ஒரு தலைமுறை என்பது முப்பது ஆண்டுகளை உள்ளடக்கியதாக கூறப்படுகிறது. தலைமுறை இடைவெளி என்பது வெவ்வேறு தலை முறைகளைச் சேர்ந்தோரிடையே, சமூக மற்றும் தனிமனித, வாழ்வின் நன்மதிப்புகளில் காணக்கூடிய கருத்து வேறுபாட்டைக் குறிக்கிறது. பொதுவாக இவ்வேறுபாடுகள் இளையோருக்கும், அவர்களது பெற்றோர் அல்லது அதற்கு முந்திய தலைமுறையினருக்கும் இடையே ஏற்படுகிறது.
தற்கால இளைஞர்கள், தமது பெற்றோர்கள் இதுவரை நம்பிக்கை வைத்திருந்த பல விழுமங்களுக்கு எதிரான கருத்துக்களை மேற்கொள்ள தொடங்கி விட்ட சூழல் உலகமெங்கும் காணப்படுகிறது. அறிவுப்பெருக்கமும், மக்கள்தொகைப் பெருக்கமும் மக்களின் அன்றாட வாழ்வில் பல மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றன. இது தவிர்க்க முடியாத ஒன்று. தலைமுறை இடைவெளி குறித்த சமூகவியல் கோட்பாடு முதன்முதலாக 1960களில் ஆராய்ச்சிக்குரிய கருத்தாக மக்களின் கவனத்துக்கு வந்தது.
சமூகவியலாளர்கள் மனிதனின் வாழ்க்கைக் காலத்தை, சிறுபிராயம், நடுவயது, ஓய்வுக்காலம் என மூன்று பகுதிகளாகப் பிரிக்கின்றனர். இதில் ஏதாவதொரு பிரிவினர் தமது செயற்பாடுகளில் மற்ற இரு பிரிவினரிடமிருந்து வேறுபட்டு செயற்படுவது தலைமுறை இடைவெளியின் தொடக்கமாகும்.
தலைமுறை இடைவெளியின் விளைவாக குடும்பங்களில் பெரியோர், சிறியோரிடையே சரியான புரிதலின்மை, தவறுகளை பொறுத்துக் கொள்ளும் மனப்பக்குவமின்மை, குழந்தைகளைப்பற்றி பெரியவர்கள் தானாகவே எடுத்துக் கொள்ளும் தேவையற்ற கனவுகள் அதைத் தொடர்ந்து வரும் ஏமாற்றங்கள், குடும்ப உறுப்பினர்களிடையே தேவையற்ற ஒப்பீடுகள், கலந்து பேச போதுமான நேரத்தினை ஒதுக்காமல் தானே பெரியவன் என ஒவ்வொருவரும் இறங்கி வந்து மனம்விட்டு பேசத்தவறுதல் அல்லது நீண்ட நாள் மவுனம் காத்தல், தனிக் குடும்ப வாழ்க்கை முறை முதலானவை குடும்பத்தில் தொடங்கி தொடர்ந்து சமூக பிரச்சனைகளாக மாறுகின்றன.
தலைமுறை இடைவெளி உண்ணும் உணவு, உடுத்தும் உடை, பழக்கவழக்கங்கள், அவ்வப்பொழுது வரும் திருவிழாக்களையும் வீட்டு பண்டிகைகளையும் கொண்டாடும் முறைகள், பெரியவர்களை மதித்தல், பெரியவர்களின் வழிகாட்டுதலை நாடுதல், தெய்வ வழிபாடு, சமய சடங்குகளில் ஈடுபடுதல், தனிநபர் உறவுகள் போன்ற எல்லாவற்றிலும் எதிரொலிக்கிறது.
தகவல் தொழில் நுட்ப முறையில் போதுமான கல்வியறிவும் செயல் அறிவும் இல்லாத ஒரே காரணத்தால் தற்கால முதியவர்கள் தலைமுறை இடைவெளி என்ற பெயரில் ஓரங்கட்டப்படுகிறார்கள். குடும்பங்களில் எடுக்கப்படும் முக்கியமான முடிவுகளில் அவர்களுடைய பங்கு குறைவாகத்தான் இருக்கிறது. அனுபவ அறிவும் ஒவ்வொரு தனிமனித வாழ்க்கைக்கும் முன்னேற்றத்திற்கும் மிகவும் தேவையானது என்பதை இன்றைய இளைஞர்கள் உணர வேண்டும்.
ஒரு குடும்பம் ஒரு வாரிசு என்ற அடிப்படையில் குடும்பங்கள் உருவாகத் தொடங்கி விட்டன. பல உறவு முறைகள் வார்த்தையில் உள்ளன. ஆனால் வழக்கத்தில் இல்லை. பெருகிவரும் இந்த தலைமுறை இடைவெளியை குறைப்பதற்கு இருசாராரும் முயற்சி எடுக்க வேண்டும். பணமே வாழ்க்கை என்பதை மறந்து உறவுகளும் முக்கியம் என்பதை உணர வேண்டும்.
முந்தைய தலைமுறையினரும் தம்கருத்துக்களை இளம் தலைமுறையினர் மீது திணிக்காமல் அவர்களுக்கு தேவையான சுதந்திரத்தைக் கொடுத்து அவர்களே தம் வாழ்வின் பல்வேறு முக்கியமான முடிவுகளை எடுத்துக் கொள்ள வழிகாட்டியாக இருக்க வேண்டும்.
முயற்சிகள் இரு சாரார் பக்கத்திலிருந்தும் தொடங்க வேண்டும். வாழ்க்கையில் சமரசம் என்பது ஒரு முக்கியமான கோட்பாடு. பெரியவர்கள் எதிர்பார்ப்புகளை குறைத்துக்கொள்ள வேண்டும். இளைய தலைமுறை ஆசைகளை அளவுடன் வைத்துக்கொண்டு திட்டமிட்டு எளிமையாக வாழ பெரியோரின் ஆலோசனைகளை அவ்வப்பொழுது பெறவேண்டும். தம்முடைய குழந்தைகளுக்கு உறவுகளின் இணைப்புகளை பலப்படுத்த அவ்வப்பொழுது நடைபெறும் திருமணம் போன்ற வீட்டு நிகழ்வுகளை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
தனியே வாழ்ந்து தனியே மறைய வாழ்க்கை நமக்கு கற்றுத் தரவில்லை. குடும்பத்தில் தொடங்கி சமூகம் வரை ஒரு தொலைநோக்குப் பார்வையும் பரந்த சிந்தனையும் இருக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். ஒரு சமுதாயத்தில் ஒவ்வொரு தனிமனிதனும் முக்கியமானவர்கள். தனித்தனி ஆற்றல் பெற்றவர்கள். மதிக்கப்பட வேண்டியவர்கள். எனவே அவர்களின் திறமைகளை அங்கீகாரம் செய்து அரவணைத்துச் செல்லும் மனப்போக்கினை நாம் அனைவரும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.இந்த அணுகுமுறை தலைமுறை இடைவெளியை கனிசமாக குறைக்கும் என திடமாக நம்பலாம்.
தனிமனிதர் வாழ்க்கையிலும் சமூகத்திலும் பிணக்குகள் ஏற்படுவதை தவிர்க்க முடியாது. ஆனால் தனி மனித முயற்யினால் குறைக்க முடியும். இதன் விளைவாக நாம் அனைவரும் மகிழ்ச்சியாக வாழமுடியும். எனவே தவிர்க்கமுடியாது எனக் கருதப்படும் தலைமுறை இடைவெளியை ஓரளவாவது குறைக்க முயல்வது நம் ஒவ்வொருவரது கடமையாகும். அனைவருக்கும் இன்பத்தைத் தரும் அந்தப் மனப்போக்கும், அவாவும் நம் ஒவ்வொருவரிடமிருந்தும் தொடங்க வேண்டும். இது ஒரு கூட்டு முயற்சியேயாகும். அதற்கான முயற்சியை இன்றே நம்மிடமிருந்து தொடங்கலாமே.