குடியிருப்பு பகுதியில் வாழ்ந்து வந்துள்ளனர். அங்கு 9 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு விருந்தில் இருவரும் சந்தித்துக் கொண்டனர்.
அப்போது அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டு காதல் மலர்ந்தது. 9 ஆண்டுகளாக காதலித்து வந்த அவர்கள் கடந்த 2024ம் ஆண்டு மே மாதம் 19ந் தேதி திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமணத்தின்போது பொனியின் மற்றும் மாஜோரி பிடர்மேனின் நான்கு தலைமுறையைச் சேர்ந்த குடும்பத்தினர் கலந்துக்கொண்டனர். தற்போது இவர்களின் திருமணம் உலகில் மிக வயதான திருமண ஜோடி என்று கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
21 வாரத்தில் 280 கிராம் எடையில் பிறந்த குழந்தை: அமெரிக்காவின் லோவா மாகாணத்தில் 21 வாரங்களில் மிகக் குறைந்த எடையுடன் பிறந்த குழந்தை, உலகிலேயே மிகக் குறைந்த நாட்களில் குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தை என்ற கின்னஸ் சாதனையுடன் தனது முதல் பிறந்த நாளைக் கொண்டாடியிருக்கிறது. கடந்த 2024ம் ஆண்டு ஜூலை 5ம் தேதி 21 வாரங்களில், அதாவது பிரசவ தேதிக்கு 133 நாள்கள் முன்னதாக, வெறும் 283 கிராம் உடல் எடையுடன் பிறந்த குழந்தை நாஷ் கீன், கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் லோவா அருகே அன்கெனியைச் சேர்ந்த நாஷ் கீன் என்று பெயரிடப்பட்டிருக்கும், இந்தக் குழந்தைதான் உலகிலேயே மிகக் குறைந்த வாரங்களில், அதாவது குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தையாகக் கண்டறியப்பட்டுள்ளார். 2024ம் ஆண்டு ஜூலை மாதம், கருவுற்று 20வது வாரம் மருத்துவப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு வந்தபோதுதான், கருப்பை வாய் திறந்து, குழந்தை பிறக்கத் தயாராக இருந்ததை மருத்துவர்கள் கண்டறிந்தனர். உடனடியாக குழந்தை பிரசவிக்கப்பட்டுள்ளது. வெறும் 147 நாட்களில் பிறந்து, நாஷ் கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துவிட்டார். குழந்தை தனது தாயின் கருப்பையை விட அதிக நாட்கள் இன்குபேட்டரில் வைக்கப்பட்டிருந்தது.
உலகின் அதிக கிரெடிட் கார்டுகள் வைத்துள்ளவர்: கடன் அட்டை என்பது கடனாக பொருட்களை வாங்கவும் பல்வேறு கட்டணங்களை செலுத்தவும் மட்டுமே பயன்படும் என நாம் நினைக்கிறோம். ஆனால், வழக்கமான பயன்பாடுகளைத் தாண்டி, பணத்தை மிச்சப்படுத்துவதற்கான ஆதாரமாகவும் அவற்றைப் பயன்படுத்தி வருகிறார். அவரிடம் மொத்தம் 1,638 கடன் அட்டைகள் உள்ளன. அவர்தான் ஹைதராபாத்தை சேர்ந்த மனீஷ் தமேஜா. கிரெடிட் கார்டுகள் கடன் வாங்கும் கருவி அல்ல என்றும் அதை புத்திசாலித்தனமாகப் பயன்படுத்தினால் அதிக சலுகைகளையும் தரும் ஒரு நிதி சாதனம் என்பதை அவர் உலகிற்கே நிரூபித்து காட்டியுள்ளார்.
எந்த ஒரு கடனும் இல்லாமல் வெகுமதி புள்ளிகள், கேஷ்பேக், பயணச் சலுகைகள் மற்றும் ஓட்டல் சலுகைகளை அதிகரிக்க இந்த கடன் அட்டைகளை அவர் பயன்படுத்தி வருகிறார். எந்த ஒரு கடன் அட்டையிலும் அவருக்குக் கடன் இல்லை. அதிக கடன் அட்டைகளை வைத்திருப்பதற்காக மணிஷ் கடந்த 2021, ஏப்ரல் 30ம் தேதி கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தார்.
கின்னஸ் சாதனை படைத்த தங்க உடை: நாம் நமது வாழ்நாட்களில் எவ்வளவு உடைகளை உடுத்தியிருப்போம். ஆனால், தங்கத்திலான உடையை யாரும் அணிவதற்கு வாய்ப்புகள் கிடைத்திருக்காது. அதுவும் 10 கிலோ எடையில். இந்த ஆடையை சவுதி அரேபியாவை சேர்ந்த நகை வியாபாரியான அல் ரோமைசான் கோல்ட் அண்ட் ஜுவல்லரி நிறுவனம் வடிவமைத்துள்ளது. ‘துபாய் டிரஸ்’ என்று பெயரிடப்பட்ட இந்த ஆடை, ஷார்ஜாவில் 2024 செப்டம்பர் மாதம் நடைபெற்ற வாட்ச் அண்ட் ஜுவல்லரி எக்ஸ்போவில் காட்சிப்படுத்தபட்டது. 21 காரட் தங்கத்தில் இருந்து தயாரிக்கப்பட்ட இந்த உடை, 10.0812 கிலோ கிராம் எடை கொண்டது. இதன் கணக்கிடப்பட்ட மதிப்பு சுமார் 4.6 மில்லியன் திர்ஹாம் (11 கோடி ரூபாய்) ஆகும்.
இந்த உடை நான்கு முக்கியக் கூறுகளைக் கொண்டுள்ளது. 398 கிராம் எடையுள்ள தங்க தலைப்பாகை, 8,810.60 கிராம் எடையுள்ள சிறப்பு நெக்லஸ், 134.1 கிராம் எடையுள்ள காதணிகள், 738.5 கிராம் தங்கத் துண்டு ஆகியவற்றைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு கூறும் நுட்பமான கைவினை மற்றும் விலைமதிப்பற்ற ரத்தினக் கற்களால் இந்த உடை அலங்கரிக்கப்பட்டுள்ளது.