
நண்பர்கள் என்றால் நம்முடன் படிப்பவர்களா? இல்லை. தற்போதைய காலங்களில் பெற்றோர்கள், ஆசிரியர்களே நண்பர்கள் போல் இருக்க வேண்டும் என மனநல மருத்துவர்கள் அறிவுரை கூறுகிறார்கள். அந்த அளவிற்கு நட்பு ஒரு உன்னதமான உறவு. நட்பு அன்பின் வெளிப்பாடாகும். நட்பு என்பது ஒரு புனிதமான வார்த்தை. அதை எதோடும் ஒப்பிடமுடியாது. எந்த பிரச்சனை, கஷ்டம், சிரிப்பு, அழுகை என அனைத்திலும் நம்முடன் இருப்பது ஒரு நண்பர் தான்.
இந்த கட்டுரையை படிக்கும் போதே உங்களுக்கு ஒருவர் நினைவுக்கு வருகிறார் என்றால், அவர் தான் உங்கள் வாழ்க்கையின் மிகப்பெரிய சொத்து. யார் உலகிலேயே பெரிய பணக்காரன் என்று தெரியுமா? நிறைய நண்பர்களை வைத்திருப்பவர்கள்தான். உங்களுக்கு பிரச்சனை என்றால் பணம் முதலில் வராது. நண்பர்கள் தான் வருவார்கள். அப்படிப்பட்ட நண்பர்கள் எப்படி வாழ்க்கையில் இருக்க வேண்டும் என்பது குறித்து ஒரு கவிஞர் அழகாக பேசியிருப்பார். அந்த வீடியோ காட்சிகள் தான் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன.
அதில் நண்பர்கள் 9 போல் இருக்க வேண்டும் என்றும், 8 போல் இருக்க கூடாது என்றும் கூறியிருப்பார். ஏனென்றால் 9 என்ற எண்ணுடன் எத்தனை 9ஐ சேர்த்தாலும் விடை கடைசியில் 9 ஆக தான் இருக்கும் என்றும் 8உடன் 8ஐ கூட்டி கொண்டு வந்தால் ஒரு எண் குறைவாகி கொண்டே இருக்கும் என்றும் அழகாக கூறியிருப்பார்.
எத்தனை ஆண்டுகள் பழகினாலும் நண்பர்கள் ஒரே மாதிரி இருக்க வேண்டும். அதுவும் 9 போல் இருக்க வேண்டும் என கூறுகிறார். அதே போல் 9 உடன் எந்த எண்ணை கூட்டினாலும் அதை வாழ வைத்து விட்டு அது மறைந்து போகுமாம். உதாரணத்திற்கு 9 உடன் 4ஐ கூட்டினால் - 13 வரும். கூட்டினால் 4 வந்துவிடும் 9 மறைந்துவிடும். இதே போன்று நண்பர்கள் பிறரை வாழ வைத்துவிட வேண்டும் என கூறுகிறார். ஆரம்ப நாளில் ஒரு நட்பு எப்படி தொடங்கியதோ, அது ஆயுள் காலம் முடியும் வரை தொடரவேண்டும். தேயக்கூடாது என்று எடுத்துக்காட்டை கூறினார். இந்த வீடியோ காட்சி இணையத்தில் பரவி வர, பலரும் தங்களது நண்பர்களை டேக் செய்து வைரலாக்கி வருகின்றனர்.
ஒரு சிறந்த புத்தகம் 100 நல்ல நண்பர்களுக்கு சமம், ஆனால் ஒரு சிறந்த நண்பன் ஒரு நூலகத்திற்கே சமம் என்று சொல்வார்கள். அப்படி ஒரு நண்பன் நம்மை வாழ்கையில் வெகு தூரத்திற்கு கொண்டு செல்வார் என்பதில் எந்த ஐயமும் இல்லை.ச