
செய்யும் வேலையை எளிமையாகவும், சுறுசுறுப்பாகவும், விரைவாகவும் செய்ய வைப்பதற்கு அவசியம் தேவையானது டிப்ஸ். அப்படி வீட்டிற்கு தேவையான பொதுவான டிப்ஸ் இதோ:
ஃப்ரீசரில் வைத்த பாலை எடுத்து காய்ச்சும் பொழுது அப்படியே காய்ச்சினால் அடி பிடித்துவிடும். அதற்கு பால் காய்ச்சும் பாத்திரத்தில் சிறிது தண்ணீரை முதலில் கொதிக்க வைத்து, பிறகு அதனுடன் பாலை ஊற்றி காய்ச்சினால் அடி பிடிக்காது. பால் பாத்திரத்தின் உள்ளே ஒரு கரண்டியை போட்டு வைத்தாலும் கொதித்து பால் வெளியே கொட்டாது.
மல்லிகை மொட்டுகளை நீரில் போட்டு பிறகு கட்டினால் அதிகநேரம் பூ விரியாமல் இருக்கும்.
தக்காளி மலிவாக கிடைக்கும் பொழுது புளிக்கு பதில் தக்காளி பழம் போட்டு காரக்குழம்பு வைத்தால் மிகவும் ருசியாக இருக்கும்.
வெந்தய குழம்பு வைக்கும் பொழுது ஒரு ஸ்பூன் இட்லி மிளகாய் பொடி போட்டு கொதிக்க வைத்து இறக்கினால் நல்ல திக்காகவும் சுவையாகவும் இருக்கும்.
கீரை பொரியல் செய்யும்பொழுது சிறிது சர்க்கரை சேர்த்து செய்து உடனே வேறு பாத்திரத்தில் மாற்றி வைத்துவிட்டால் நிறம் மாறாமல் இருக்கும்.
இளம் கறிவேப்பிலையில்தான் மணம் அதிகமாக இருக்கும். அது நன்றாக உணவுடன் சேர்ந்து வெந்தும்விடும். ஆதலால் அதை உணவில் சேர்த்தால் தனியாக எடுத்து வைக்காமல் சாப்பிட்டு விடுவார்கள். சத்தும் அப்படியே உடம்பில் சேரும். முற்றிய இலையை தேங்காயுடன் லேசாக அரைத்து சேர்த்தால் தனியாக எடுத்து வைக்காமல் சாப்பிடுவார்கள்.
இப்பொழுதெல்லாம் கடலை, எள், தேங்காய் போன்றவற்றை வாங்கி செக்கில் ஆட்டி பயன் படுத்துபவர்கள் உண்டு. அப்படி ஆட்டும் எண்ணெய்களை வேறு பாத்திரத்தில் மாற்றி அடியில் கசடு தங்காமல் நன்றாக வெயிலில் காயவைத்து எடுத்து வைத்து விட்டால் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும்.
பிரஷர் குக்கர் கைப்பிடியில் உள்ள ஆணியில் அவ்வப்போது எண்ணெய் போட்டு வந்தால் துருபிடிக்காமல் இருக்கும். அதேபோல் சேப்டி வால்வையும் அடிக்கடி செக்கப் செய்து கொள்வது நல்லது.. குக்கர் வெயிட்டை நன்றாக கழுவி அதன் உட்புறத்தில் சாதம், பருப்பு போன்றவை இல்லாதவாறு கவனமுடன் பார்த்து கையாளுவது அவசியம்.
வெள்ளரிக்காயை அரைத்து முகத்தில் பூசி வந்தால் கட்டிகள் ஏதாவது இருந்தாலும் மறைந்து முகம் பொலிவு பெறும். வேர்க்குரு வேணல் கட்டிகளும் வராது.
காய்ந்துபோன எலுமிச்சையை கொதிக்க வைத்து வடிகட்டி அந்த தண்ணீரில் பெட்ஷீட், துணிகளை ஊறவைத்து அலசினால் கறைகள் இருந்தாலும் போய்விடும். துணிகளும் வாசனையாக இருக்கும்.
ஃபிரிட்ஜின் சுவிட்சை ஆப் செய்து உடனேயே மீண்டும் போட்டால் கம்ப்ரஸர் பாதிக்கும். ஆதலால் சிறிது நேரம் கழித்து போடவும்.
மிக்ஸி ஓடிக்கொண்டிருக்கும் பொழுது பவர் கட் ஆனால் மறக்காமல் ஸ்விட்ச் ஆப் செய்து ஜாரை கீழே எடுத்து வைத்து விடுங்கள். இது பலவிதமான ஆபத்துகளை தடுக்கும்.
நல்ல கூலிங் வேண்டும் என்பதற்காக ஏ.சி ஓடிக் கொண்டிருக்கும்போதே ஃபேனை போடாதீர்கள் .ஃபேன் காற்று ஏ.சி காற்றை திசை திருப்பிவிடும். சரியான ஃப்ளோ கிடைக்காது. அப்படியே போட்டாலும் சிறிது நேரத்திற்குள் ஃபேனை நிறுத்தி விடுங்கள்.