
நட்பு என்பது இருவருக்கு அல்லது பலருக்கு இடையில் ஏற்படும் ஒரு அற்புதமான பாசப்பிணைப்பு, இதில் வயது, மொழி, இனம், நாடு போன்ற வேறுபாடுகள் கிடையாது. இது முற்றிலும் ஒருவரையொருவர் புரிந்து கொள்வதையும், அனுசரிப்பதையும் அடிப்படையாகக் கொண்டது.
திருவள்ளுவர் நட்பைப் பற்றி “செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல் வினைக்கரிய யாவுள காப்பு" என்ற குறளில், நட்புக்கொள்வதுபோல் அரிய செயல் வேறு இல்லை, நட்பே ஒருவருக்கு சிறந்த பாதுகாப்பு ஆகும் என்று அழகாக கூறி இருக்கிறார்.
நட்பு என்பது முகம் பார்த்து பழகுவதல்ல, உதட்டிலிருந்து பேசும் பேச்சுக்களால் நீடிப்பதல்ல, உள்ளத்தில் இருந்து வரும் ஆழமான அன்பான வார்த்தைகளால் நீடிப்பது.
சிலபேருக்கு உற்ற நண்பர்களாக சிறு வயதில் இருந்து ஒன்றாக படித்து வளர்ந்தவர்கள் இருப்பார்கள். இவர்கள் எப்போதும் எங்கு சென்றாலும் ஒரு குழுவாகத்தான் செல்வார்கள். பள்ளி, கல்லூரி என எல்லா இடங்களிலும் ஒன்றாக சேர்ந்துதான் செல்வார்கள். இன்னும் சொல்லப் போனால் ஓரே ஆபீஸிலோ அல்லது ஓரே area வில் இருக்கும் ஆபிஸில்தான் இவர்கள் பணிபுரியவும் முயற்சிப்பார்கள்.
இன்னும் சிலபேருக்கு பருவகாலத்தில்தான் உற்ற நண்பர்கள் கிடைப்பார்கள்.
சரி, இந்த நட்பு என்ன வெறும் பேசுவதற்கும், ஊர் சுற்றுவதற்கும் தானா? இல்லை...ஒரு மனிதன் தன்னுடைய நண்பனிடம், சுக துக்கங்களை எப்போது வேண்டுமானாலும் பகிரலாம். எல்லாவற்றையும் பகிருவதற்கு ஏற்ற துணை நண்பன்தான். நண்பனிடம் மனதில் இருக்கும் பாரத்தை கொட்டி தீர்க்கலாம். சந்தோஷத்தில் நம்முடன் சிரித்து துக்கத்தில் அழுபவன் தான் நம் நணபன்.
“உயிர் காப்பான் தோழன்” என்ற வசனத்தை நாம் எல்லோரும் அறிவோம். நமக்கு உரிய நேரத்தில் கை கொடுத்து உதவுவதுதான் உண்மையான நட்பு. நாம் மிகவும் துயரத்தில் இருக்கும்போது “ ஒண்ணும் ஆகாதுடா, நான் இருக்கேன்” என்று நம் நண்பன் ஆறுதல் கூறும்போது நமக்கு போன உயிர் திரும்பவும் புத்துயிர் பெற்று வந்தது போல் இருக்கும்.
நாம் தவறான பாதையில் சென்றாலோ அல்லது தவறான காரியத்தை செய்தாலோ அதை கவனித்து எடுத்துரைப்பவன் நம் நண்பன்தான். அப்படி அவன் எடுத்துரைத்தும் நாம் தவறை செய்து மாட்டிக் கொண்டாலும் நம்மை காப்பாற்ற நண்பன் தயங்க மாட்டான். ஆகவே நமக்கு ஒரு அற்புதமான மருந்தைபோல் திகழ்பவன் நண்பனும், நம்முடைய நட்பும் என்று சொன்னால் மிகையாகாது.
அதே சமயம் நம்மிடம் நட்பில் இருப்பவர் நல்லவராக இருக்க வேண்டும். நல்ல நண்பர்களோடு மிகச்சிறந்த வலுவான நட்பை பேணுதல் மிக அவசியம்.
நட்பு கொண்டிருக்கும் நணபன் ஏன்ற பெயரில் கெட்டவராக இருந்தால் அந்த நட்பிறகு மதிப்பில்லை, பிரயோஜனமும் இல்லை. நீங்கள் இன்னும் சிக்கலில்தான் மாட்டிக்கொள்வீர்கள்.
உடல்நிலை சரி இல்லை என்றால் சரியான நல்ல டாக்டரிடம் சென்று சிகிச்சை எடுத்துக் கொண்டால்தானே குணமாகும். ஏமாற்றுபவரிடம் சென்றால் என்ன ஆகும்? உடல் நிலை இன்னும் மோசமாகிவிடும், இல்லையா??
ஆகவே, நண்பர்களை தேர்ந்தெடுக்கும்போது மிக கவனத்தோடு இருக்க வேண்டும். நல்ல நண்பரை தேர்ந்தெடுத்தால் மட்டும் போதாது. தேவைப்படும்போது மட்டும் நட்பு வைப்பது, தேவை இல்லாத நேரத்தில் கண்டு கொள்ளாமல் இருப்பது என்று இருக்கக்கூடாது. அவரோடு சேர்ந்து சிறந்த நட்பை எப்போதும் ஓரே நிலையில் சீராக வைத்துகொள்ள வேண்டும். அப்போதுதான் அந்த நட்பும், நண்பனும் சேர்ந்து உங்களுக்கு சிறப்பு மருந்தாக அமையும்.