
குளியலறை ஓடுகள் (Bathroom tiles) குளியலறைக்கு நவீனமான மற்றும் நேர்த்தியான தோற்றத்தை கொடுக்கின்றது. அத்துடன் குளியலறையை சுத்தமாக வைத்திருக்கவும் உதவுகின்றது.
1) பல்வேறு வகையான குளியலறை ஓடுகள்:
குளியலறை ஓடுகள் பீங்கான், பளிங்கு, மொசைக் உள்ளிட்ட பல வகைகளில் வருகின்றன. அவை குளியலறையை அழகாகவும், நீடித்த தன்மையுடனும், தூய்மையாகவும் வைத்திருக்க உதவுகிறது.
பீங்கான் ஓடுகள் (Ceramic): இவை மிகவும் பிரபலமானது. பலவிதமான வண்ணங்களிலும், அளவுகளிலும், வடிவங்களிலும் கிடைக்கின்றது. சற்று விலை குறைவானது மற்றும் பராமரிக்க எளிதானது.
பளிங்கு ஓடுகள் (Marble): பளிங்கு ஓடுகள் குளியலறைக்கு ஆடம்பரமான தோற்றத்தை கொடுக்கின்றன. மேலும் இவை சிறந்த தரத்திலும் வருகின்றன.
போர்சிலின் ஓடுகள் (Porcelain): பீங்கான் ஓடுகளை விட உறுதியானவை மற்றும் நீடித்து உழைக்க கூடியவை. இவை அதிக ஈரப்பதத்தை தாங்கும் திறன் கொண்டவை.
இயற்கை கல் ஓடுகள் (Natural stone tiles): மார்பிள், ஸ்லேட், கிரானைட் போன்ற கற்கள் இதில் அடங்கும். இவை ஒவ்வொன்றும் அதன் தனித்துவமான தோற்றத்தை கொண்டுள்ளது. ஆடம்பரமான தோற்றத்தை தரும் இவை ஈரப்பதத்தை உறிஞ்சும் என்பதால், நீர்புகா பாதுகாப்பு தேவைப்படலாம். பிரீமியம் தோற்றத்தை கொடுக்கும், ஆனால் அதிக பராமரிப்பு தேவைப்படும்.
கண்ணாடி ஓடுகள் (Glass tiles): குளியலறையில் பளபளப்பான மற்றும் நவீன தோற்றத்தைக் கொடுக்கும் இவை சுவர்களுக்கு அழகாக இருக்கும். ஆனால் தரைகளுக்கு இவை அவ்வளவாக பரிந்துரைக்கப்படுவதில்லை.
மொசைக் ஓடுகள் (Mosaic): சிறிய துண்டுகளால் ஆன இவை கவர்ச்சிகரமான வடிவமைப்புகளை உருவாக்க பயன்படுகிறது. சிறுசிறு ஓடுகளைக் கொண்டு அமைக்கப்படுபவை. தரை மற்றும் சுவர்களுக்கு பயன்படுத்த கலை நயத்துடன் கூடிய தோற்றத்தைக் கொடுக்கும்.
வினைல் டைல்ஸ் (Vinyl): பட்ஜெட்டுக்கு ஏற்றது. நீர் எதிர்ப்பு தன்மை கொண்டது. மென்மையானது. ஆனால் நீண்ட காலத்திற்கு அதாவது நீடித்த உழைப்பு இல்லாதது.
2) சிறந்த குளியலறை ஓடுகளை (Bathroom tiles) எவ்வாறு தேர்வு செய்வது:
ஓடுகளை தேர்ந்தெடுக்கும் பொழுது அதன் வடிவமைப்பு மற்றும் நிறத்தை கவனத்தில் கொள்ள வேண்டும். குளியலறையின் அளவிற்கு ஏற்ற ஓடுகளை தேர்வு செய்வது அவசியம். சிறிய பென்னி டைல்ஸ் முதல் பெரிய அளவிலான ஓடுகள் வரை பல தேர்வுகள் உள்ளன.
தரையில் பயன்படுத்தப்படும் ஓடுகளும், சுவரில் பயன்படுத்தப்படும் ஓடுகளும் வெவ்வேறு பண்புகளைக் கொண்டிருக்கும். அவற்றையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
குளியலறைத் தரைகள் ஈரப்பதம் நிறைந்தவை என்பதால் நழுவாத (anti- skid) தன்மை உள்ள வழுக்காத ஓடுகளை தேர்ந்தெடுப்பது பாதுகாப்பிற்கு அவசியம்.
குளியலறையில் பயன்படுத்தப்படும் ஓடுகள் நீர்ப்புகா தன்மையுடன் இருக்க வேண்டும். ஓடுகளை தேர்ந்தெடுக்கும் பொழுது அவற்றை எளிதாக சுத்தம் செய்யக்கூடியவையாக இருக்க வேண்டும் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
சிறிய குளியலறைகளுக்கு சிறிய ஓடுகள் அல்லது மொசைக் ஓடுகள் சிறந்த பிடிப்புத்தன்மை கொண்டவையாக, ஈரமான குளியலறைக்கு ஏற்றதாக இருக்கும். இவை நல்ல சறுக்கல் எதிர்ப்பை வழங்குகின்றன.
நிறம், வடிவமைப்பு மற்றும் மெட்டீரியலை தேர்ந்தெடுக்கும் பொழுது, இடத்தின் அளவு, நம் தனிப்பட்ட ரசனை மற்றும் பராமரிப்புத் தேவைகளை கருத்தில் கொள்ள வேண்டும்.
3) குளியலறை ஓடுகள் வடிவமைப்பு யோசனைகள்:
சிறிய ஓடுகள் அல்லது மொசைக் வடிவமைப்பு ஓடுகள் அதிக எண்ணிக்கையிலான ஓடுகளைக் கொண்டு ஒரு முழுமையான தோற்றத்தை உருவாக்கும்.
பெரிய வடிவமைப்பு ஓடுகள் நவீன மற்றும் நேர்த்தியான தோற்றத்தை அளிக்கும். சிறிய குளியலறைகளில் இடத்தை பெரிதாகக் காட்டும்.
பிரகாசமான வெள்ளை, கருப்பு, நீலம், சாம்பல் அல்லது பழுப்பு போன்ற நிறங்கள் குளியலறையை விசாலமாகக் காட்டும்.
குளியலறைக்கு தனித்துவமான தோற்றத்தை வழங்க சுவரில் ஒரு அம்ச சுவரை(feature wall) உருவாக்கலாம். வெவ்வேறு வண்ணங்கள் மற்றும் வடிவங்களை இணைக்கலாம் அல்லது மரத்தோற்றம் கொண்ட ஓடுகளை பயன்படுத்தலாம்.
மரத்தோற்றம் கொண்ட ஓடுகள் இயற்கையான தோற்றத்தை அளிக்கின்றன. மேலும் இவை நீடித்ததாகவும், பராமரிக்க எளிதாகவும் இருக்கும்.
மெருகூட்டப்பட்ட ஓடுகள் ஒளியை பிரதிபலித்து, இடத்தை பிரகாசமாக மாற்றும். மேட் ஓடுகள் ஒரு மென்மையான தோற்றத்தை கொடுக்கும்.
டெர்ராசோ டைல்ஸ் பல வண்ணங்கள் மற்றும் வடிவங்களைக் கொண்டுள்ளன. இவை நம் குளியல் அறைக்கு ஒரு நவீன மற்றும் தனித்துவமான தோற்றத்தைக் கொடுக்கும்.
4) குளியலறை ஓடுகளின் விலை மற்றும் பராமரிப்பு:
குளியலறை ஓடுகளின் விலை அவற்றின் வகை, தரம் மற்றும் வடிவமைப்பு ஆகியவற்றைப் பொறுத்து விலையும் வேறுபடும். ஒரு சதுர அடிக்கு 35 ரூபாய் முதல் 368 ரூபாய் வரை இருக்கலாம். மேலும் நிறுவல் செலவு, பெரிய ஓடுகள் மற்றும் சிக்கலான வடிவமைப்புகளுக்கு அதிகமாக இருக்கும். விலை மலிவான செராமிக் ஓடுகள் முதல் பளிங்கு போன்ற விலையுயர்ந்த ஓடுகள் வரை உள்ளன.
பராமரிப்பு குறிப்புகள்:
பீங்கான் மற்றும் செராமிக் ஓடுகள் பராமரிக்க மிகவும் எளிதானவை. இவற்றை சுத்தம் செய்ய வெதுவெதுப்பான நீர் மற்றும் லேசான சோப்பு கலந்த கரைசலை பயன்படுத்தலாம்.
கடினமான ரசாயனங்களைக் கொண்டு சுத்தம் செய்வதை தவிர்க்கவும். அமில அல்லது காரத் தன்மை வாய்ந்த சுத்திகரிப்புப் பொருட்களை குறிப்பாக பளிங்கு ஓடுகளுக்கு பயன்படுத்துவதை தவிர்க்கவும்.
ஓடுகளின் தரம் மற்றும் வகைக்கேற்ப சுத்தம் செய்யும் வழிமுறைகளை பின்பற்றவும். ஷாம்பூ, சோப்பு கறைகளைத் தடுக்க குளியலறையை பயன்படுத்திப் பிறகு முடிந்தவரை நன்கு உலர வைக்கவும்.
ஓடுகளுக்கு சேதம் ஏற்படாமல் இருப்பதற்கு மென்மையான துடைப்பம் அல்லது பிரஷை பயன்படுத்தி சுத்தம் செய்யவும்.
ஓடுகளின் ஆயுளை நீட்டிக்க குளியலறையை முடிந்தவரை சுத்தமாகவும், உலர்வாகவும், கறை படியாமலும் வைத்திருக்க வேண்டியது அவசியம்.
குளியலறையில் போதுமான காற்று சுழற்சி இருப்பதை உறுதி செய்யவும். இது பூஞ்சை, பாக்டீரியாக்கள் மற்றும் நுண்ணுயிரிகள் வளர்வதைக் குறைத்து ஓடுகளை பாதுகாக்கும்.
ஓடுகள் இடையே கூழ்மம் (Grout) சரியாக பயன்படுத்தப்பட வேண்டும். இது ஓடுகளின் நேர்த்தியை பராமரிக்க உதவும்.
ஓடுகளை நிறுவும்பொழுது சமமான மேற்பரப்புகள் அமைக்கப்பட வேண்டும். அதற்கு ஓடுகள் பொருத்துவதில் நிபுணத்துவம் வாய்ந்த தொழில்முறை ஓடு நிறுவிகளை பயன்படுத்துவது, நேர்த்தியை பராமரிக்கவும், சரியான கூழ்மத்தை பயன்படுத்தவும் உதவும்.