கேஸ் செலவை மிச்சப்படுத்தும் கோட்டை அடுப்பு, கொடி அடுப்பு, குமுட்டி அடுப்பு!

மண் அடுப்பு
மண் அடுப்பு
Published on

கேஸ் செலவை மிச்சப்படுத்தும் புகையில்லா அடுப்பு ராக்கெட் அடுப்பு. சிறிய விட்டம் கொண்ட மர எரிபொருளைப் பயன்படுத்தி எரியும் அடுப்பு. பாரம்பரிய அடுப்புகளுடன் ஒப்பிடும்போது ராக்கெட் அடுப்புகளில் 20 முதல் 35 சதவிகிதம் குறைவான எரிபொருளே பயன்படுகிறது. நாங்கள் சிறுவர்களாக இருக்கும்பொழுது எங்கள் அம்மா குமுட்டி அடுப்பில்தான் பருப்பு வேக வைப்பது, பால் காய்ச்சுவது என்று செய்வார்கள்.

திருமணம் ஆனவுடன் கணவர் வீட்டிலோ கேஸ் அடுப்பு. இருந்தாலும் தினம் தினம் குமுட்டி அடுப்பை மூட்டி பால் காய்ச்சுவது, இட்லி பானையில் இட்லி வேக விடுவது, வெந்நீர் போடுவது என்றும், சிராத்த தினங்களில் மடி சமையலுக்கும் பயன்படுத்துவார்கள். இந்த அடுப்பு கரி பிடித்து எரியும் வரை நம் கையில் விசிறியை கொடுத்து வீச சொல்வார்கள்‌. முதலில் எல்லாம் குமுட்டி அடுப்பை பற்ற வைக்கத் தெரியாமல் விழி பிதுங்கி மாமியாரின் ஒத்துழைப்புடன் அதில் சமைக்கும் வண்ணம் தேர்ச்சி பெற்றது தனிக் கதை.

‘முதலில் கொல்லைப்புறம் (பின்புறம்) போய் குமுட்டி அடுப்பை பத்த வைத்து எடுத்து வா’ என்று சொல்லும்பொழுது மலைப்பாக இருக்கும். பிறகு பழகப் பழக சுலபமாகி விட்டது.

குமுட்டி அடுப்பு மண், இரும்பு என இரண்டு வகைகளில் செய்யப்பட்டது. மேல் பாகம் பாத்திரம் வைப்பது போல் வடிவமைக்கப்பட்டிருக்கும். இதன் நடுப்பகுதியில் சல்லடை போல் இருக்கும் பகுதியில் மரக்கரித் துண்டுகள், உமி போட்டு பற்ற வைக்க வேண்டும். கரியும் உமியும் எரிய எரிய அதன் சாம்பல் சல்லடை வழியாக கீழ் இறங்கி விடும். அந்தக் காலத்தில் விறகு அடுப்புதான் பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டது. மழைக்காலத்தில் அவை நனைந்து விட்டாலோ, விறகு கிடைக்கவில்லை என்றாலோ இந்த கரி அடுப்பை பயன்படுத்தினர்.

குமுட்டி அடுப்பு
குமுட்டி அடுப்பு

எங்கள் அம்மாவாவது பருப்பு வேக, பால் காய்ச்சல் மட்டும்தான் பயன்படுத்தினார்கள். மாமியார் வீட்டிலோ கேஸ் இருந்தும் தினம் தினம் அதில்தான் பெரும்பாலான சமையல் நடைபெறும். காரணம், கேஸை மிச்சப்படுத்தத்தான்! இன்று கேஸ் விற்கும் விலைக்கு பேசாமல் மாமியார் வழியையே பின்பற்றலாமா என்றுகூடத் தோன்றுகிறது! வருமானத்தின் ஒரு பகுதியை கேஸ் தின்று விடுவதால் மீண்டும் கிராமப்புறங்களில் மண்ணடுப்புகளைப் பயன்படுத்தத் தொடங்கி விட்டார்களாம்.

கிராமங்களில் சோலார் அடுப்பு, சாண எரிவாயு அடுப்பு போன்றவையும் பயன்பாட்டில் உள்ளன. கடையநல்லூர் அக்ரஹாரத்தில் எங்கள் சித்தி வீட்டில் இன்னும் சாண‌ எரிவாயு அடுப்புதான் சமைக்கப் பயன்படுகிறது.

இதையும் படியுங்கள்:
உடல் பலவீனத்தைப் போக்கும் தண்ணீர்விட்டான் கிழங்கு!
மண் அடுப்பு

முன்பெல்லாம் சமையல் கட்டு என்பது வீட்டில் இருந்து சற்று உள்தள்ளியே அமைக்கப்பட்டு இருக்கும். ஆனால், நாம் இருக்கும் பிளாட்களில் அதற்கெல்லாம் இடம் ஏது? மண் அடுப்பு, மண்ணெண்ணெய் திரி அடுப்பு, பம்ப் ஸ்டவ்,கேஸ் அடுப்பு என்று அடுத்தடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்த பிறகு, ‘மீண்டும் முதலில் இருந்தா’ என்ற மலைப்பே ஏற்படுகிறது. என்ன செய்ய?! கேஸ் விலை இப்படி ராக்கெட் வேகத்தில் ஏறினால் பழைய நிலைக்குதான் திரும்ப வேண்டும் போலும்!

மண் அடுப்புகளில் ஒற்றை அடுப்பு, இரண்டு பாத்திரங்களை வைத்து சமைக்கும் வகையில் கொடி அடுப்பு, பல பாத்திரங்களை வைத்து ஒரே நேரத்தில் சமைக்கும் வகையான கோட்டை அடுப்பு என்று பல வகைகள் உண்டு. இன்றைய தலைமுறையினர் இனி இதையும் பழகிக்கொள்ள வேண்டும்தான் போலும்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com